Published:Updated:

பசியில் வாடும் ஏமன் குழந்தைகளும் சவுதி அரேபியா-அமெரிக்க உறவும்! #VikatanInfographics

பசியில் வாடும் ஏமன் குழந்தைகளும் சவுதி அரேபியா-அமெரிக்க உறவும்! #VikatanInfographics
பசியில் வாடும் ஏமன் குழந்தைகளும் சவுதி அரேபியா-அமெரிக்க உறவும்! #VikatanInfographics

ஏமன் போரில் ஈடுபடுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை. இத் தீர்மானம் உடனடியாக அமெரிக்க அரசின் தலையீட்டை நிறுத்தாது என்றபோதிலும் ஒரு சிறிய அளவிலான சலனத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

ருபத்தோராம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான உள்நாட்டுப் போரைச் சந்தித்து வருகிறது ஏமன். ஏமன் உள்நாட்டுப் போர் ``மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள மிக மோசமான நெருக்கடி” என ஐ.நா. சபை குறிப்பிட்டுள்ளது. ஏமன் உள்நாட்டுப் போரில் அமெரிக்காவின் தலையீட்டை முடிந்த அளவுக்கு அல்லது முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க செனட் சபை கடந்த நவம்பர் 28-ம் தேதியன்று தீர்மானம் ஒன்றை 63 – 37 என்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றியுள்ளது. இது விரைவில் முழு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

ஏமன் யுத்தத்தில் முழு வீச்சில் ஈடுபட்டுவரும் சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா சகல உதவிகளையும் செய்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சவுதி அரேபியாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் ஆளும் கட்சியான குடியரசுக் கட்சி, பெரும்பான்மை பலம் கொண்டுள்ள செனட் அவையில் பெரும்பான்மை ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது அதிபர் டிரம்பிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

எங்கே, எப்போது தொடங்கியது ஏமன் உள்நாட்டு யுத்தம்?
 
ஏமன் உள்நாட்டுப் போர் மார்ச் 2015-ம் ஆண்டு தீவிரமடைந்தது என்றாலும், அதற்கான தொடக்கம் 2011-ம் ஆண்டு தொடங்கிய அரபு எழுச்சியிலிருந்தே வருகிறது. துனிசியாவில் தொடங்கிய அரபு எழுச்சி பல்வேறு மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது. அதன் தொடர்ச்சியாக ஏமனிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 33 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த அலி அப்துல்லா சாலேவுக்கு எதிராகப் புரட்சி உருவாகவே துணை அதிபர் மன்சூர் ஹைதியிடம் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

புதிய அதிபர் மன்சூர் ஹாதி, பதவிக்கு வந்த பிறகு ஏமனில் செயல்பட்டுவந்த ஹௌதி குழுக்கள் ஏமனின் வடக்குப் பகுதியில் உள்ள சத்தா மற்றும் அதன் அருகாமை மாகாணங்களைக் கைப்பற்றின. முன்னாள் அதிபர் சாலேவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த குழுக்களுக்கும் ஹௌதி உடன் இணைந்து தலைநகர் சனா’வையும் கைப்பற்ற முயன்றன. இதனால் அதிபர், நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

அதிபர் ஹைதிக்கு ஆதரவாகச் சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவை ஹௌதி மற்றும் முன்னாள் அதிபர் சாலேவின் படைகளை எதிர்த்து மார்ச் 2015 முதல் போரிடத் தொடங்கின. அன்று முதல் ஏமன் உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹௌதி குழுக்களுக்கு ஆதரவாக இரான் செயல்படுவதாகத் தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன. இதை இரான் மறுத்தாலும் அமெரிக்கா, சவுதி அரேபியா தொடர்ந்து இரானைக் குற்றம்சாட்டி வருகின்றன.

சவுதி தலைமையிலான அதிபர் ஹைதி ஆதரவுப் படைக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ராணுவ உதவி, ஆயுதம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளித்து வருகிறது. தீவிரவாதக் குழுக்கள் உள்ள பகுதிகளின் மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபடப்போவதாகச் சவுதி அறிவித்திருந்தது. ஆனால், பெரும்பாலான ஏவுகணைத் தாக்குதல்கள், பொதுமக்கள் வாழும் பகுதிகளில்தான் நடைபெற்றுள்ளது என்பதை ஐ,நா-வும் உறுதிப்படுத்தியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிற இந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறாமல் லட்சணக்கான மக்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காலரா தொற்றினால் மட்டும் 85,000 குழந்தைகள்வரை உயிரிழந்திருக்கலாம் எனச் சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏமனுக்கான போக்குவரத்தையும் சவுதி முடக்கி வைத்துள்ளதால் உணவு, மருந்துப் பொருள்கள், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏமன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்புமே போர்க் குற்றத்துக்குச் சாட்சியானவர்கள் என்று ஐ.நா., கடந்த ஆகஸ்டு மாதம் தெரிவித்திருந்தது. போரை முடிவுக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளுமே தோல்வியில்தான் முடிந்துள்ளன.

சவுதி அரேபியா – அமெரிக்கா:

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செயல்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்குத் தொடர்ந்து நிதியுதவி அளித்து சர்வதேச அரங்கில் ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் டிரம்பின் சவுதி பயணத்தின்போது, அந்த நாட்டுடன் $110 பில்லியன் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் கத்தார் மீது எண்ணற்றத் தடைகளை விதித்தன. இதற்கு அமெரிக்க ராணுவம், அப்போது வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த ரெக்ஸ் டில்லர்சன் வருத்தம் தெரிவித்த போதும் அதிபர் டிரம்ப் வரவேற்று சவுதிக்கு ஆதரவு தெரிவித்தார்.

சமீபத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகியின் படுகொலை. ஜமால் கசோகி காணாமல் போனதாகச் செய்திவரத் தொடங்கிய போது, சவுதி தன்னுடைய பங்கு எதுவும் இல்லை என மறுத்து வந்தது. சர்வதேச அளவில் அழுத்தம் அதிகமானதால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கசோகி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைச் சவுதி இறுதியாக ஒப்புக்கொண்டது. இந்தக் கொலைக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானே நேரடியாகக் உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. கூட இளவரசர் சல்மான்தான் கசோகியின் கொலைக்கு உத்தரவிட்டார் என்று தெரிவித்த போதிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சவுதிக்கு ஆதரவாகவும் இளவரசர் சல்மானைப் புகழ்ந்தும் பேசி வருகிறார்.

இத்தகைய சூழலில் சவுதி முன்னின்று நடத்தக்கூடிய ஏமன் போரில், அமெரிக்கா பின்வாங்கும் என்பது உறுதியற்ற நம்பிக்கையாகத்தான் உள்ளது. தற்போது அமெரிக்க செனட் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் போன்று, கடந்த மார்ச் மாதமும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது. தற்போது ஆளும்கட்சி பெரும்பான்மையாக உள்ள செனட் அவையில் உறுப்பினர்களின் ஆதரவோடு இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு ஜமால் கசோகியின் படுகொலையும் அதற்கு டிரம்பின் எதிர்வினையும்தான் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தத் தீர்மானத்தை கொண்டு வருவதில் செனட் அவையின் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் மிக முக்கியப் பங்காற்றினார். அதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அமெரிக்கக் குடிமக்களின் சார்பாக, சாண்டர்ஸுக்கு எழுதப்பட்ட திறந்த மடல் ஒன்று இணையத்தில் உலவ ஆரம்பித்தது. அதில் கூறியுள்ளவை, ``அமெரிக்காவின் மொத்த நிதியில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானது ராணுவத்துக்காகப் பயன்படுகிறது. இதில் ஒரு சிறு பங்கு, உலகம் முழுவதும் பட்டினியை ஒழிக்கவும், சுத்தமான நீரை வழங்கவும், பல்வேறு நோய்களைத் தீர்க்கவும் பயன்படும். ராணுவத்தில் செலவிடப்படும் லட்சக்கணக்கான கோடிகளை தவிர்த்துவிட்டு எந்தவொரு நல்லெண்ண நடவடிக்கைகளைப் பற்றியும் பேச முடியாது. போரும், போருக்கான ஆயத்தமும்தான், நம்முடைய இயற்கைச் சூழலுக்கு எதிரான முன்னணி அழிவு சக்திகள். ராணுவவாதம்தான் உலகில் அகதிகளை உருவாக்குவது, இனவெறி மற்றும் வெறுப்புஉணர்வை வளர்த்தெடுப்பது மற்றும் இன்று நாம் அணு ஆயுதப் பேரழிவை எதிர்நோக்கி இருப்பது போன்றவற்றிற்கு அடிப்படைக் காரணியாக இருக்கிறது. நமது சமூக வாழ்வின் அனைத்து அங்கத்திலும் இதன் தாக்கத்தை உணர முடியும். ராணுவத்திற்காகச் செலவிடுவதை குறைக்க வேண்டும் என அமெரிக்க மக்களும் விரும்புகின்றனர். சமீபத்தில் வந்த கருத்துக்கணிப்புகள் சில `உலக நாடுகளில் உள்ள பெரும்பான்மையானவர்கள், அமெரிக்காவை உலக அமைதிக்கு அச்சுறுத்தலாகக் கருதுவதாக தெரிவித்துள்ளது’ உலகம் முழுவதும் ராணுவத்துக்காக அமெரிக்கா செலவு செய்ததில் சிறு துளியை மருத்துவம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக (ராணுவச் செலவுகளில் சிறு அளவே இதற்குப் போதுமானதாக இருந்திருக்கும்) செய்திருந்தால்கூட இத்தகைய வெறுப்பைச் சம்பாதித்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது”

அமெரிக்க அரசியலமைப்பின்படி, எந்தவொரு நாட்டின் மீதும் போர் தொடுக்க வேண்டும் அல்லது ஊடுருவல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம். ஏமன் போரில் ஈடுபடுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்தத் தீர்மானம் உடனடியாக அமெரிக்க அரசின் தலையீட்டை நிறுத்தாது என்றபோதிலும் ஒரு சிறிய அளவிலான சலனத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

வியட்நாம் யுத்தத்துக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு உருவானதும், முகம்மது அலி உள்ளிட்டோர் வெளிப்படையாகவே ராணுவ சேவையில் ஈடுபட முடியாது என அறிவித்ததும் அமெரிக்க சிவில் சமூகத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்கா, வியட்நாமிலிருந்து பின்வாங்கியதில் அது பிரதான காரணமாக இல்லையென்றாலும் அத்தகைய ஒரு எழுச்சி மிக முக்கியப் பங்காற்றியது. அமெரிக்காவில் அகதிகளின் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடமிருந்து பிரித்து தடுப்புச் சிறைச்சாலைகளில் அடைக்கச் சமீபத்தில் டிரம்ப் அரசு உத்தரவிட்டிருந்தது. இது அமெரிக்கர்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிவில் சமூகத்தின் அழுத்தம் காரணமாக, டிரம்ப் அரசு அந்த உத்தரவைத் திரும்பப்பெற்றது. அத்தகைய விளைவை இந்தத் தீர்மானம் ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முன்னாள் ஐ.நா பொதுச் செயலாளர் கோஃபி அன்னான், 2004-ம் ஆண்டு இராக்கில் அமெரிக்கா ஊடுருவியதைக் கண்டித்துப் பேசியபோது, ``இராக் மீதான அமெரிக்காவின் போர் சட்டவிரோதமானது” எனக் குறிப்பிட்டிருந்தார். இரானின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்காகவே அமெரிக்கா மத்திய கிழக்கில் அமைதியற்ற சூழலை நிலைத்திருக்கச் செய்து கொண்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்படுகிறது. எந்தவொரு ஏகாதிபத்திய நாடுகளுமே மோதிக்கொள்ளத் தேர்ந்தெடுப்பது மூன்றாம் உலக நாடுகளைத்தான். அதைத்தான் நாம் சிரியாவிலும் பார்க்க முடிகிறது. அதிகாரப் பரவலாக்கம், பிராந்திய ஆதிக்கம் என்பதைத் தாண்டியும் இதில் அந்த நாடுகளின் வர்த்தக நலன்களும் லாபங்களுமே பிரதானமாக இருப்பது தவிர்க்க முடியாத உண்மை.

அடுத்த கட்டுரைக்கு