Published:Updated:

கைவிரிக்கும் கட்சிகள்... கலக்கத்தில் ராஜபக்‌ஷே!

கைவிரிக்கும் கட்சிகள்... கலக்கத்தில் ராஜபக்‌ஷே!
பிரீமியம் ஸ்டோரி
News
கைவிரிக்கும் கட்சிகள்... கலக்கத்தில் ராஜபக்‌ஷே!

கைவிரிக்கும் கட்சிகள்... கலக்கத்தில் ராஜபக்‌ஷே!

ட்சி அதிகாரத்தைப் பிடிக்க இரட்டை இலக்க எம்.பி-க்களின் ஆதரவு கூடுதலாகத் தேவை எனும் நிலையிலிருந்து, ஒற்றை இலக்க எம்.பி-க்கள் வந்துசேர்ந்தால் போதும் என்கிற இடத்துக்கு வந்திருக்கிறது, இலங்கை அதிபர் மைத்ரி - மகிந்த ராஜபக்‌ஷே அணி.

கடந்த அக்டோபர் மாதக் கடைசியில் மகிந்த ராஜபக்‌ஷேவை திடீர்ப் பிரதமர் ஆக்கிய மைத்ரி, அக்டோபர் 27-ம் தேதி நாடாளுமன்றத்தை முடக்கிவைத்தார். நவம்பர் 16-ம் தேதியன்று நாடாளுமன்றம் கூட்டப்படும் என்ற தன் அறிவிப்பை, அவரே மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. காரணம், ஐ.நா அமைப்பும், மேற்குலக அரசுகளும், காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பும் கொடுத்துவரும் அழுத்தம்தான்!

ஐ.நா பொதுச்செயலர் அண்டோனியா கொட்ரஸ் வெளியிட்ட அறிக்கையில், “எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்” என்று அதிபர் மைத்ரியை வலியுறுத்தினார். அவரையடுத்து, 53 நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த்தின் பொதுச்செயலாளர் பேட்ரிசியா ஸ்காட்லண்ட், “இலங்கையின் அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, தேவைப்பட்டால் மற்ற சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உதவவும் தயார்” என்று கூறினார்.

கைவிரிக்கும் கட்சிகள்... கலக்கத்தில் ராஜபக்‌ஷே!

அமெரிக்க அரசுத் தரப்பிலோ, இந்த விவகாரம் தொடங்கியதிலிருந்தே அதிபர் மைத்ரியின் நடவடிக்கை தொடர்பாக விமர்சனத்தை வெளியிட்டுவருகிறார்கள். இலங்கையில் இப்போது தான் ஜனநாயகமே சீர்குலைந்துபோய்விட்டது என்பதைப்போல, அடுத்தடுத்து அறிக்கைகளாகவும் பேட்டிகளாகவும் கருத்துக்கூறியவண்ணம் இருக்கிறது, அமெரிக்க அரசு. இலங்கைக்கான அமெரிக்காவின் தூதராக அண்மையில் நியமிக்கப் பட்ட அலைனா ரெப்லிட்ஸ், சம்பிரதாயமாக இலங்கை அதிபர் மைத்ரியை முதலில் சந்தித்தார். அதைப்போலவே, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் அவர் சந்தித்துப் பேசினார். இலங்கையில் அறிமுகத்தின்போது மட்டுமல்ல, அவ்வப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெளிநாட்டுத் தூதர்கள் சந்திப்பது, நெடுங்கால வழக்கமாக இருந்துவருகிறது. அதையும் தாண்டிப் புதிய அமெரிக்கத் தூதர், இலங்கையின் அரசு நெருக்கடியில் அதீத ஈடுபாடு காட்டிவருகிறார். தீபாவளி அன்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூர்யாவை அலைனா சந்தித்தது முக்கியத்துவம் கொண்டது. சந்திப்பு குறித்துக் கருத்துக்கூறிய அலைனா, “இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுவதே அரசு நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும். ஜனநாயக நிறுவனங்கள் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும். அரசாங்கத்தைப் பற்றித் தீர்மானிக்க மக்கள் பிரதிநிதிகளை விடவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

சர்வதேசரீதியிலான வாதங்கள் ஒரு பக்கம் இருக்க, உள்நாட்டில் தங்களின் ஆதரவை உறுதிப்படுத்தவும் பலப்படுத்தவுமான வேலைகளில் ரணில், ராஜபக்‌ஷே தரப்புகள் மும்முரம் காட்டின. 106 எம்.பி-க்களைக் கொண்டிருந்த ரணிலின் கூட்டணியில் இருந்து அவர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஏழு பேரையும் இழுத்துக்கொண்டது, மகிந்த ராஜபக்‌ஷே தரப்பு. அதில் எதிர்பாராத திருப்பமாகக் கடந்த வாரம் திடீர்ப் பிரதமர் மகிந்தவின் அமைச்சரவையில் பதவியேற்றுக்கொண்ட மனுச நாணயக்கார என்ற ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி., ஒரு வாரத்துக்குள் தாய்க் கட்சிக்கே திரும்பினார். கடந்த திங்களன்று ஐ.தே கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்த பின்னர் அவர் தன் முடிவை வெளியிட்டார். தாங்கள் இழுத்த ரணிலின் ஆளே, திரும்பப்போனதால் அதிர்ச்சியானது மகிந்த - மைத்ரி தரப்பு. இந்த கோதாவில், மகிந்தவின் பக்கம்போய் அமைச்சர் ஆன மூன்று பேரும் திரும்பவருவார்கள் என நம்பிக்கைக் கதையைச் சொல்லத் தொடங்கினார்கள், ரணில் கட்சியில்.

ரணில் தரப்பு நடத்திய பேரணிக்குப் பதிலடியாக, மகிந்த-மைத்ரி தரப்பினர் நாடாளுமன்ற வட்டாரத்தில் திங்கள்கிழமை மாலை பேரணி ஒன்றை நடத்திக்காட்டினர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் இருவரும் ஒன்றாகப் பங்கேற்ற கட்சி நிகழ்ச்சி என்பதாலும், அது முக்கியத்துவம் பெற்றது. அதில் பேசிய மைத்ரி, 113 எம்.பி-க்களின் ஆதரவு மகிந்தவுக்கு இருப்பதாகவும், சபாநாயகர் ஜயசூர்யா ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறி, அதிர்ச்சி தந்தார். ஏனென்றால், அதற்கு முந்தையநாள்வரை மகிந்தவுக்கு 103 எம்.பி-க்கள் ஆதரவு என்ற நிலையே இருந்தது.

மொத்தமுள்ள 225 எம்.பி-க்களில் 113 பேரின் ஆதரவு கிடைத்தால் மகிந்தவின் பிரதமர் பதவி நீடிக்கும் எனும் நிலையில், கூடுதலாக இரட்டை இலக்கத்தில் (குறைந்தது 10) எம்.பி-க்களை இழுத்தாக வேண்டும். மைத்ரியின் பேச்சால் எதிரணியில் சலசலப்பு ஏற்படத்தான் செய்தது. ஆனால், மைத்ரியின் அடுத்த நடவடிக்கைகள் அதற்கு நேர்மாறாக இருந்தது. கடந்த வாரம், ரணில் அமைச்சரவையில் இடம்பெற்ற இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (7 எம்.பி-க்கள்), ரிசாத் பத்யுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (5 எம்.பி-க்கள்) தலைவர்களை மைத்ரி வரவழைத்துப் பேசினார். அவர்களோ, ரணில் தரப்புக்குத்தான் ஆதரவு எனக் கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து, தீபாவளிக்கு மறுநாள் காலையில், மனோ கணேசன் தலைமையிலான மலையகத் தமிழ்க் கட்சிகளின் தமிழ் முற்போக்குக் கூட்டணியினரை (6 எம்.பி-க்கள்) மைத்ரி சந்தித்தார். அன்றைய தினமே பிற்பகலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டார். மகிந்த அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறும், அப்படி இல்லாவிட்டால் மகிந்த அரசுக்கு ஆதரவு தரவேண்டும் என்றும், அதுவும் இல்லாவிட்டால் வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்குமாறும் த.மு.கூட்டணியிடம் கேட்டார், மைத்திரி. கூட்டமைப்பிடமும் நடுநிலைமை வகிக்குமாறு கேட்க, ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள் என இரு தரப்பினருமே மறுத்துவிட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கைவிரிக்கும் கட்சிகள்... கலக்கத்தில் ராஜபக்‌ஷே!

மகிந்த பக்கம் தாவிய ஒருவரைத் தவிர, 14 எம்.பி-க்களைக் கொண்ட கூட்டமைப்பும் 6 எம்.பி-க்களைக் கொண்ட சிங்கள இனவாத இடதுசாரி ஜே.வி.பி கட்சியும், மகிந்தவுக்கு எதிராக வாக்களிப்பது என்று தீர்மானமாகக் கூறிவிட்டன. சமரசம் செய்துவிட முடியும் என நம்பி, கடைசியாகக் கூட்டமைப்பிடம் பேசிப்பார்த்த மைத்ரி, ஏமாந்துபோனார். வரும் 14-ம் தேதி கூடும் நாடாளுமன்றத்தில், மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கடந்த புதன்கிழமை நடந்த கட்சிகளின் கூட்டத்தில் அறிவித்துள்ளார், சபாநாயகர் ஜயசூர்ய. சாதகமான நிலைமை கையைவிட்டுப் போய்க்கொண்டிருக்க, அதிபர் மைத்ரி என்ன செய்யப்போகிறார் எனும் பரபரப்பு அதிகரித்தது.

மகிந்த ராஜபக்‌ஷேவை எப்படி அரசமைப்புக்கு விரோதமாக நியமித்தாரோ, அதைப்போலவே நாடாளுமன்றத்தையும் மைத்ரி கலைக்கப்போகிறார் என ரணில் கட்சித் தலைவர்கள் புதனன்று சூட்டைக் கிளப்பினர். அதேவேளை, முன்னாள் சபாநாயகரும் மகிந்தவின் அண்ணனுமான சமல் ராஜபக்‌ஷேவையும் மைத்ரி - மகிந்த மறு இணைவுக்கான புள்ளியான எஸ்.பி.திசாநாயக்கவும் புதனன்று அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இப்போது, ரணில் கட்சியின் எம்.பி-யாக இருக்கும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, “நாடாளுமன்றத்தைக் கலைத்தால் மக்கள் கிளர்ச்சி செய்வார்கள்” என்று கூறியதெல்லாம், காலத்தின் கோலம்! ஆனால், அவர்கள் சொன்னதைப்போல புதன்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றக் கலைப்பு ஒன்றும் நடக்கவில்லை.

அது நடக்காமல் இருக்கும் என உறுதியாகக் கூறவும் யாரும் தயாராக இல்லை என்பதே இலங்கைத் தீவின் இப்போதைய கசப்பான உண்மை!

- இரா.தமிழ்க்கனல்