Published:Updated:

''அவர் ஜெயிலுக்கு போவாருனு நல்லாவே தெரியும்'' - முகிலனின் மனைவி பூங்கொடி

''அவர் ஜெயிலுக்கு போவாருனு நல்லாவே தெரியும்'' - முகிலனின் மனைவி பூங்கொடி
''அவர் ஜெயிலுக்கு போவாருனு நல்லாவே தெரியும்'' - முகிலனின் மனைவி பூங்கொடி

மிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், ஒரு வருடச் சிறை வாழ்க்கைக்குப் பிறகு கடந்த செப்டம்பர்  26-ம் தேதி  கண்டிஷன் பெயிலில் வெளியே வந்தார். 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் உறிஞ்சி, வணிக நோக்கில் சப்ளை செய்வதை எதிர்த்துப் போராடியவரைக் கைதுசெய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தது காவல்துறை. ஆனாலும், வெளியே வந்த இந்த மூன்று மாதங்களில், அவரை போராட்டக் களங்களில்தான் அதிகமாகப் பார்க்கமுடிகிறது. அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள, அவரின் மனைவி பூங்கொடியைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினோம். 

“ஏங்க, நீங்க மட்டுமில்லைங்க, நானுமேகூட அவர் எங்க இருக்கார், என்ன பண்ணிட்டு இருக்கார்னு நியூஸ் பார்த்துதாங்க தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. அவர் ஜெயில்ல இருந்து வெளியில் வந்த இந்த மூணு மாசமும், ஒரு கெஸ்ட் மாதிரிதான் வீட்டுக்கு வந்துட்டுப் போயிட்டு இருக்கார். அதுமட்டுமில்ல, நாங்க எப்போதும் அதிகமா சேர்ந்தே இருந்ததில்லைங்களே. அதனால, எனக்கு இது ஒண்ணும் புதுசா தெரியலை. அவரு, மக்கள் பிரச்னைகளைப் பத்தி சிந்திக்காம வீட்டுக்குள்ள இருந்தாதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கும். இப்போக்கூட பாருங்க, வெளியில வந்ததும் ஸ்டெர்லைட் பிரச்னைக்காகவும் கரூர்ல நடக்கிற மண் பிரச்னைக்காகவும் ஓடிட்டு இருக்காரு.  வீட்டுக்கு வந்தாகூட எப்போ வந்தீங்க, எங்க போயிருந்தீங்கன்னுகூட கேட்க மாட்டேன். அவரு மக்களுக்காகக் குரல் கொடுக்கத்தானே போறாரு. சரி போகட்டும்னு நானும் விட்டுட்டேன். நம்மளால அவங்களை மாத்த முடிஞ்சா மாத்தணும். அப்படி இல்லையா நாம அவங்களுக்கு ஏத்த மாதிரி மாறிக்கணும். அப்படியும் இல்லையா, அமைதியா இருந்துடணும். இதுல நான் ரெண்டாவது ரகம். அவங்களுக்காக நான் மாறிக்கிட்டேன்” என்றவரிடம், சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் தொடர்ச்சியாகப் போராட்டக் களங்களுக்குச் செல்கிறாரே அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது சட்டென,

“அவரு எப்படியும் திரும்பவும் ஜெயிலுக்குப் போகத்தான் போறாரு. அது என்னிக்குன்னு தெரியலையே தவிர, கண்டிப்பா அவர் ஜெயிலுக்குப் போவாருன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதுக்காக போராடாம இருக்க முடியுமா? (சிரிக்கிறார்). ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காரு. பையனோட எங்கேயாச்சும் வெளியில போயிட்டு வரலாமேனு ஒருசிலர் சொல்லத்தான் செய்யுறாங்க. ஆனா, நம்மளைச் சுத்தி நிறைய பிரச்னைகள் இருக்குதுங்களே. அதுக்காக குரல் கொடுக்கணுமே. அதையெல்லாம் கண்டுக்காம, நாங்க குடும்பத்தோட வெளியில கிளம்புறது நல்லாவா இருக்கும். எனக்குத் தெரிஞ்சு, நாங்க ஒண்ணா 2010ல கொல்லிமலை போயிட்டு வந்தோம். அதுக்கப்பறம் எங்கேயும் போனதில்ல. இப்போ போகவும் விரும்புறதில்லைங்க. இதோ, இப்போ நான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன். ஆனா, அவரு ஏதாவது ஒரு பிரச்னையிலதான் உக்காந்திருப்பாரு” என்கிறார் சிரித்துக்கொண்டே. 

தான் ஒரு போராளியின் மனைவி என்பதை அவரின் புன்னகை அழகாக வெளிப்படுத்துகிறது.