அலசல்
Published:Updated:

பெயருக்காகப் போராடும் மாசிடோனியா!

பெயருக்காகப் போராடும் மாசிடோனியா!
பிரீமியம் ஸ்டோரி
News
பெயருக்காகப் போராடும் மாசிடோனியா!

பெயருக்காகப் போராடும் மாசிடோனியா!

பெயரே இல்லாமல் தவிக்கும் ஒரு தேசத்தை அறிவீர்களா? சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, புதிய தேசத்துக்குப் பெயர் சூட்டுவதில் எழுந்தப் பிரச்னையால், விடுதலை அடைந்து 28 ஆண்டுகளாகியும் அதிகாரப்பூர்வமானப் பெயர் இல்லாமல் தவிக்கிறது ‘முன்னாள் யுகோஸ்லாவிய குடியரசு மாசிடோனியா’! 

யுகோஸ்லாவிய குடியரசிலிருந்து 1991-ம் ஆண்டு பிரிந்து, சுதந்திரத் தேசமாக மாறியது மாசிடோனியா (இப்போதைக்கு நாம் அப்படி அழைப்போம்). இதற்கு அருகில் இருக்கும் நாடான கிரீஸின் வடக்கு மாகாணத்தின் பெயரும் மாசிடோனியாதான். தவிர, நமக்கு சிந்துச் சமவெளி நாகரிகம் எப்படியோ, அப்படி கிரேக்கத்துக்கு ‘மாசிடோனியா’ பெருமைமிக்க புராதன நாகரிகம். மேலும், மாசிடோனியாவின் பெரும்பான்மை மக்கள் ஸ்லோவிக் இனத்தவர்தான். மேற்கண்ட காரணங்களால் இந்தப் பெயரை விட்டுத்தர முடியாது என்று மல்லுக்கட்டுகிறது கிரீஸ். அதேசமயம், ‘எங்கள் மண்ணின் உண்மையான பெயரான மாசிடோனியா என்பதை மாற்ற முடியாது’ என்று கடந்த 28 ஆண்டுகளாகப் போராடிவருகின்றனர் மாசிடோனிய மக்கள். இடையே இந்தப் பிரச்னைக்குப் பஞ்சாயத்து செய்த ஐ.நா சபை, இந்தத் தேசத்துக்கு தற்காலிகமாக ‘முன்னாள் யுகோஸ்லாவிய குடியரசு மாசிடோனியா’ என்று பெயரிட்டது. ஆனால், செல்லாது செல்லாது என்று சொல்லிவிட்டார்கள் மாசிடோனிய மக்கள். மாவீரன் அலெக்ஸாண்டர் பிறந்த மண்ணில் தொடரும் இந்தப் போராட்டத்தை, இரண்டாம் ‘கிரேக்கப் போர்’ என்று வர்ணிக்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

பெயருக்காகப் போராடும் மாசிடோனியா!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண ஸ்லோவா - மாசிடோனியா, ஸ்கோப்ஜே குடியரசு, புதிய மாசிடோனியா, மேல் மாசிடோனியா, கீழ் மாசிடோனியா என்று பல்வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ம்ஹூம்... ‘மணந்தால் மாசிடோனியா... இல்லாவிட்டால் போராட்டம்’ என்ற ரேஞ்சுக்கு நாட்டு மக்களும் மொத்தக் கட்சியினரும் இந்தப் பெயர்களை எல்லாம் நிராகரித்துவிட்டனர். இதுகுறித்து குறிப்பிடும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள், “பிரச்னை என்றோ தீர்வுக்கு வந்திருக்கும். ஆனால், கிரீஸ் இறங்கிவரும் நேரத்தில் எல்லாம் மாசிடோனியாவின் தடாலடி நடவடிக்கைகள் பிரச்னையை மேலும் அதிகரிக்கச் செய்தன. திடீரென விமான நிலையத்துக்கு ‘மாசிடோனியா’ என்றும், தேசிய நெடுஞ்சாலைக்கு ‘அலெக்ஸாண்டர் கிரேட் நெடுஞ்சாலை’ என்றும் மாசிடோனியா பெயர் வைத்தது. இதனால், ஆத்திரமடைந்த கிரீஸ், ‘பெயர் பிரச்னை தீரும்வரை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ நாடுகளுடன் மாசிடோனியா சேரக் கூடாது’ என்று ஐ.நா-வில் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்தது. கூடவே, தனது துறைமுகத்தை மாசிடோனியா பயன்படுத்தவும் தடை விதித்தது.

2017-ல், மாசிடோனியாவின் புதிய பிரதமராக சோஷலிச ஜனநாயகவாதியான சோரன் சாவ் பதவி ஏற்றதிலிருந்து அங்கே தீர்வுக்கான வெளிச்சக்கீற்றுகள் தென்படுகின்றன. தான் பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக, விமான நிலையத்தின் பெயரை ‘ஸ்கோப்ஜே’ என்றும், ‘அலெக்ஸாண்டர் கிரேட் நெடுஞ்சாலை’ என்ற பெயரை ‘சர்வதேச நட்பு ஸ்கோப்ஜே சாலை’ என்றும் மாற்றி கிரீஸின் கோபத்தைத் தணித்தார். தொடர்ந்து, 2018 ஜூன் மாதம் இருநாடுகளும் இதுதொடர்பாக ஒரு சமரச ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. அதன்படி, ‘மாசிடோனியா தன் நாட்டின் பெயரை ‘வடக்கு மாசிடோனிய குடியரசு’ என்று மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்குப் பதிலாக, கீரீஸ் தனது தடையை விலக்கிக்கொள்ள வேண்டும்’ என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தப் பிராந்தியத்தில் ரஷ்யாவின் தலையீட்டைத் தடுக்க, இருநாடுகளின் ஒற்றுமை அவசியம் என்பதால் பிராந்தியத்தின் மற்ற நாடுகள் இதை வரவேற்றுள்ளன. தீராத பிரச்னைக்குத் தீர்வுகாணும் விதமாகச் செயல்பட்டதற்காக இரு நாடுகளின் பிரதமர்களின் பெயரும் இந்த ஆண்டு நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன” என்றார்கள்.

பெயருக்காகப் போராடும் மாசிடோனியா!

ஆனால், இடையே மற்றுமொரு சிக்கல். இந்த ஒப்பந்தத்துக்கு இரு நாடுகளின் நாடாளுமன்றங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். மாசிடோனியாவில் பிரச்னை இல்லை. பிரதமர் சாவ் தனக்கு இருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, ஜனவரி 11-ம் தேதி ஒப்புதல் பெற்றுவிட்டார். கிரீஸில்தான் நிலைமை சிக்கலாகியிருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக சுமார் ஒரு லட்சம் பேர் ஏதென்ஸ் நகரில் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துவருகிறார்கள். கிரீஸ் பிரதமர் சிப்ரஸிக்கு எதிராக, கூட்டணிக் கட்சிகளே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. ஓர் ஓட்டு வித்தியாசத்தில் தப்பியது சிப்ரஸின் பிரதமர் பதவி. ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் வாக்கெடுப்பு அடுத்த வாரம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.

ஒப்பந்தம் கிரேக்க நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றால், 140 நாடுகள் வடக்கு மாசிடோனிய குடியரசை அங்கீகரிக்கும். அந்நாட்டு மக்கள் மாசிடோனியன்கள் என்று அழைக்கப்படுவார்கள். மாசிடோனிய மொழி ஆட்சி மொழியாகும். இவை அனைத்தும் கிரீஸ் மக்களின் கையில்தான் உள்ளது!

- கே.ராஜு