Published:Updated:

`150 பேருக்கு வைரஸ் பாசிடிவ்; தனித் தீவில் மன்னர்!' -சவுதி அரசக்குடும்பத்தைச் சுற்றும் கொரோனா?

சவுதி அரசக்குடும்பம்
சவுதி அரசக்குடும்பம்

சவுதி அரசக்குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனிதக் குலத்தை ஆட்டுவித்து உலகம் முழுவதும் உள்ள அனைவரையும் வீட்டுக்குள் சிறை வைத்துள்ளது கொடூர கொரோனா வைரஸ். இதனால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சமாகவும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 95,000 ஆகவும் உள்ளது. இந்த வைரஸ் ஏழை, பணக்காரன், நாட்டின் தலைவர், பிரபலம் என எதையும் பார்க்காமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்நாட்டின் இளவரசர் சார்லஸ், கனடா பிரதமரின் மனைவி, இரானின் பெரும் அரசியல் தலைவர்கள், பல்வேறு ஹாலிவுட் பிரபலங்கள் எனப் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சவுதி அரண்மனை
சவுதி அரண்மனை

இந்த நிலையில், இதே வைரஸால் சவுதி அரசக் குடும்பத்தில் மட்டும் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுக்குச் சிகிச்சை அளிக்க அந்நாட்டின் மிகச் சிறந்த மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் கொண்ட தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சவுதி மன்னர் சல்மானும், முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அவர்கள் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த நாடுகளிலிருந்து நாம் கற்கத் தவறுகிற பாடங்கள் என்னென்ன? #Corona

அரசக் குடும்பத்தில் பலருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து மன்னர் சல்மான், சவுதி - சூடான் எல்லையில் அமைந்துள்ள செங்கடல் பகுதியில் இருக்கும் ஒரு தனித் தீவில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அதேபோல் முடி இளவரசர் முகமது பின் சல்மான், தான் உருவாக்கவுள்ள புதிய நகரத்தில் தன் அரசவையில் உள்ள மூத்த உறுப்பினர்களுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் சல்மான்
பின் சல்மான்

சவுதி அசரக் குடும்பத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளவரசர்கள் உள்ளனர். அவர்கள் அடிக்கடி ஐரோப்பா போன்ற பிற வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். அப்படி வைரஸ் வெடிப்பின்போது வெளிநாடுகளிலிருந்து சவுதி திரும்பியவர்கள் மூலம் அரசக் குடும்பத்தில் இருக்கும் பிறருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், ரியாத்தின் ஆளுநருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சவுதி அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அமைச்சர்கள் சிலருக்கும் கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன.

``அரசக் குடும்பத்திலிருந்து எத்தனை பேர் வைரஸ் பாதிப்புடன் வருவார்கள் என எங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் 500 படுக்கைகள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். இது குறித்து மருத்துவர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அனைவரும் அதீத எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முக்கிய நோயாளிகளைத் தவிர மற்ற அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்” என அரசக் குடும்பத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியா
சவுதி அரேபியா

சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை, இதுவரை 3,287 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர்களில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். சவுதியில் முதல் நோயாளி வைரஸால் பாதிக்கப்படுவதற்கு முன்னரே நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டன. மார்ச் 2-ம் தேதியே அனைத்து நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு பொதுமக்கள் மெக்கா, மதினா போன்ற புனிதத்தலங்களுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டது. சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு