Published:Updated:

இனி காமெடியன் அல்ல... நாட்டின் அதிபர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இனி காமெடியன் அல்ல... நாட்டின் அதிபர்!
இனி காமெடியன் அல்ல... நாட்டின் அதிபர்!

உக்ரைனில் வென்ற சின்னத்திரை சீரியல் நடிகர்...

பிரீமியம் ஸ்டோரி

புகழ்பெற்ற சினிமா ஹீரோக்கள், முதலமைச்சர்களாகவும் அதிபர்களாகவும் பதவிக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், உக்ரைனில் சின்னத்திரை நகைச்சுவை நடிகரான வொலோடிமர் ஸெலென்ஸ்கி குறுகிய அவகாசத்தில் எந்த முன் அரசியல் அனுபவமும் இல்லாமல் நாட்டின் அதிபராக முடியும் என்று நிரூபித்திருக்கிறார்!

ஏப்ரல் 20-ம் தேதி உக்ரைன் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எந்தப் பின்புலமும் இல்லாமல் போட்டியிட்டு வென்று அதிபராகி இருக்கிறார் ஸெலென்ஸ்கி. இவரிடம் தோல்வி அடைந்தவர், உக்ரைன் நாட்டின் முன்னாள் பிரதமரும் தற்போதைய அதிபருமான பெட்ரோ போரொஷென்கொ. இவ்வளவுக்கும் ஸெலென்ஸ்கி போட்டியிட்ட முதல் தேர்தல் இதுதான். பெட்ரோவின் பணபலம், அதிகாரம், அரசியல் செல்வாக்கு அனைத்தையும் தவிடுபொடியாக்கி அதிபராகியிருக்கிறார் ஸெலென்ஸ்கி.

இனி காமெடியன் அல்ல... நாட்டின் அதிபர்!

கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் நடைபெற்ற ஒரு பெரிய புரட்சிக்குப் பிறகு அதிபரானவர் பெட்ரோ. ‘ஊழலை ஒழிப்பார், கிழக்கு உக்ரைனில் நடைபெற்றுவந்த கலகத்தை ஒடுக்குவார், செல்வந்தர்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களைக் களை எடுப்பார்’ என்று பெட்ரோ மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர் உக்ரைன் மக்கள். ஆனால், பெட்ரோ எதையுமே செய்யவில்லை. நாட்டில் ஊழல் பெருகியது. மதரீதியாக, மொழிரீதியாக நாட்டைப் பிரித்தாளும் செயல்பாடுகள் தொடர்ந்தன. செல்வந்தர்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது. அதனால், நம்பிக்கையுடன் காத்திருந்த மக்களின் கனவு சிதைந்தது. பெட்ரோ மீது கடும் அதிருப்தி அடைந்தனர் மக்கள்.

இந்த சமயத்தில்தான், கடந்த மூன்றாண்டு களாக உக்ரைன் நாட்டில், ஒரு பிரபல தொலைக்காட்சியில் ‘சர்வன்ட் ஆஃப் தி பியூப்பிள்’ (servant of the people) என்கிற தொடர் ஒன்று வெளியாகி சக்கைப்போடு போட்டது. பள்ளி ஆசிரியர் ஒருவர் ஊழலுக்கு எதிராகப் போராடி, எதிர்பாராதவிதமாக நாட்டின் அதிபராகிவிடுவதுதான் தொடரின் கதை. அதில் பள்ளி ஆசிரியராக நடித்தவர், ஸெலென்ஸ்கி. அத்தொடரின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார் ஸெலென்ஸ்கி.

இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலில் குதித்த ஸெலென்ஸ்கி, அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித் தார். ஆரம்பத்தில் இவர்மீது மக்கள் ஆர்வம் காட்டவில்லை. பிரசாரத்தின்போது, ‘ஊழல் ஒழிப்பு, மத நல்லிணக்கம், அரசின் முடிவு மக்களின் விருப்பப்படிதான்’ என்பது உள்ளிட்ட ஸெலென்ஸ்கி சொன்ன சில விஷயங்கள் படிப்படியாக மக்களைக் கவர்ந்தன. அதிபர் வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் ஒரு பொது விவாதத்தைத் திறந்தவெளி அரங்கத்தில், லட்சக்கணக்கான மக்களின் முன் ‘லைவ் ஷோ’வாக நடத்தினார் ஸெலென்ஸ்கி. விவாதத்தின்போது வேட்பாளர்கள் போதையில் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக மேடையிலேயே தனக்கு ரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார் ஸெலென்ஸ்கி. அதேபோல், பெட்ரோவையும் பரிசோதனைக்கு உட்படவைத்தார்.

இனி காமெடியன் அல்ல... நாட்டின் அதிபர்!

வாக்களிக்கும்போது வாக்குச்சீட்டை, தொலைக்காட்சி காமிராவுக்கு முன் காட்டி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அது சட்டத்துக்குப் புறம்பானது என்பதால், அதற்கு 24 பவுண்டு அபராதம் கட்டியிருக்கிறார், ஸெலென்ஸ்கி. ஒருகட்டத்தில் சின்னத்திரைக் கதைபோலவே நிஜத்திலும் கொள்கைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்புமே இல்லாமல் மக்கள் ஆதரவைப் பெற்றார் ஸெலென்ஸ்கி. அவருடைய வேடிக்கையான பேச்சும் நடிப்பும் மட்டுமே அவருக்குக் கைகொடுத்தன. நடிப்பின்போது ‘ஊழலை ஒழிப்பேன்’ என்று பேசிய வசனத்தைத்தான் பிரசாரத்தின்போதும் பேசியிருக்கிறார்.

மறுமுனையில் பெட்ரோ, உக்ரைனின் பரம எதிரியான, ‘ரஷ்யாவை எதிர்க்கும் துணிச்சல் உள்ளவர்’ என்று பெயர் எடுத்திருந்தாலும்… ஊழல் குற்றச்சாட்டுகளால் களங்கப்பட்டுப் போனதால், அவரின் பிரசாரம் எடுபடவில்லை. இந்த நிலையில்தான் ஏப்ரல் 20-ம் தேதி நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில், 73 சதவிகித வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார் ஸெலென்ஸ்கி. முன்னாள் அதிபர் பெட்ரோ பெற்ற வாக்குகள் 24.5 சதவிகிதம் மட்டுமே. ‘‘பதவியில் இருந்தபோது ஒன்றுமே செய்யாதவர்களைவிட காமெடி நடிகர் எவ்வளவோ மேல் என்று மக்கள் முடிவு எடுத்ததால்தான், அதிபராகியிருக்கிறார் ஸெலென்ஸ்கி. நாடு முழுவதும் பெட்ரோவின் மீது இருந்த எதிர்ப்பு அலைதான், ஸெலென்ஸ்கியின் வெற்றிக்குக் காரணம்” என்று சொல்லும் அந்த நாட்டின் அரசியல் விமர்சகர்கள், “குறுகிய காலத்தில் நாட்டை முன்னேற்றுவது, சினிமாவிலும் சீரியலிலும்தான் சாத்தியம். நிஜ வாழ்வில் கடினம். ஸெலென்ஸ்கி பல சவால்களைச் சந்திக்க வேண்டிவரும்’’ என்கிற யதார்த்தத்தையும் முன்வைக்கிறார்கள்.

சின்னத்திரையில் நடித்ததைப்போல, நிஜ வாழ்விலும் ‘மக்களின் சேவகன்’ ஆகிவிட்ட இந்த நகைச்சுவை நடிகர், வருங்காலத்தில் சாதிப்பாரா என்பது போகப்போகத்தான் தெரியும்!

- கே.ராஜூ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு