Published:Updated:

அந்தோ பாவம்... இந்தோனேஷியா!

அந்தோ பாவம்... இந்தோனேஷியா!
பிரீமியம் ஸ்டோரி
அந்தோ பாவம்... இந்தோனேஷியா!

அதிபர் தேர்தலில் வென்றது மதவாதம்

அந்தோ பாவம்... இந்தோனேஷியா!

அதிபர் தேர்தலில் வென்றது மதவாதம்

Published:Updated:
அந்தோ பாவம்... இந்தோனேஷியா!
பிரீமியம் ஸ்டோரி
அந்தோ பாவம்... இந்தோனேஷியா!

ரம்பத்தில் ஜனநாயக முகம் காட்டும் தலைவர்களில் பலரும் பதவிக்கு வந்ததும் காட்டுவது, சர்வாதிகார முகமாகத்தான் இருக்கிறது. உலகம் முழுவதுக்குமான சாபக்கேடு இது.

இன்றைய உதாரணம்... இந்தோனேஷியா!


தெற்காசியாவில், பசுமைப் பூத்துக் குலுங்கும் பூமிகளில் ஒன்று, இந்தோனேஷியா. 1968-ல் இங்கு ஜனநாயக ஆட்சியை முடக்கிய ராணுவ தளபதி சுகார்தோ, முப்பது ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி நடத்தினார். இவருக்கு எதிராகக் குரல் கொடுத்த சீனர்களும் கம்யூனிஸ்டுகளும் கொல்லப்பட்டனர். ஜனநாயகத்தை நிலைநாட்டு வதற்காகப் போராட்டங்கள் வெடித்தன. விளைவாக, 1998-ல் பதவி விலகினார் சுகார்தோ. நாட்டின் முதல் அதிபரான சுகார்னோவின் மகள் மேகவதி அதிபரானார். ஆனால், அடுத்த ஐந்தாண்டுகளில் மீண்டும் சுகார்தோ குடும்பத்தினரின் கைப்பிடிக்குள் போனது அதிகாரம். சுகார்தோவின் மருமகன் பிரபாவோ சுபியாந்தோ ஆட்சியில் அமர்ந்தார்.

தன் மாமனாரைப் போலவே சர்வாதிகாரி யானார் பிரபாவோ. இதற்கு எதிராக ஜோகோ விடோடோ களத்தில் குதித்தார். நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் அதிபராக மக்களால் அன்புடன் தேர்ந்தெடுக்கப்பட்டார் விடோடோ. இப்போது, ‘விடோடோவும் ஒரு சர்வாதிகாரியாக மாறிக் கொண்டிருக்கிறார்’ என்கிற குற்றச்சாட்டுகள் கிளம்பியிருப்பதுதான் காலக்கொடுமை.

அந்தோ பாவம்... இந்தோனேஷியா!

பல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவே, ஜனநாயகத் திருவிழாவை தற்போது நடத்தி முடித்துள்ளது இந்தோனேஷியா. மீண்டும் அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார் 57 வயது விடோடோ. பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, நடுநிலைமையில் இருந்து பிறழ்ந்து, மதவாதத்தைக் கையில் எடுக்கும் அளவுக்கு விடோடோ தள்ளப் பட்டது இந்தோனேஷிய மக்களின் துர்பாக்கியமே!

கடந்த ஏப்ரல் 17-ம் தேதி இந்தோனேஷியாவில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே 21 அன்று வெளியிடப்பட்டன. இந்தோனேஷிய ஜனநாயகப் போராட்டக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அதிபர் விடோடோ, 55.5 சதவிகித வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராகியுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அதிபர் 67 வயது பிரபாவோ, 44.5 சதவிகித வாக்குகள் பெற்றுத் தோல்வியைத் தழுவியுள்ளார்.

இந்தோனேஷியாவைப் பொறுத்தவரை வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது இந்தத் தேர்தல். அதிபர், துணை அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மண்டல உறுப்பினர்கள் உள்பட 20,000 இடங்களுக்கான தேர்தல், முதல்முறையாக ஒரே நாளில் நடத்தப்பட்டன. அதாவது, இந்தியாவைப்போல ஆறு கட்டம், ஏழு கட்டம் என்று மாதக்கணக்கில் நடத்தாமல், ஒரேநாளில் நடத்தி முடித்துள்ளனர். ஆனால், சுமார் 17,000 தீவுகளைக்கொண்ட இந்தோனேஷியாவில் தேர்தலை நடத்தி முடிப்பதற்குள் தேர்தல் அலுவலர்கள் பட்டபாடு, கொஞ்சநஞ்சமல்ல. மனஅழுத்தம் காரணமாக 270 தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்தார்கள்.

அரசியல் செல்வாக்கு படைத்த ஒரு சர்வாதிகார அரசியல் குடும்ப உறுப்பினருக்கும் மரச்சாமான்கள் வியாபாரம் செய்த சாதாரண குடிமகனான விடோடோவுக்கும் இடையே நடந்த இரண்டாவது நேரடி மோதல் இது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உள் கட்டமைப்பு வசதி, ஊழல் என அனைத்து விஷயங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மதம் மட்டுமே முன்னிறுத்தப்பட்டதும் இந்தத் தேர்தல் பிரசாரத்தில்தான். இரண்டு வேட்பாளர்களுமே, ‘உண்மையான பழமைவாத முஸ்லிம் நான்தான்’ என்பதை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டனர்.

கடந்த 2014 பொதுத்தேர்தலில், ‘இஸ்லாத்துக்கு எதிரானவர் விடோடோ’ என்று எதிர்த் தரப்பினரால் முத்திரை குத்தப்பட்டார். ஒருசில மதக்கலவரங்களுக்கும் அவர் கைநீட்டப்பட்டார். அதையெல்லாம் மீறி அப்போது வெற்றியைச் சுவைத்தார். இந்தத் தேர்தலிலும் அந்தப் பிரச்னைகள் எதிரொலித்தன. எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்காகத் தானும் மதவாதத்தைக் கையில் எடுத்தார். மதக்கலவர பின்னணி கொண்ட இஸ்லாம் மதகுரு மாருஃப் அமின், துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

விடோடோவின் இத்தகைய மாற்றம், நடுநிலையாளர்களால் கடும் விமர்சனத்துக் குள்ளானது. ‘இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், கன்ஃபூஷியஸ் மதத்தினர் என்று பலதரப்பட்ட மக்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இதைக் கட்டிக் காக்கும் பொறுப்பு விடோடோவுக்கு இருக்கிறது. ஆனால், வெற்றிக்காக இவரும் மதவாதத்தைக் கையில் எடுத்திருப்பது, நாட்டை மீண்டும் சர்வாதிகார தேசமாக மாற்றிவிடும்’ என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

எல்லாவற்றையும் மீறி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏறிவிட்டார் விடோடோ. இதனால், ‘அரசியல் அடக்குமுறை தீவிரமாக்கப்படும்; சிறுபான்மை யினரின் உரிமைகள் மோசமாக பாதிக்கும்’ என்ற அச்சமும் பெரிதாக எழ ஆரம்பித்துவிட்டது. ‘பணக்கார, சர்வாதிகார வர்க்கத்துக்கு வெளி யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்பதால், ஜனநாயகத்தன்மை தொடர பாடுபடுவார் விடோடோ’ என்கிற மக்களின் நம்பிக்கை இனி என்னவாகும் என்று தெரியவில்லை.

போலி வாக்குகள் உள்ளிட்ட பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபாவோ குற்றம் சாட்டியுள்ளார். அரசியலமைப்பு நீதிமன்றத்தில் முறையிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, எந்த ஆதாரங்களையும் அவரால் தரமுடியவில்லை.

தற்போது அதிபர் முன்பாக பூதாகரமாக எழுந்து நிற்கிறது பொருளாதாரப் பிரச்னைகள். இந்தப் பிராந்தியத்தில், சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பு என்பது கடும் மிரட்டலாகவே இருந்துவருகிறது. ‘கடந்த 2014-ம் ஆண்டு விடோடோ ஆட்சிக்கு வந்த பிறகுதான் சீனப்பொருள்கள் நாட்டில் குவியத்தொடங்கின. இது இந்தோனேஷிய சுயபொருளாதாரத்தையே விழுங்கிவிட்டது’ என்கிற குற்றச்சாட்டு உண்டு.

விடோடோ, முந்தைய சர்வாதிகாரிகளின் சாட்டையைக் கையில் எடுத்து மிரட்டுவாரா... அல்லது ஜனநாயக வழியில் நாட்டை நல்வழிப்படுத்துவரா... போகப்போகத்தான் தெரியும்.

- கே.ராஜு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!