வெனிசுலா, கடுமையான நெருக்கடி சூழலைச் சந்தித்துவருகிறது. பொருளாதார வீழ்ச்சியால் அந்நாட்டு மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். இது போதாதென்று, அரசியல் குழப்பங்கள் அந்நாட்டை ஆட்டிப்படைக்கின்றன.
தென் அமெரிக்க நாடான வெனிசுலா, எண்ணெய் வளம் மிக்க நாடு. என்ன வளம் இருந்து என்ன பயன். மோசமான அரசின் நிர்வாகத்தால் செழிப்பான நாடும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என்பதற்கு வெனிசுலா சிறந்த எடுத்துக்காட்டு. 2014 -ம் ஆண்டில் இருந்தே நாட்டின் பணவீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, இன்று பணவீக்கத்தின் உச்சத்தில் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது அத்தனைக்கும் காரணம், 2010 -ம் ஆண்டு, வெனிசுலா அதிபராக இருந்த சாவேஸ் அரசு மயமாக்கலை முன்னெடுத்ததுதான். தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசு அமைச்சகங்களிடம் ஒப்படைத்தார். ஆனால், அரசுப் பிரதிநிதிகள் ஊழல்செய்து, அத்தனையையும் தங்கள் வீடுகளில் அடுக்கிவைத்தனர்.
இதனிடையே, அரசியல் குழப்பங்கள் வேறு இன்றுவரை நீடிக்கின்றன. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிகோலஸ் மதுரோ, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பதவியேற்றார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டின. மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. வெனிசுலா நாடாளுமன்றத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த எதிர்க்கட்சித் தலைவரும் சபாநாயகருமான ஜூவான் குவைடோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராகப் பிரகடனம் செய்தார். குவைடோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதனால் ஆத்திரமடைந்த மதுரோ, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைக் கண்டித்து, அந்த நாடுகளிடமிருந்து வரும் மனிதாபிமான உதவிகளை ஏற்க மறுத்துவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அமெரிக்கா, இந்த விவகாரத்தை ஐ.நா சபைக்குக் கொண்டுசென்றது. வெனிசுலாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும், வெளிநாடுகளின் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் ஆகிய அம்சங்கள் அடங்கிய தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டுவந்தது. ஆனால், ரஷ்யாவும் சீனாவும் தங்களின் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை நிறைவேறவிடாமல் செய்துவிட்டன. இதனால், அந்நாட்டு மக்களுக்குக் கிடைத்துவந்த சின்னச்சின்ன உதவிகளும் கிடைக்காமல்போனது.
இந்தச் சூழலில், நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த 20 மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அங்கிருக்கும் மருத்துவமனைகளில் நோயாளிகள் பலரின் உடல் நிலை மோசமடைந்தது. பேருந்து, ரயில், உள்ளிட்ட சேவைகளும் முற்றிலும் முடங்கின. வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. வெனிசுலா தலைநகர் கராகஸிலேயே முழு மின்தடை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் செயலிழந்து, செல்போன் டார்ச் வைத்து சிகிச்சை செய்த அவலங்கள் அரங்கேறியுள்ளன. கராகஸில் ஒரு மருத்துவமனையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
2012-ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்படும் மிகப்பெரிய அளவிலான மின் இணைப்பு துண்டிப்பு என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இன்று காலை முதல் படிப்படியாக மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுவருகிறது. நாட்டின் 70% மின்சார தேவையைப் பூர்த்திசெய்துவரும் பொலிவார் மாநிலத்தில் உள்ள கரி நீர்மின் திறன் அணையில் ஏற்பட்ட கோளாறு, மிகப் பெரிய அளவிலான மின் தடையை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. மின் நிலயங்கள் பராமரிப்பில், போதுமான முதலீடு செய்யாததால், இப்படி நடப்பதாக அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கராகஸ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், நாட்டின் மின்தடை குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அதில், ``கடந்த வியாழக்கிழமை திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் வந்துவிடும் என்று நினைத்தோம். பிறகுதான் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. என் வீட்டின் அருகிலிருந்த மருத்துவமனையில், இன்வெர்ட்டரும் செயலிழந்ததால் பெரும் துயரத்துக்கு மக்கள் ஆளாகினர். என் தோழிக்கு புற்றுநோய்க் கட்டி இருந்ததால், கால்கள் அகற்றப்பட்டன. கடந்த மூன்று மாதங்களாக ஹீமோ சிகிச்சைக்கும் கருவியில் கோளாறு என்று சிகிச்சை எடுத்துக்கொள்ளாமலேயே இருந்தாள். வேறு மருத்துவமனைக்குச் செல்லும் அளவுக்கு வசதி இல்லை. நேற்றுதான் ஹீமோ கருவி சரி செய்யப்பட்டுவிட்டதாக அவளை வரச் சொன்னார்கள். கடைசியில் மின்தடை ஏற்பட்டுவிட்டது. இந்தமுறையும் அவளால் ஹீமோ சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியவில்லை’’ என்றார் வருத்தத்துடன்.
வெனிசுலாவின் இந்த நிலைக்கு, அந்நாட்டு அரசின் மோசமான நிர்வாகத்திறன் மட்டும் காரணமல்ல, நட்பு நாடுகளின் சூழ்ச்சியும்தான். மின் தடையால் இருட்டடிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு வெளிச்சம் வந்துவிட்டது. ஆனால், இருட்டடிப்பு செய்யப்பட்டுவரும் மக்களின் எதிர்காலம்?