Published:Updated:

“வரும் தேர்தலில் இஸ்லாமியர்கள் தனித்தே போட்டியிடுவார்கள்!”

“வரும் தேர்தலில் இஸ்லாமியர்கள் தனித்தே போட்டியிடுவார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“வரும் தேர்தலில் இஸ்லாமியர்கள் தனித்தே போட்டியிடுவார்கள்!”

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் திட்டவட்டம்!

“வரும் தேர்தலில் இஸ்லாமியர்கள் தனித்தே போட்டியிடுவார்கள்!”

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் திட்டவட்டம்!

Published:Updated:
“வரும் தேர்தலில் இஸ்லாமியர்கள் தனித்தே போட்டியிடுவார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“வரும் தேர்தலில் இஸ்லாமியர்கள் தனித்தே போட்டியிடுவார்கள்!”

லங்கையில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்பு துயரங்களின் தாக்கம் இன்னும் தொடர்கிறது. அங்கிருக்கும் முஸ்லிம் மக்கள் அனுபவித்துவரும் உளவியல் சித்ரவதைகள் ஏராளம். குண்டுவெடிப்பு சம்பவம் முஸ்லிம் சமூகத்தின் கலாசாரத்தில் மட்டுமன்றி அரசியலிலும் அதிகார மையங்களிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் எதிரொலியாகவே இலங்கையின் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூஃப் ஹக்கீம் தலைமையில் ஒன்பது அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழகம் வந்திருந்த ரவூஃப் ஹக்கீமைச் சந்தித்தோம்.

“தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகான இலங்கை எப்படி இருக்கிறது?”

“சில அந்நிய சக்திகள், ‘இலங்கையில் மீண்டும் குழப்பநிலையைக் கொண்டுவர வேண்டும். அதில் குளிர்காய வேண்டும்’ என்று நினைக்கின்றன. அதற்கு இலங்கை முஸ்லிம் சமூகத்தை அவர்கள் பலிகடா ஆக்குகின்றனர். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த எட்டு பேர் மூளைச்சலவைச் செய்யப்பட்டு தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுத்தப் பட்டார்கள் என்பது விசனமாகவே இருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் இலங்கையில் ஊடுருவிவிட்டதாக ஒரு பிம்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் வெறும் பெயர் மட்டுமே. அதை, சில ஏகாதிபத்திய சக்திகள் தங்களுடைய சொந்த அரசியல் ராஜதந்திரங்களைச் செயல்படுத்துவதற்காக உபயோகிக்கின்றன. அதற்கு எங்களைப் பலியாக்குவதற்கு, நாங்கள் தலையசைக்க முடியாது.”

“வரும் தேர்தலில் இஸ்லாமியர்கள் தனித்தே போட்டியிடுவார்கள்!”

“குண்டுவெடிப்புச் சம்பவம் நியூசிலாந்து மசூதித் தாக்குதலுக்குப் பழிவாங்க நடத்தப்பட்டதாகவும் அதில் சீனா மற்றும் பாகிஸ்தானுக்குப் பங்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?”

‘‘இல்லை, இது நியூசிலாந்து தாக்குதலுக்குப் பழிவாங்க நடத்தப்பட்ட தாக்குதலாகத் தெரியவில்லை. உண்மையான குற்றவாளிகளிடமிருந்து பார்வையைத் திருப்புவதற்காகவே இப்படிச் சொல்கிறார்கள். இது, வேண்டுமென்றே திணிக்கப்பட்ட தீவிரவாதம். சர்வதேச ராஜதந்திரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இதுதொடர்பாக ஒரு தெளிவு கிடைக்கும். சில ஏகாதிபத்திய சக்திகள் மத்திய கிழக்கு நாடுகளில் ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறேன் என்று சொல்லி அந்த நாடுகளைச் சின்னாபின்னமாக்கியது எல்லோருக்கும் தெரியும். அப்படித்தான் இலங்கை மீதான தாக்குதலையும் பார்க்கிறேன்.

அதேசமயம் வெறும் யூகத்தின் அடிப்படையில் மட்டும் காரணத்தைச் சொல்வது, பிரச்னைக்கு மேலும் திரியைக் கொளுத்துவதாகவே இருக்கும். ஆனால், ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். இலங்கையின் ஒருமைப்பாட்டுக்குக் களங்கம் விளைவிப்பவர்களை, இலங்கை முஸ்லிம் சமூகம் இன்னும் ஆத்திரத்துடனும் உக்கிரமாகவும் எதிர்கொள்ளும்.

இலங்கையில் தேவாலயங்களில் தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைத் தீவிரவாத குற்றவாளிகளுக்கு இஸ்லாமிய சமய ஆராதனையுடன் நல்லடக்கம் செய்வதற்குக்கூட நாங்கள் இடம் கொடுக்கவில்லை. அவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கிவிட்டோம். இப்போதாவது எங்கள் சமூகம் இலங்கைமீது கொண்டிருக்கும் நாட்டுப் பற்றைப் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.”

“2020-ம் ஆண்டு இலங்கையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை இந்தச் சம்பவம் எந்த அளவுக்குப் பாதிக்கும்?”

‘‘தற்போதைய எதிர்க்கட்சிகளுக்குப் பெரிய ஆதாயம் இருக்கிறது. மக்களின் பதற்றநிலையைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். அப்பாவி இஸ்லாமிய மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். 29 இஸ்லாமிய மசூதிகள் தாக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமிய மக்களின் நடை, உடை, பாவனையில்... கலாசாரத்தில் பெரும் மாற்றம் திணிக்கப்பட்டிருக்கிறது. புர்கா அணியத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. அரசின் அசமந்தப் போக்கினால் ஏற்பட்ட சம்பவத்தை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மக்கள்மீது மட்டும் திணிப்பது நியாயமற்றது. அதனால்தான் கட்சி பேதமின்றி ஒன்பது அமைச்சர்கள் பதவி விலகினோம். சமூகத்தின் பாதுகாப்பு பிரதானமானது என்பதைச் சகல தரப்பினருக்கும் வலுவாகத் தெரிவிக்கவே இதைச் செய்திருக்கிறோம். வரும் தேர்தல்களில் இஸ்லாமிய மக்கள், யாரையும் நம்பி வாக்களிக்கத் தயாராக இல்லை. தனித்தே தேர்தலைச் சந்திக்கவும் தயாராக இருக்கிறார்கள்.”

“வரும் தேர்தலில் இஸ்லாமியர்கள் தனித்தே போட்டியிடுவார்கள்!”

“இலங்கைச் சம்பவம் தொடர்பாக இஸ்லாமியச் சமூகம் ஒன்றிணைந்து, ஏன் சர்வதேச அளவில் குரல் எழுப்பவில்லை?”

“நிச்சயம் பாரிய எதிர்ப்பு முஸ்லிம் சமூகத்தில் வெளிப்படுகிறது. இஸ்லாத்தின் மதபோதனை களில் இல்லாத தீவிரவாதம், இஸ்லாத்தின் பெயரால் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், இஸ்லாம் ஒரு சாந்தி மார்க்கம். பிற மதத்தவர்களை இம்சிக்கக் கூடாது என்று எங்கள் மதம் கூறுகிறது. தலையெடுக்கும் மதத் தீவிரவாதம் அனைத்தும் களையெடுக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.”

“சுற்றுலாவை நம்பியிருக்கும் இலங்கையின் பொருளாதாரம், இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவங்களால் எந்த அளவுக்குப் பாதிக்கப் பட்டிருக்கிறது?”

“99 சதவிகிதம் பாரியத் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டு முதலீடு களிலும் நிறையப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை ஏற்படுத்திய அந்நிய சக்திகளும் இதைத்தான் விரும்பின. அதன் வழியாகக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை அரசியலில் அவர்கள் தலையிடலாம் என்பதுதான் அவர்களின் எண்ணம்.”

“ஈழத்தமிழர்களை ஒடுக்க எடுத்துக்கொண்ட அக்கறையை, நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவ தில் இலங்கை அரசு மேற்கொண்டதா?”

“ஈழத்தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்தது ஒரு சிவில் போராட்டம். தமிழர்களின் போராட்டத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்திருக்கிறோம். தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்தி ஒரு வலுவான இயக்கக் கட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கியிருந்தார்கள். ஆனால், அவர்களையே அசைத்துப் பார்த்த அளவுக்கு, இலங்கையின் பாதுகாப்புத்துறை சிறப்பாகவே இருந்தது. விடுதலைப்புலிகளுக்கு வலுவான காரணமும் சமூக ஆதரவும் இருந்தது. ஆனால், இலங்கை பாதுகாப்புத் துறைக்கு  காரணமும் இல்லை; சமூக ஆதரவும் இல்லை.”

“முள்ளிவாய்க்கால் முற்றப் படுகொலை அரங்கேறி 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் சர்வதேச விசாரணை சாத்தியப்படாமலேயே இருக்கிறதே?”

“நீதித்துறையின் மீது நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணையில் ஒரு கூட்டுப்பொறிமுறை வேண்டும். இதைத்தான் தமிழ்ச் சமூகம் தொடர்ந்து நிர்ப்பந்தித்து வருகிறது. சார்பெடுக்காத வகையில் நீதி விசாரணை நடைபெற வேண்டும். தமிழ்ச்சமூக மக்களின் சந்தேகங்களும் தெளிவுபெறும் வகையில் நீதி விசாரணை அமைய வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.”

“வரும் தேர்தலில் இஸ்லாமியர்கள் தனித்தே போட்டியிடுவார்கள்!”

“இந்தியாவில் மீண்டும் மோடி பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் நிலையில், இலங்கையுடனான உறவு எப்படி இருக்கும்?”

“இந்தியாவுடன் தொப்புள் கொடி வழி உறவு கொண்டது இலங்கை. பிரதமர் மோடி பதவி ஏற்றதும் மாலத்தீவுக்கும் இலங்கைக்கும்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதைவைத்தே இலங்கையுடனான இந்திய உறவு எப்படி இருக்கும் என்பதை யூகிக்கலாம். மற்றபடி மோடியின் உள்நாட்டு அரசியலை நாங்கள் விமர்சிக்க முடியாது.”

“இந்தியாவில் காங்கிரஸின் தோல்வி குறித்து...”

“என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் மாநிலக் கட்சியான தி.மு.க திட்டமிட்டுச் செயல்பட்ட அளவுக்குக்கூட தேசியக் கட்சியான காங்கிரஸ் நாடு முழுவதும் செயல்படவில்லை. அதனால் அமித்ஷா - மோடி மந்திரம் பலித்திருக்கிறது. விரும்பியோ, விரும்பாமலோ அதனை நாங்கள் வரவேற்றுத்தான் ஆகவேண்டும்”

“இலங்கைத் தமிழர்கள் இன்னும் தமிழகத் தலைவர்கள்மீது நம்பிக்கையுடன் இருக்கிறார்களா?” 

“கருணாநிதியைப்போல இலங்கைத் தமிழர்களுக்காகப் பேசிய ஒருவரைப் பார்க்க முடியாது. பிரிவினைப் போராட்டத்தின் தொடக்கக் காலத்தில் முதன்முதலாக இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் அவர்தான். ஈழப்போராட்டத்துக்காக அவர் கொடுத்த விலை அதிகம். ராஜீவ் காந்தி கொலைக்காகப் பழி சுமத்தப்பட்டார். ஈழத்துக்காக அவர் இழந்ததை எல்லாம் தமிழர்கள் மறந்துவிட முடியாது.”

- ஐஷ்வர்யா, படங்கள்: கே.ஜெரோம்