Published:Updated:

கடத்தல் உலகின் முடிசூடா மன்னன் கிரேட் எஸ்கேப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கடத்தல் உலகின் முடிசூடா மன்னன் கிரேட் எஸ்கேப்!
கடத்தல் உலகின் முடிசூடா மன்னன் கிரேட் எஸ்கேப்!

கதறும் இத்தாலி... பதறும் உருகுவே!

பிரீமியம் ஸ்டோரி

சிறைச்சாலைகளிலிருந்து குற்றவாளிகள் தப்புவது, தென் அமெரிக்க நாடுகளில் ஒரு சாதாரண  நிகழ்வுதான். ஆனால், உருகுவே நாட்டின் தலைமைச் சிறையிலிருந்து, ‘ரொக்கோ’ தப்பியிருப்பதை அவர்களால் சாதாரணமாகக் கடக்க முடியவில்லை. அந்தச் சம்பவம் உருகுவேவுக்குத் தலைகுனிவையும் இத்தாலிக்கு பெரும் தலைவலியையும் ஒரு சேர ஏற்படுத்தியிருப்பது மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகத்தையே அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கிறது.

இத்தாலியின் தென்கோடியில் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய பகுதியான ‘காலபிரியா’ என்ற பகுதியில் உருவாகி, இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் ஒரு மிகப் பெரிய மாஃபியா கும்பலின் பெயர்தான் என்ட் ரங்கைய்டா. இத்தாலியின் முதல் எதிரி, இந்தக் கும்பல்தான்!

கொகெய்ன் எனப்படும் போதைப்பொருள் கடத்தலில், உலகின் நம்பர் ஒன் என்ட்ரங்கைய்டாதான். சுமார் 10,000 பேருடன் இயங்கும் இந்தக் கடத்தல் சாம்ராஜ்யம், அமெரிக்கா முதல் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ வரை பரவி உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் சட்ட விரோதமாக நுழையும் கொகெய்னில் 80 சதவிகிதம் வரை இந்தக் கும்பலால்தான் கடத்தப்பட்டு விநியோகிக்கப் படுகிறது. கொகெய்ன் வர்த்தகத்தில் என்ட்ரங்கைய்டாவின் ஆண்டு வருமானம் 25 பில்லியன் டாலர்! 20 ஆண்டு களுக்கும் மேலாக இத்தாலி தேடிக்கொண்டிருக்கும் இந்த சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னன் ரொக்கோ மொராபிடோவைத்தான் இப்போது கோட்டை விட்டிருக்கிறது உருகுவே.

கடத்தல் உலகின் முடிசூடா மன்னன் கிரேட் எஸ்கேப்!

கடந்த வாரம், உருகுவே தலைநகர் மான்டேவிடியோ மத்திய சிறையிலிருந்து இரவு 12 மணிக்கு, ரொக்கோ உள்பட நான்கு கைதிகள் தப்பிவிட்டனர் என உருகுவே நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்தபோது, இத்தாலி உறைந்து போனது. ‘சிறையின் மேற்கூரையில் ஓட்டை போட்டு, நால்வரும் வெளியேறியுள்ளதாகவும் பின்னர் அருகிலிருந்த பண்ணை வீட்டுக்குள் நுழைந்து, அங்கு இருந்த பெண்மணியை மிரட்டி, அவரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் உருகுவே அரசு கூறியுள்ளது. ரொக்கோவோடு தப்பிய மற்ற மூவர் வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள். அவர்கள் அர்ஜென்டினா, பிரேசில் நாடுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய குற்றவாளிகள். அவர்களும் முக்கியக் குற்றவாளிகள் என்றாலும் ரொக்கோ தப்பித்ததுதான் பெரும் பிரச்னையாக மாறியிருக்கிறது.

ரொக்கோவை ஒப்படைக்கத் தேவையான நடைமுறை கள் முடிக்கப்பட்டு, இத்தாலிக்குக் கொண்டு செல்லவிருந்த வேளையில், அவர் தப்பித்ததால், இத்தாலி கோபத்தில் கொந்தளித்தது. “எங்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது; உருகுவே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்” என்று அலறினார் இத்தாலியின் உள்துறை அமைச்சர் மாட்டியோ சால்வினி. ‘சிறைக் காவலர்களின் உதவி இல்லாமல், அவர்கள் மேற்கூரையை ஓட்டை போட்டுத் தப்பிக்க வாய்ப்பு இல்லவே இல்லை’ என்று சொல்லி கண்கள் சிவக்கிறது இத்தாலி. ‘அன்று இரவு சிறையிலிருந்த கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை’ என்று உருகுவே சிறை நிர்வாகம் சொல்லியிருப்பதுதான் இத்தாலியின் கோபத்துக்குக் காரணம்.
தப்பிய நால்வரில், ஒருவரும் அர்ஜென்டினா விடம் ஒப்படைக்கப்பட வேண்டிய குற்றவாளியு மான ‘லியோனார்டோ சால்டோ’வை உடனடியாகக் கைதுசெய்துள்ளது உருகுவே காவல்படை. ரொக்கோ உள்ளிட்ட மற்ற மூவரையும் விரைவில் கைது செய்துவிடுவோம் எனக் கூறியிருக்கிறது.  மற்ற இருவர் எப்படியோ... ஆனால், ரொக்கோவைப் பிடிப்பது எளிதான காரியம் இல்லை என்று புலம்புகிறது அவரின் நெட்வொர்க்குகளை நன்கு அறிந்த இத்தாலி.

கடத்தல் உலகின் முடிசூடா மன்னன் கிரேட் எஸ்கேப்!

இத்தாலியில் உள்ள ஆஃப்ரிகோ நகரில் பிறந்து பின்பு மிலன் நகரில் குடியேறியவர் ரொக்கோ மொராபிடோ. பல்வேறு எதிர்ப்புகளை மீறி அசாத்திய துணிச்சலோடு ‘தரமான கொகெய்ன், உடனடி பணப் பட்டுவாடா’ எனக் கடத்தல் பிசினஸில் கால்பதித்து 25 வயதுக்குள்ளாகவே, மாஃபியா கும்பலின் முக்கியத்  தலைவராக வளர்ந்தவர்.  அவர் மாஃபியா கும்பலின் முக்கிய தலைமையாக உருவான பிறகு, ஐரோப்பாவில் கொகெய்ன் வர்த்தகம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. சில ஆண்டுகளிலேயே இந்தக் கும்பல் இத்தாலி அரசுக்குப் பெரும் சவாலாக மாறியது. இவர்களை ஒழிப்பதே முதல் வேலை என கங்கணம் கட்டிக்கொண்டு 1994-லிருந்து, பல கடத்தல்காரர்களை வேட்டையாடிய இத்தாலியால், கடைசிவரை ரொக்கோவை மட்டும் நெருங்க முடியவில்லை. 2002-ம் ஆண்டு இத்தாலியிலிருந்து தப்பி, ‘ஃப்ரான்சிஸ்கோ ஆட்டிலியோ காபெலெட்டோ சவ்சா’ என்ற பெயரில் பிரேசில் நாட்டு போலி பாஸ்போர்ட் மூலம் உருகுவே நாட்டில் தலைமறைவானார்.

20 ஆண்டுகளாக இத்தாலியால் நெருங்கவே முடியாத ரொக்கோவைக் கடந்த 2017-ல், ஒரு ஹோட்டலில் உணவருந்திக்கொண்டிருந்தபோது, சர்வ சாதாரணமாகக் கைதுசெய்தது உருகுவே காவல் படை. தன் பெயரை மறைத்து, போலி பாஸ்போர்ட் மூலம் உருகுவேயில் பதுங்கியிருந்த ரொக்கோ.... தன் மகளைப் பள்ளியில் சேர்க்கச் செல்லும்போது,  தனது உண்மையான பெயரை பதிவுசெய்திருந்தார். பாஸ்போர்ட்டில் ஒரு பெயரும் பள்ளி பதிவேட்டில் வேறொரு பெயரும் இருக்க... அகப்பட்டார் ரொக்கோ! போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காகத்தான் முதலில் அவரைக் கைதுசெய்தது உருகுவே காவல்படை.

அவரை இத்தாலியிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகளை உருகுவே, முக்கால்வாசி முடித்திருந்த நிலையில், இத்தனை ஆண்டுகள் சேர்த்து வைத்திருந்தக்  கோபத்தோடு ரொக்கோவுக்காகக் காத்திருந்தது இத்தாலி. ஆனால், கடைசி நேரத்தில்.... ரொக்கோ எஸ்கேப்!

- கே.ராஜு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு