Published:Updated:

`இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணம்’ - #GalwanValley மோதல் குறித்து ராணுவம்

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இந்திய சீனா வீரர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த மிக மோசமான தாக்குதலில் சீனா தரப்பில் 43 ராணுவ வீரர்கள் பலியாகி இருக்கலாம் என ஏ.என்.ஐ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

``லடாக் பகுதியில் இருந்து வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது. இந்திய சீனப் படைகளுக்கு இடையே மிக மோசமான அளவில் தாக்குகதல்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வருகிறது. அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம்” -இப்படியான பதிவுகள் சில நேற்று மதியம் சமூகவலைதளங்களில் வெளியானது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் இந்திய சீன வீரர்கள் கல்வான் பள்ளத்துப் பகுதியில் மிக மோசமாக தாக்கிக் கொண்டதாகவும் இதில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரி உள்ளிட்ட 3 பேர் வீர மரணம் அடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்திய ராணுவம் தரப்பில் இந்தத் தகவல் உறுதியும் செய்யப்பட்டது.

சீனா - இந்தியா
சீனா - இந்தியா

உடனடியாக எல்லைப்பகுதியில் இருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் விதமாக அங்கு இருக்கும் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இந்தியாவில், டெல்லியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து பிரதமர் மோடிக்கும் விரிவாக எடுத்துரைத்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.

ஏன் இந்திய-சீன எல்லையில்  இத்தனை சலசலப்பு..? - ஒரு ஃப்ளாஷ்பேக் #MyVikatan

தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளியானாலும் சீன தரப்பில் உயிரிழப்புகள் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் தொடக்கத்தில் வெளியாகவில்லை. எனினும் இந்திய ராணுவம் சார்பில் வெளியான அறிவிப்பில், `சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது' என குறிப்பிடபட்டிருந்தது. இந்த நிலையில், சீனாவில் சுமார் 5 வீரர்கள் வரை பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. சீன வெளியுறவுத் துறை அமைச்சகம், `சீன ராணுவ வீரர்களை இந்திய வீரர்கள் தாக்கியதாகவும், இந்தியா இந்த விவகாரத்தில் தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது’ எனவும் கருத்து தெரிவித்தது.

சீனா -இந்தியா
சீனா -இந்தியா

இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, ``ஜூன் 15-ம் தேதி இரவு சீன வீரர்கள் அத்துமீறிய நிலையில், இருநாட்டு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கெனவே நடைபெற்ற அதிகாரிகள் சந்திப்பில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால், சீனா தரப்பில் அதை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை” என்றார்.

20 இந்திய வீரர்கள் வீர மரணம்!

இந்தத் தாக்குதல் விவகாரத்தில் இரவில் வெளியான தகவல்கள் தான் அதிர்ச்சி ரகம். ``ஜூன் மாதம் 15/16 தேதி இரவில் இந்திய சீனா படைகள் எல்லைப்பகுதியை விட்டு விலகும்போது கடுமையான, மிக மோசமாக மோதலில் ஈடுபட்டது. எல்லைப்பகுதியில் பணியில் இருந்த இந்திய வீரர்கள் 17 பேர் இந்தத் தாக்குதலில் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். கடுமையான காயங்கள் காரணமாகவும் பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலை காரணமாகவும் அவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த மோதலில் பலியான இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இந்திய ராணுவம் நாட்டின் எல்லைகளையும் இறையான்மையையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது” என இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய சீனா வீரர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த மிக மோசமான தாக்குதலில் சீனா தரப்பில் 43 ராணுவ வீரர்கள் பலியாகி இருக்கலாம் என ஏ.என்.ஐ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அந்தப் பகுதியில் சீனா ராணுவ ஹெலிகாப்டர் போக்குவரத்து அதிகரித்துள்ளதாகவும், தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களை எடுத்து செல்வதற்காக ஹெலிகாப்டர்கள் வந்து சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதற்றத்துக்கு என்ன காரணம்?

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு வந்த சீனா, எல்லைகள் தொடர்பான நடவடிக்கைகளில் தீவிரம் கட்டியது. லடாக்கில் இந்திய பகுதிக்குள், கட்டமைப்பை இந்தியா வலுபடுத்தி வருகிறது. இந்தியாவின் சாலை பணியை எதிர்த்த சீனா எல்லையில் படைகளை குவித்தது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 5,6 தேதிகள் நடந்தது. தொடர்ந்து உயரமான பகுதிகள் பணிகளில் இருந்த அனுபவமிக்க ராணுவ வீரர்களை இந்தியாவும் எல்லைப்பகுதியில் நிறுத்தியது. தொடர்ந்து இந்தியா, சீனா இடையே முறையற்ற தாக்குதல்கள் அவ்வப்போது நடக்க பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதே நேரம் இந்தியா பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர விரும்பியது.

இந்தியா - சீனா எல்லை
இந்தியா - சீனா எல்லை

இதைத்தொடர்ந்து இருநாட்டு ராணுவ உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 6-ம் தேதி நடந்தது. அதில், எல்லையில் அமைதியை நிலைநாட்டவே, இரு நாடுகள் விரும்புவதாக ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. அதேபோல், பதற்றத்தைத் தணிக்க படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து சீனா படைகள் பின் வாங்கத் தொடங்கியதாக கூட கடந்த வாரத்தில் செய்திகள் வெளியாயின. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ராணுவப் படைகள் பின்வாங்கும் நேரத்தில்தான் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்திய எல்லைக்குள் நின்றிருந்த ராணுவ கர்னலை சீன வீரர்கள் கற்களால் தாக்கியதாகவும், அதையடுத்தே இரு நாட்டு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சீனா தரப்பில், `இந்திய ராணுவம் சீனா எல்லைக்குள் அத்துமீறு நுழைந்து தாக்குதல் நடத்தியது’ என்று கூறப்படுகிறது.

`நள்ளிரவுவரை நீடித்த கைகலப்பு; கற்களால் தாக்குதல்!’- #GalwanValley-யில் என்ன நடந்தது?

எல்லையில் தாக்குதல் நடப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் 1975 -ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் உயிரிழப்புகள் நடக்கும் அளவுக்கு தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதுவும் துப்பாக்கி மோதலாக இல்லாமல் இரு தரப்பும் நேரடியாக கம்பு, கம்பிகள், கற்கள் கொண்டு தாக்கி, அது உயிரிழப்பு வரை சென்றிருக்கிறது. இந்தியா - சீனா இடையே விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐ.நா கவலை!

``எல்லைப் பகுதியில் இந்திய - சீன ராணுவம் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் வரும் தகவல்கள் கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் கூடுதலான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பதற்றத்தைக் குறைக்க படைகளை இரு நாடுகள் விலக்குவதாக வரும் தகவல்கள் மகிழ்ச்சி அளிக்கிறது” என ஐ.நா கருத்து தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு