அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும்`டைம்' இதழ், ஒவ்வோர் ஆண்டும் உலகின் செல்வாக்குமிக்க 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுவருகிறது. அந்தவகையில், 2021-ம் ஆண்டில் செல்வாக்கு பெற்ற 100 பேரின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்திய பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா உள்ளிட்ட இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இவர்களைப் பற்றி டைம் இதழின் ஆசிரியர் குழு தெரிவித்திருக்கும் கருத்துகள் இங்கே...
மோடி குறித்து...
`` இந்தியா சுதந்திரம்பெற்ற 74 ஆண்டுகளில், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்குப் பிறகு மூன்றாவது முக்கியத் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்தியாவை அதன் மதச்சார்பற்ற தன்மையிலிருந்து விலக்கியிருப்பதாகவும் விமர்சித்திருக்கிறார்கள். சிறுபான்மையினர், பத்திரிகையாளர் மீது நடந்த தாக்குதல்கள் இவர்மீது இந்த விமர்சனத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மோடி, சோஷலிசப் பொருளாதரக் கொள்கையில் இருந்தவந்த இந்தியாவை, முதலாளித்துவ எதிர்காலத்தை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறார் எனவும், கொரோனா இரண்டாவது அலையை சரிவரக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது" என மோடி குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மம்தா பானர்ஜி குறித்து...
``மம்தா, இந்திய அரசியலில் அங்கம் வகிக்கும் மற்ற பெண்களைப்போல் இல்லை. ஒருபோதும் இவர் ஒருவரின் மனைவி, தாய், மகள், உறவினர் என்றோ அடையாளப்படுத்தப்படவில்லை. மம்தா, கடுமையான வறுமைச் சூழலிலிருந்து வந்தவர். சுருக்கெழுத்துப்பணி, பால் விற்பனை செய்வது போன்ற வேலைகள் செய்தே தன் குடும்பத்தை வழிநடத்தியர். மம்தாவைப் பொறுத்தவரை, அவர் கட்சியைத் தலைமையேற்று நடத்தவில்லை. அவர்தான் ஒட்டுமொத்த கட்சியாகவே இருக்கிறார். ஆணாதிக்கச் சமூகத்தில் தனது திறமையை நிரூபித்தவர்.

2021 தேர்தலில், பாஜக-விடம் பணபலம், ஆள்பலம், அதிகாரபலம் இருந்தபோதிலும், மேற்குவங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் வென்று தனது முதலமைச்சர் பதவியைத் தக்கவைத்தார். வெல்ல முடியாதவராகத் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி விரிவாக்க லட்சியத்துக்கு எதிராக மம்தா ஒரு கோட்டைபோல் நின்றார். தேசிய அளவில் மோடியை எதிர்கொள்வதற்கு ஏதேனும் கூட்டணி அமைந்தால், மம்தா பானர்ஜி அதில் முக்கியப் பங்கு வகிப்பார் என்பது உறுதி" என டைம் இதழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதார் பூனாவாலா குறித்து...
``கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் தலைவர்தான் அதார் பூனாவாலா. இவர் 2021-ம் ஆண்டுக்குள், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 1.1 பில்லியன் தடுப்பூசி டோஸ்களை வளர்ந்துவரும் நாடுகளுக்கு அளிப்பதாக உறுதியளித்திருக்கிறார்" என டைம் இதழ் கருத்து தெரிவித்திருக்கிறது.

இவர்கள் மட்டுமில்லாமல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங், முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், தாலிபன் இயக்கத்தின் துணைத் தலைவர் மௌல்வி அப்துல் கானி பராதர் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.