Published:Updated:

கொரோனா பயம்; உணவு, போக்குவரத்து இல்லை! - சீனாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள்

சீனா
சீனா ( AP )

சீனா முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் அங்கு 25 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் மிக வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸால் அந்நாடு முழுவதும் உள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். வுகான் உட்பட 14 நகரங்கள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளன. இந்தக் கொடூர வைரஸ் தாக்குதலால் இதுவரை 41 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், வுகான் நகரில் மட்டும் சுமார் 39 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் மாணவர்கள் மட்டும் 25 என்றும் அதில் 20 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் கூடுதல் தகவல். இது மட்டுமல்லாது இசாங் நகரில் 14 மாணவர்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
AP

சீனாவில் இருக்கும் இந்தியர்கள் பற்றிப் பேசியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ``சீனாவின் நிலைமையை நாங்கள் உற்றுக் கவனித்து வருகிறோம். வைரஸ் தொடர்பாக உலகச் சுகாதார அமைப்பு வழங்கிய ஆலோசனைகளையும் பின்பற்றி வருகிறோம். வுகானில் உள்ள இந்தியர்களுக்குத் தேவையான உணவு, வசதி ஆகியவற்றை எங்கள் அதிகாரிகள் ஏற்பாடு செய்துவருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை

வுகானில் சிக்கியுள்ள தங்கள் பிள்ளைகளின் நிலை பற்றி வேதனை தெரிவித்துள்ளனர் இந்தியாவில் உள்ள பெற்றோர். ``என் மகள், சீனாவின் வுகானில் 6-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். அங்கு அவளின் நிலைமையை நினைத்து எங்களுக்கு மிகவும் அச்சமாக உள்ளது. வுகானில் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனாவில் என் மகள், அவருடன் படிக்கும் சக மாணவிகளுடன் தங்கியுள்ளார். வுகான் நகரம் முழுவதும் மூடங்கிப்போயுள்ளதால் அவர்கள் உணவு இல்லாமல் பெரும் சிரமமடைந்துள்ளனர். மேலும், அங்கு அனைத்துக் கடைகள் மற்றும் போக்குவரத்து மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
AP

முன்னதாக அவர்கள் சேமித்து வைத்திருந்த உணவும் தீர்ந்துவிட்டதாக எங்களிடம் கூறினர். அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியே வர முடியவில்லை என்றும் தெரிவித்தனர். வுகானில் இருந்து வேறு நகரங்களுக்குச் செல்லலாம் எனப் புல்லட் ரயில் நிலையத்துக்கு வந்து கியூவில் காத்திருந்துள்ளனர். ரயிலுக்கான டோக்கன் வழங்கிக்கொண்டிருக்கும்போதே திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் சொல்ல முடியாத துயரத்தைச் சந்தித்து வருகின்றனர்” எனக் கேரளாவைச் சேர்ந்த ஒரு தந்தை பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு