புலித்தடம் தேடி...

சைப்பிரியாவின் அதிர்ச்சியில் மௌனித்து இருந்த போராளி, அடுத்த சில நிமிடங்களில் போரின் உக்கிரமானத் தருணங்​களை மீண்டும் சொல்லத் தொடங்கினார்.

''இசைப்ரியாவின் இறுதி நாட்களைப்போலவே, கேணல் ரமேஷையும் நான் முழுமையாக அறிந்தவன். அவர் எங்களோட இருந்தவர். கருணா துரோகம்செய்து போன பிறகு கிழக்கு மாகாணத்தைக் கட்டிக் காத்தவர். இறுதியில் சரண் அடையவே அவர் முடிவெடுத்தார். தன்னோடு இருந்த பொடியனிடம் (அவருக்கு மெய்க்காவலர்போல் இருந்தவர்), 'காசு இருந்தா தாங்கடா’ என்று கேட்டார். பொடியனும் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தான். அதில் 5,000 ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு, 'தளபதிகள் சரணடையும் இடம்’ என்று ராணுவம் அறிவித்த இடத்தை நோக்கிப் போனார். அவரும் சித்ரவதைசெய்து கொல்லப்பட்ட தகவல் பல நாட்கள் கழித்து​தான் தெரியவந்தது. இப்படி நம்பிக்கைத் துரோகத்​துடன் கொல்லப்பட்ட போராளிகள்தான் அதிகம். அவர்கள் கொல்லத்தான் செய்வார்கள் என்பதை அறிந்ததால்தான், நான் சரண் அடையவில்லை!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சரண் அடையாமல் நீங்கள் என்ன மாதிரி நடந்துகொண்டீர்கள்?''

''நானும் சனத்தோடு சனமாக நடந்து போனேன். அப்ப ஜீன்ஸ் பேன்ட் போட்டு இருந்தேன். நடந்த​படியே அதை அவிழ்த்துவிட்டு சாரத்தைக் கட்டிக்​கொண்டே நகர்ந்தேன். ஜீன்ஸ் போட்டிருந்தா போராளின்னு நினைப்பாங்க. பொதுசனம் மாதிரி சாரம் கட்டிக்கிட்டேன். முல்லைத் தீவை நோக்கிப் போனோம். நந்திக்கடல் வாவியில் பிணங்கள் அப்படியே மிதந்துகொண்டு இருந்தன. ராணுவம் சுட்டுச்சுட்டு உடுப்பை உருவி​விட்டு தண்ணிக்குள் தூக்கி எறிஞ்சுகொண்டு இருந்ததைப் பாத்துக்கிட்டே ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் நகர்ந்தோம். உயிர் போகாமத் துடிதுடிச்சவங்களோட சத்தம் கேட்டுட்டே இருந்தது. தண்ணிக்குள்ள இருந்து கையை மட்டும் தூக்கிட்டு யாரோ கூப்பிடுற மாதிரி​யும் இருந்தது. இந்த வாவியில செத்துக்கிடந்த சனம் மொத்தம் எவ்வளவு இருக்கும்னு சொல்ல முடியாது. அவ்வளவு சனம்!

புலித்தடம் தேடி...

இதைப் பார்த்துக்கிட்டே ராணுவத்திடம் போனம். ஏதோ சாப்பிடணும்போல இருந்தது. தண்ணி குடிக்கணும்போல இருந்தது. நாய்க்குப் போடற மாறி எதையோ தூக்கிப் போட்டாங்க. சின்ன போட் நிறுத்தி தண்ணிய அதுக்குள்ள  விட்டாங்க. தண்ணி குடிக்கற நெரிசல்லயே பல சனம் செத்துப்போச்சு. ராணுவப் பகுதிக்குள்ள அரசியல் துறை பொறுப்பாளர் கரிகாலனையும், நீதி நிர்வாகத் துறை பொறுப்பாளர் பர.ராஜசிங்கத்தையும் சந்தித்தன். அவங்க, 'வாங்க... ராணுவ மேஜர்ட்ட பேசி அங்கால போலாம்’ என்றார். 'நான் வரல... சனத்தோடவே நிக்கறன்’ என்றேன். அவர்கள் கொஞ்சம் நேரம் கழிச்சு, ராணுவ மேஜர்ட்ட பேசி கம்பிக் கூட்டுல இருந்து வெளியில் போயிட்டாங்க. அவங்களுக்கு பனந்தோப்புல வெச்சு பிஸ்கட் பாக்கெட்கள், தண்ணி போட்டல்கள் தந்தாங்கள். அதைப் பார்த்ததும், 'போயிருந்தா தண்ணியாவது குடிச்சிருக்கலாம்’ என்று ஆச வந்தது. அங்கால எனக்குத் தெரிஞ்ச போராளிகளும் நெறைய இருந்தனர். கொஞ்ச நேரத்துல ஒரு வண்டி வந்து, அவங்கள ஏத்திக்கொண்டு போய்விட்டது. இதுவரைக்கும் அவங்க என்ன ஆனாங்கன்னு தெரியாது. இருக்காங்களா செத்தாங்களான்னு ஏதும் தெரியல. மூணு வருஷம் ஆச்சு.

புலித்தடம் தேடி...

அரசியல் பொறுப்பாளர் நடேசனும் பலரோடு கதைச்சுக்கிட்டு முல்லைத் தீவு நோக்கிப் போனார். என்னைப் பாத்தவர், என் பேரச் சொல்லிக் கூப்பிட்டார். 'வாங்க போலாம்’ என்றார். 'சரண​டையப் போறோம்’ என்று சொல்லவே இல்லை. அவங்களோட போக எனக்கு விருப்பம் இல்ல. 'சனத்​துக்கு என்ன நடக்குதோ, அதுவே எனக்கும் நடக்கட்டும்’ என்று போகாமல் சனத்தோடவே நின்டன். ஒருவேளை ராணுவத்திட்ட சொல்லி அவங்களோட போயிருந்தனா  இன்​றைக்கு உங்களோட பேசுறதுக்கு நானும் இருந்திருக்க மாட்டன்'' என்று சொல்லும்​போது அவர் முகம் இருண்டுகிடந்தது.

''சண்ட முடிஞ்ச பிறகு ரெண்டு நாள் கழிச்சு கையில் இருந்த பணம், பொருள எல்லாம் பிடுங்கிக்​கிட்டு பேருந்துல ஏத்துனாங்க. ஓமந்தைக்கு (தமிழீழ எல்லையாக முன்பு இருந்தது) கொண்டுபோய் பொதுமக்களையும் போராளிகளையும் தரம் பிரிச்சாங்க. அங்க இருந்துதான் முகாம்களுக்குப் பிரிச்சு அனுப்பினாங்க. முள்ளிவாய்க்கால்ல இருந்து ஓமந்தைக்குப் போக ரெண்டு நாள் பிடிச்​சது. கிட்டத்தட்ட 3,000 பேருந்துகள்... லட்சக்கணக்கான சனம். பேருந்துல ஏறுன பிறகுதான் வழியில தொண்டு நிறுவனங்கள உணவு கொடுக்க அனுமதிச்சாங்க. அவங்க எங்களுக்கு பிஸ்கட், தண்ணி போட்டல் எல்லாம் தந்தாங்கள். ஓமந்தை செக் பாயின்ட்ல எங்களுக்கு ஆசை வார்த்தை காட்டினாங்க. ''ஒரு நாள் இயக்கத்துல இருந்தாலும் இங்க வந்து பதிஞ்சுபோட்டு போங்க. கருணா 25 வருசமாக கேணல் நிலையில இயக்கத்துல இருந்தவர். இப்ப அரசாங்கத்தோடு சேந்து நல்ல நிலைமையில இருக்கார். அவரப்போலதான் உங்களையும் நல்லா வெச்சிருப்பம். பதிஞ்சிட்டு நீங்க போய் உங்க குடும்பத்தோடு சேர்ந்துக்கலாம்'' என்று அறிவிச்சுட்டு இருந்தது ராணுவம்.

தரம் பிரிச்சப் பின்ன போராளிகளான எங்களை ராணுவக் கேணல் சந்திர சிறீ வந்து பார்த்தார். 'உங்கள நாங்க போராளிகளாகப் பார்க்கலை. பொது​மக்களாகத்தான் பார்க்கறம். உங்கள யாராவது அடிச்சு துன்புறுத்தனா என்கிட்ட வந்து சொல்லுங்க’ என்றார். எங்கள அடிச்சுக் கொடுமைப்படுத்தின சம்பவங்கள அவரிடம் சொன்னம். அவரும் அந்த ராணுவ அதிகாரியக் கூப்பிட்டுக் கண்டிச்சிட்டுப் போயிட்டார். மறுபடியும் ராணுவ அதிகாரி, 'நீங்க கேணலிடம் சொல்றீகளா?’ என்று மீண்டும் அடிச்சுப்போட்டுப் போனார்.''

புலித்தடம் தேடி...

''உங்களைப்போலவே மற்ற முக்கியப் போராளி களும் வந்துவிட்டார்களா? அதில் தப்பித்தவர்கள் உண்டா?''

''இறுதியில் நந்திக்கடலில் ராணுவ அரணை உடைத்துத் தப்பும் முயற்சி நடந்துச்சு. சண்ட இறுதிக் கட்டத்தை நெருங்கறபோது, எல்லாரும் தப்ப முடியாது என்ற நிலைமை வந்தது. மே 14 போல தப்புவது என்று முடிவுசெய்து, ராணுவ அரணை உடைச்சு வெளியில போகணும் என்ற திட்டம் இருந்தது. ஆனா அந்த பாதையின் ஊடாக எல்லோரும் போக முடியாது, சிலர் மட்டும்​தான் போக முடியும் என்று முடிவானது. தலைவர், பொட்டு அம்மான், சூசைனு இன்னும் பல முக்கியப் போராளிகள் போவதா முடிவானது. அவங்​களோட சில போராளிகள் சேர்ந்தாங்கள். சில மணி நேர இடைவெளியில மூன்று தடவ ராணுவ அரணைத் தாக்கினாங்கள். மூணுமே தோல்வியில முடிஞ்சது. ஆனா அதுக்கப்பறம் தாக்கனாங்களா, தப்பிச்சாங்களான்னு எனக்குத் தெரில.''

''இறுதி முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன?''

''மக்களோடு இருப்பது, ராணுவத்திடம் சரண் அடைவது, தப்புவது ஆகிய மூன்று நிலைகள் எடுக்கப்பட்டன. இது போராளிகளின் முடிவுக்கே விடப்பட்டது'' என்று அவர் விளக்கம் சொல்லி வந்தபோது, எனக்கு இலங்கைத் தளபதி அளித்த பழைய பேட்டி ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. மே 19, 2009 அன்று 53-வது டிவிஷனின் கட்டளைத் தளபதி கமல் குணரட்ன  அளித்த பேட்டியில், ''எனக்கு ஆள் பற்றாக்குறை உள்ளது, எனக்கு மேலும் படைகள் தேவை என்று கிளிநொச்சியில் உள்ள 58-வது டிவிசனின் கட்டளைத் தளபதி சிவேந்திர சில்வாவிடம் கேட்டேன். அவர் தன் படையை அனுப்பினார். கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அவர்கள் வர, கிட்டத்​தட்ட இரண்டரை மணி நேரம் பிடித்தது. அதன் பிறகுதான் நாங்கள் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை மீட்டோம். ஆனால், இரண்டரை மணி நேர இடைவெளியில் ராணுவ அரணை உடைத்துக்கொண்டு புலிகளின் இரண்டு ட்ரூப் வெளியே தப்பிவிட்டது. அதில் யார் இருந்தார்கள் என்பது தெரியவில்லை'' என்று சொல்லி இருந்தார். அதாவது, புலிகளின் முக்கியத் தளபதிகளில் பலர் சரண் அடைந்தார்கள். பலர் தப்பினார்கள். அதில் யார் யார் இருந்தார்கள் என்பதே இன்று வரை மர்மமாக இருக்கிறது.

அந்த சந்திப்போடு முடிந்தது அன்றைய இரவு. அடுத்த நாள் விடிந்ததும் மீண்டும் குருதிபடிந்த நந்திக்​கடல் பரப்புக்கே செல்ல வேண்டிய கட்டாயம். மனதில் அந்த அழிவுகளைப் பார்க்கும் தெம்பு இல்லை என்றாலும்!

புதுமாத்தளன், அம்பலவன் பொக்கனை, வலை​ஞர் மடம் போன்ற பகுதிகளை சுற்றிவந்தேன். ஊர் பெயர்ப் பலகைகள் அனைத்திலும் சிங்களப் பெயருக்கு முன்னுரிமை தந்தும், தமிழில் எழுதுவதை​யும் சிங்களச் சொல்லாடலில் எழுதி இருந்தனர்.

இந்த புதுமாத்தளன் வழியேதான் புலிகளின் கட்டுக்கரை இருந்தது. அதற்கு ராணுவம் தீவிரவாதிகளின் கட்டுக்கரை (Terrorist ditch cum bund) என்று பெயரிட்டு இருந்தது. 'இங்குதான் புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயமாகப் பிடித்துவைத்து இருந்தனர்’ என்று எழுதப்பட்டு இருந்தது. 'இந்தக் கட்டுக்கரையை 20 ஏப்ரல் 2009 அன்று ராணுவம் பிடித்த பிறகுதான், 1,70,000 மக்களை கொடூரத் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து ராணுவம் மீட்டது’ என்று ஒரு ராணுவச் சாதனைப் பட்டியலாக, அந்த முகப்பு விளக்கம் விளங்கியது.

தொலைக்காட்சிகளில் நாம் மீண்டும் மீண்டும் பார்த்த இடத்தில், மௌனமாக நிற்கிறேன்!

புலித்தடம் தேடி...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism