Published:Updated:

`சற்றே குறைந்த பாதிப்பு; களத்தில் இறங்கிய குடியரசு கட்சி’ - 3 அமெரிக்க மாகாணங்களில் ஊரடங்கு தளர்வு

அமெரிக்கா ஊரடங்கு
அமெரிக்கா ஊரடங்கு ( AP )

அமெரிக்காவில் குடியரசு கட்சி ஆளுநர்கள் ஆளும் 3 மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு 9 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000-த்தைக் கடந்துள்ளது.

அமெரிக்கா
அமெரிக்கா
AP

கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள அமெரிக்கா அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்து வருகிறது. இதற்கிடையில் அமெரிக்காவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கைத் தளர்த்தக் கோரி அந்நாட்டின் பல மாகாணங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ட்ரம்பும் ஆதரவு தெரிவித்து, ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

`அது வெறும் காய்ச்சல் அல்ல... அமெரிக்கா மீதான அட்டாக்..!’ - ட்ரம்ப் காட்டம் #Corona

ஆனால், இதற்கு பல மாகாண ஆளுநர்களும் மருத்துவ நிபுணர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஆளுநர்களுக்கும் அதிபருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. கொரோனா விவகாரத்தில் ஏற்கெனவே தாமதமாகச் செயல்பட்டதால்தான் தற்போது அமெரிக்கா மிக நெருக்கடியான நிலையில் உள்ளதாகப் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது மீண்டும் ஊரடங்கைத் தளர்த்தினால் அது 2-வது அலை வீச வாய்ப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்கா
AP

இந்நிலையில் அமெரிக்காவில் முதற்கட்டமாக 3 மாகாணங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியா, அலாஸ்கா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மாகாணங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் சில வணிக நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் இதுவரை 23,216 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 907 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் அலாஸ்காவில் 339 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஓக்லஹோமாவில் 3,193 பேர் பாதிக்கப்பட்டு 194 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 3 மாகாணங்களிலும் ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர்கள் பதவியில் உள்ளனர்.

‘சீனாவுக்கு மட்டுமே ட்ரம்ப் தடை விதித்தார், ஆனால்...?’ - நியூயார்க் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆன பின்னணி

மற்ற 2 மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் ஜார்ஜியாவில்தான் அதிகமாக வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இருந்தும் அந்த மாகாண ஆளுநர் ஊரடங்கைத் தளர்த்துவதில் மிக ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் அவர்கள் மேலும் வைரஸ் பரவாமல் தடுப்பதிலும் கவனமாக உள்ளனர். இந்த 3 மாகாணங்களிலும் உள்ள சலூன், ஸ்பா, ஜிம், டாட்டூ பார்லர் போன்றவை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் அடுத்த வாரம் முதல் உணவு விடுதிகளும் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்
நியூயார்க்
AP

அமெரிக்காவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க், கலிஃபோர்னியா போன்ற மாகாணங்கள் தற்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பில்லை என அந்தந்த மாகாண ஆளுநர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். கடந்த சில நாள்களாக அமெரிக்காவில் வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அதற்கு மாறாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நியூயார்க்கை பொறுத்தவரை அங்கு கடந்த 2 தினங்களாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு