புலித்தடம் தேடி...
##~##

வெளிநாட்டுச் சுரண்டல் நிறுவனங்களுக்குக் காடுகளைத் தாரைவார்த்துவிட்டு பூர்வ குடிகளை வெளியேற்றிவரும் இந்திய அரசு, 'மற்றொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் எப்படித் தலையிடுவது’ என்று சொல்லிக்கொண்டே இலங்கையில் தமிழ் மக்களின் நிலங்களைப் பறிப்பதற்கு உதவியுள்ளதுதான் வேதனை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதைப் பற்றிய நிலவரங்களை அறிய, அரசியல் சார்ந்த நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர், ''2006 காலப் பகுதியில் சம்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நிலங்கள், 'அனல் மின் நிலையக் கட்டுமானத்துக்காக’ என்று அப்போது கூறப்பட்டது. ஆனால், இந்த ஆறு வருட கால ஓட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. இலங்கையின் மின்சார சபையோடு இணைந்து இந்திய நிறுவனம் ஒன்றும் அனல் மின் நிலையப் பணிகளில் ஈடுபடும் என்று சொல்லப்பட்டது. அதற்கான செலவுகளை இந்தியாவும் இலங்கையும் சரிபாதியாகப் பகிர்ந்துகொள்ளும் என்று ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. ஆனால், அந்த ஆக்கிரமிப்புப் பகுதிகள் ராணுவத்துக்கு சொந்தமானதாக மாறி விட்டதே தவிர, எந்த அனல் மின் நிலையப் பணிகளும் இப்போது வரை நடப்பதாகத் தெரிய வில்லை.

''அங்கிருந்து நாங்கள் துரத்தி அடிக்கப்படும்​போது, நிராதரவாகத்தான் ஓடி வந்தோம். இந்த ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் அனல் மின் நிலையம் கட்டி அதில் கிடைக்கும் லாபத்தைவிட பல மடங்கு லாபத்தை விவ சாயத்திலும் மீன் பிடியிலும் எடுக்கலாம். அந்த அளவுக்கு வளமான விவசாய பூமி இது. இங்கிருந்த எங்கள் வீடுகள், கோயில்கள், பள்ளிகள், பொதுக் கட்டடங்கள் எல்லாமே இடிக்கப்பட்டு விட்டன. இந்தப் பகுதிகளைப் பார்ப்பதற்குக்கூட அனுமதி கிடையாது. எங்கள் சொந்தக் கிராமங்களை விட்டு அகதி முகாம்களில் இன்று இருக்கிறோம். பொட்டல் காணிகளைக் காட்டி அரசும் ராணுவமும் அங்கு குடியேறச் சொல்கிறது. 'எங்கள் காணிதான் எங்களுக்கு வேண்டும். நாங்கள் ஏன் அடுத்தவர் காணியில் இருக்க வேண்டும்?’ என்று ஆறு ஆண்டுகளாகப் போராடுகிறோம். அதனால், எங்களுக்குக் கொடுத்துவந்த நிவாரணப் பொருட்களையும் நிறுத்தி விட்டனர். நிதிகளும் நிறுத்தப்பட்டு விட்டன. எப்படியெல்லாமோ எங்களைத் துரத்த வழி தேடுகிறது அரசு. இத்தனை காலம்தான் எங்களை வாழவிடவில்லை. இப்போதுமா? நாங்கள் இந்தியாவுக்கு என்ன பாவம் செய்தோம். இந்தியாவை எங்கள் நாடுபோலத்தானே பார்த்தோம்? இப்போதும்கூட எங்கள் வீட்டுச் சுவர்களில் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடியவர்களின் படங்களைத்தானே மாட்டிவைத்து இருக்கிறோம்? ஆனால், ஆறுதலுக்குக்கூட எங்களுக்கு இந்தியா நல்லது செய்ய விரும்பவில்லை'' என்று வெம்பினார் அவர். கூடவே வானமும் தன் பங்குக்குக் கண்ணீர் சிந்த ஆரம்பித்தது.

புலித்தடம் தேடி...

மழையிலேயே அங்கிருந்து கிளம்பினோம். வழியில் புலிகள் கட்டி இருந்த நீதிமன்றம் ஒன்றைக் கண்டோம். அது சேதம் அடைந்து இருந்தது. அதன் முன்சுவற்றில் காரல் மார்க்ஸின் தத்துவ வரிகள் எழுதப்பட்டு இருந்தன. அப்போது நண்பர், ''உலகத் தலைவர்கள் கனவு கண்ட தேசமாக எங்கள் நாடு இருந்தது. ஓர் பெண் தைரியமாக இரவில் போகலாம். அறிவாளர்களைக் கொண்டாடிய நாடாக இது இருந்தது. நீதிகளைக் காத்த மன்றம் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? புலிகள் காலத்தில் சொத்து வழக்கே இரண்டு மாதங்களுக்கு மேல் நடக்காது. அனைத்து வழக்குகளும் இரண்டு மாதங்களில் முடிந்து விடும். நான் புலிகள் காலத்தில் வாழ்ந்தது எல்லாம் கனவு போல உள்ளது'' என்றார்.

உப்பாறு பாலத்தைக் கடந்தோம். நண்பர் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். ''முன்பு இந்தப் பாலத்தின் அந்தப் பக்கம் புலிகளும் இந்தப் பக்கம் ராணுவமும் இருந்தனர். புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையும்போது கடுமையான சோதனைகள் நடக்கும். உணவு எடுத்து சென்றால்கூட, ஒரு வருக்குத் தேவையான உணவை மட்டும்தான் எடுத்துச் செல்ல வேண்டும். அந்த அளவுக்குக் கட்டுப்பாடு. இந்தப் பாலத்தின் மையப்பகுதியில் நடந்த சண்டையின் இறுதியில் ராணுவத்தினர் 48 பேர் கொல்லப்பட்டனர். அதில் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் தப்பித்து தாய்லாந்துக்குச் சென்று ள்ளார். அங்கிருந்து பல மாதங்கள் கழித்து வந்த அவர், மீண்டும் ராணுவத்தை அழைத்து வந்து புலிகள் மீது இருந்த கோபத்தைத் தீர்த்துக்கொள்ள மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றார்'' என்றபோது, சிங்கள வன்மம் எப்படியெல்லாம் ஊட்டப்பட்டுள்ளது என்பதை உணர முடிந்தது.

புலித்தடம் தேடி...

திரிகோணமலை நகரத்தை நெருங்கினோம். திரிகோணமலை, தமிழீழத்தின் தலைநகரம் என்று புலிகளால் அறிவிக்கப்பட்ட நகரம். இந்தத் தலைநகரின் துறைமுகத்தைத்தான் அமெரிக்கா, புலிகளிடம் கேட்டதாகக் கூறப்படுகின்றது. உலகின் மிக முக்கிய இயற்கைத் துறைமுகங்களுள் திரிகோணமலைத் துறைமுகமும் ஒன்று. இந்தத் துறைமுகம்தான் இரண்டாம் உலகப் போரின்போது தென்கிழக்கு ஆசியத் தலைமையகமாகச் செயல் பட்டது. இங்கிலாந்திடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகும், இங்கு இங்கிலாந்தின் கடற்படைத் தளம் இருந்தது. 1957-க்குப் பிறகுதான் அது அகற்றப்பட்டது. அதேவேளையில், 1951-ல் இலங்கையுடனான ஒப்பந்தப்படி, 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா நிகழ்ச்சிகள்’ சிலோன் ரேடியோ மூலம் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது. இதன் மூலம் ஆசியக் கண்டத்துடனான தன் தொடர்பை அமெரிக்கா தக்கவைத்து இருந்தது.

இந்தத் துறைமுகத்தைப் புலிகள் அன்று அமெரிக்காவிடம் கொடுத்திருந்தால், இந்தியாவின் பாதுகாப்புப் பிடி அமெரிக்காவின் கையில் 25 ஆண்டுகளுக்கு முன்பே போயிருக்கும். 1987-ல் ஜெயவர்த்தனே-ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தில் திரிகோணமலை துறைமுகம் பற்றிய குறிப்புகள் முக்கியமானவை. 'இந்திய நலனுக்குக் குந்தகம் விளையும் என்பதால், திரிகோணமலையோ அல்லது வேறு எந்த இலங்கைத் துறைமுகமோ, எந்த அயல்நாட்டின் ராணுவ உபயோகத்துக்கும் தரப்படக் கூடாது’ என்கிறது அந்தக் குறிப்பு.

இலங்கையின் துறைமுகங்கள் மற்ற நாட்டுக்கு சென்றால், இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று அன்றே எண்ணப்பட்டது. ஆனால் இன்று, இலங்கையின் பல துறைமுகங்கள் சீனாவின் வசம். இப்படி ஒப்பந்தத்தை மீறி இந்தியப் பாதுகாப்புக்கு ஆபத்தாக சீனாவுக்கு இடம் அளித்துள்ள இலங் கைதான் இந்தியாவுக்கு நட்பு நாடா?

ஊடறுத்துப் பாயும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism