புலித்தடம் தேடி...
##~##

'இளைஞர்களே இப்போது ராணுவக் கண்களின் இலக்கு’ என்பதை  உறுதிப்படுத்துவதாக நடந்ததுதான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல். பிரபாகரன் பிறந்த நாளன்று நான் திரிகோணமலையில் இருந்தபோதும், மாவீரர் தினத்தின்போது நான் மட்டகளப்பில் இருந்த​போதும், அங்கு இருந்த அதே ராணுவப் பதற்றமும் கண்காணிப்பும் யாழ்ப்பாணத்திலும் இருந்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாவீரர் நாளில் விளக்கேற்றும் நேரமான மாலை 6.05 நெருங்க நெருங்க, ராணுவம் யாழ்ப்​பாணப் பல்கலைக்கழகத்தை நெருங்கியது. மாலை 5 மணிக்கெல்லாம் ஆண்கள் விடுதிக்குள் ஆயுதங்களோடு புகுந்துவிட்டது. துப்பாக்கியைக் காட்டி மாணவர்கள் மிரட்டப்பட்டனர். மாலை 6.05 ஆனதும் பெண்கள் விடுதியில் விளக்கேற்றப்பட்டுவிட்டது. ஆவேசத்துடன், பெண்கள் விடுதியின் பூட்டுகளை உடைத்துக்கொண்டு நுழைந்த ராணுவம், பெண்கள் மீதான வெறியை அங்கிருந்த பொருட்​களின் மீது காட்டி அடித்து நொறுக்கியது. சில பெண்களையும் தாக்கியது.

புலித்தடம் தேடி...

அதே நேரம்... ஆயுதத்தோடு இருந்த ராணுவத்தையும் மீறி ஆண்கள் விடுதி​யில் விளக்குகள் ஏற்றப்பட... அங்கும் தாக்குதல்கள் நடந்தன. மாவீரர் நாள் முடிந்தும் பதற்றம் தீரவில்லை. பல்கலைக்​கழகத்துக்குள் நுழைந்த ராணுவத்தைக் கண்டித்து வாயில் கறுப்புத் துணிக் கட்டி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 'மாணவர்களைப் பாதுகாக்காத துணை​வேந்தர் இங்கு எதற்கு? உள்ளே நுழைந்த ராணுவத்தினரை, நிர்வாகம் ஏன் தடுக்கவில்லை? துணைவேந்தரால் ராணு​வத்தைத் தடுக்க முடியாவிட்டால், வீதியில் இருக்கும் படைச் சிப்பாயை துணைவேந்தர் பதவியில் அமர்த்திவிடுவதுதானே?’ என்று மாணவர்களின் போராட்டக் குரல்கள் ஓங்குகிறது. ராணு​வத்துக்கு எதிரான குரல்களோடு பல்கலைக்​கழகத்தின் ஒரு நுழைவாயிலில் இருந்து மற்றொரு நுழைவாயிலுக்கு மாணவர்கள் நகர்கின்றனர். அந்த இடைவெளிக்குள் மாணவர்களைத் தடுத்து நிற்கிறது காவல் துறை. 'நீங்கள் வெளியே வர அனுமதி இல்லை’ என்று வாதங்கள் நடக்கும்போதே... திடீரென காவல் துறை தாக்க, ராணுவமும் இணைந்துகொண்டு தாக்கி​யது. இதில் யாழ்ப்பாணத்தின் 'உதயன்’ பத்திரிகை ஆசிரியரும் தாக்கப்பட்டார். காவல் துறையும் ராணுவமும் மாணவர்களைத் தேடித் தேடிப் பிடித்துச் சென்றது. ஓர் அமைதிப் போராட்டத்தை ரத்தப் போராட்டமாக ராணுவத்தின் தூண்டல் மாற்றிவிட... அடுத்தடுத்த நாட்களில் மாணவப் பிரதிநிதிகள் கைதுசெய்யப்பட்டனர். 2009 போரின் இறுதிக் கட்டத்தில் சிக்கிய விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு கொடுத்ததுபோல, மாணவர்களுக்கும் புனர்​வாழ்வு நடவடிக்கைகள் என்று ராணுவம் பிரச்னையைத் திசைமாற்றியது. இதைக் கண்டித்துதான் தமிழ்க் கட்சிகளும் தமிழர்களுக்கு ஆதரவான சிங்களக் கட்சியும் டிசம்பர் 4-ம் தேதி ஓர் அமைதி ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது. அதற்காகத்தான் யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் சென்றேன்.  

புலித்தடம் தேடி...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல் பற்றி அங்கு படிக்கும் சிங்கள மாணவி ஒருவர் இணையத்தில் பதிவுசெய்திருந்தது உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறது. 'நாங்கள் புலிகளை அழிக்கிறோம் என்று தமிழ் மாணவர்களைப் புலிக​ளாக்கி இருக்கிறோம். நவம்பர் 26-ம் தேதி மாலையில் இருந்து சக தமிழ் மாணவி​களின் கண்களில் ஒருவிதமான தாக்கம் இருந்தது. மாணவர்களை ராணுவத்தினர் தாக்க, மாணவிகளே புலிகளுக்கான விளக்குகளை ஏற்றினர். தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த தமிழ் மாணவிகள், அன்று திடீரெனப் புலிகளாக மாறியிருந்தனர்... அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை... உணர்வால் புலிகளாகவே இருந்தனர்’ என்பதே அந்தப் பதிவு. ஆணாகட்டும் பெண்ணாகட்டும்... தமிழ் இளைஞர்கள் மனதில் எப்படியான தீ கனன்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு சிங்கள மாணவியின் பதிவே சான்று. இன்றாகட்டும் அன்றாகட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்... தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தீ.

சிங்கள ராணுவத்தைக் கண்டித்து தமிழ் மாணவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் தொடங்கியது. கிட்டத்தட்ட 100 பேர் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற, மக்கள் என்னவோ எதுவுமே அங்கு நடக்காததுபோல் பொம்மை​களைப்போல அந்த ஆர்ப்பாட்ட நிகழ்வை கடந்து சென்றனர். ராணுவம், ஆயுதத்தோடு குறுக்கும் நெடுக்கும் கடந்துகொண்டு இருந்தது. ஓர் ராணுவ அதிகாரி யுனிசெப் மகிழுந்தில் வந்து ஆர்ப்பாட்டத்தைப் பார்வையிட்டுச் சென்றார். வழக்கத்தைவிட புகைப்படம் எடுப்பவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. நான் அருகில் இருந்த நண்பரிடம், 'யாழ்ப்பாணத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்கள் இருக்காங்களா?’ என்று கேட்க... அவர், 'படம் எடுக்கிறவர்களில் பெரும்​பாலானோர் ராணுவத்துக்கும் அரசுக்கும் பணத்துக்காக வேலை செய்பவர்கள்’ என்றார். இதுவரை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவரங்களை விவரிப்பதோடு ஆர்ப்பாட்டமும் முடிவுற்றது.

புலித்தடம் தேடி...

யாழ்ப்பாணப் பயணத்தின் இறுதியில், மீனவப் பிரதிநிதி ஒருவரிடம் நான் பெற்ற தகவல்கள், இலங்கைத் தமிழ் மீனவர்கள் நிலைமையும் தமிழக மீனவர்கள் நிலைமையும் அப்பட்டமாகப் பிரதி​பலித்தன. அவர் பேச்சு, கடல்கூட எவ்வளவு சிங்கள​மயம் ஆக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தியது. ''வடகிழக்கில் 30 வருடங்களுக்கும் மேலான இனப் பிரச்னையில் பாதிக்கப்பட்ட தொழில்களில் மீன்பிடியும் ஒன்று. அந்தக் காலகட்டங்களில் பெருமளவில் நாங்கள் மீன்பிடியில் ஈடுபடவே இல்லை. இன்று, சிங்களக் கடற்படை எவ்வளவோ கட்டுப்​பாடுகளோடும் பாஸ் நடைமுறையோடும்தான் மீன் பிடிக்க அனுமதிக்கிறது. இன்று, இங்குள்ள மீனவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, அதன் மூலம் வாங்கிய வலைகளை கடலில் விரிக்கின்றனர். ஆனால், அந்த வலைகளை எங்கள் சொந்தங்களான தமிழக மீனவர்களே அறுத்துவிட்டுச் செல்வது வேதனையிலும் வேதனை. அதையும் மீறி தமிழகக் கடலோரங்களில் இன்று நடைமுறையில் உள்ள இழுவைப் படகுகளும் அதன் மடிமுறையும் தங்கூசி வலைகளும் மொத்தக் கடல்வளத்தையும் சுரண்டுகின்றன. இந்த இழுவைப் படகுகளின் மடிகள், டிராக்டரைப் போல் மொத்தமாக கடலின் கீழ் பாகத்தில் இருக்கும் மொத்தத்தையும் அள்ளிச் செல்லும். இந்த வலைகள் மொத்தமாக தமிழகக் கடலோரத்தின் வளத்தை அழித்துவிட்டது. அதனால், அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வேண்டியுள்ளது. சிங்களக் கடற்படையினர், அதைக் காரணமாக வைத்துக்கொண்டு அவர்களைத் தாக்குகிறார்கள்; கொல்கிறார்கள். எங்களுக்கு உதவுவதுபோல் கடற்படை நடித்து, தமிழக மீனவர்​களுக்கும் எங்களுக்கும் பிரச்னையைத் தூண்டத் திட்டமிடுகின்றனர்.

எங்கள் அப்பன் காலத்திலும் என் பால்ய காலத்​திலும் தமிழக மீன்வர்களும் நாங்களும் கடலில் பார்த்துப் பேசியபடி மீன் பிடித்துள்ளோம். அன்று, அங்கும் இங்கும் கடல் வளத்தை அழிக்காத வலை​களைப் பயன்படுத்தினோம். ஆனால், இன்று தமிழக மீனவர்கள் பயன்படுத்துகிற இழுவைப் படகுகள் கடல் வளத்தை அழிக்கிறது. தங்கூசி வலைகள் நாங்கள் விரித்திருக்கும் வலையை அறுத்துச் செல்கிறது. எங்களின் நிலைமையைப் புரிந்து​கொள்ளுங்கள் என்று சிங்கள அரசிடமா நாங்கள் கேட்க முடியும்? எங்கள் சொந்தங்களான தமிழக மீனவர்களிடம்தானே கேட்க முடியும். இழுவைப் படகுகள் நம் எதிர்காலக் கடல் வளத்தை அழிக்கும். எதிர்காலத்தில் இங்கு மீன் பிடிக்கப்போவது நம் சந்ததிதானே?'' என்றவரின் பேச்சை இடைமறித்து, ''இதற்குத் தீர்வுதான் என்ன?'' என்று கேட்டேன்.

அவர், ''இழுவைப் படகுகள் தடைசெய்யப்பட வேண்டும். தமிழகக் கடல் வளம் தொடர்பாக ஆய்வு​கள் செய்யப்பட வேண்டும். தங்கள் கடல் எவ்வளவு அழிந்துள்ளது என்பதை தமிழக மீனவர்கள் புரிந்துகொள்ளும் திறனை இந்தக் கடல் வள ஆய்வுகள் உணர்த்தும். கடல் வளம் அழிந்தால் நம் நிலமும் அழியும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறோம்?'' என்று தனது ஆதங்கத்தைக் கொட்டி​னார்.

தமிழகக் கடலோரங்களில் மீன் இல்லை என்ற நிலையால், எல்லையற்ற கடலை மீனவர்கள் கடக்​கின்றனர். பிழைப்புக்காக எல்லையைக் கடந்துவரும் மீனவன், சிங்களக் கண்களுக்கு தமிழனாகத்தான் தெரிகிறான். இலங்கை எல்லையில் மட்டும் கடற்படை தாக்கவில்லை. இந்திய எல்லைக்குள் நுழைந்தும் சிங்களக் கடற்படை தாக்குகிறது. இன அழிப்புப் போரின் நீட்சியாய், மீனவர்களைக் கொல்வதை ஒரு வேலையாகவே வைத்துள்ளது இலங்கைக் கடற்படை. கடல் வளத்தைக் காப்பதோ இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களுக்கு வாழ்வா​தாரத்தை ஏற்படுத்துவதோ கடற்படையின் நோக்கம் அல்ல. தமிழன் கண்ணில் பட்டாலே, தாக்க வேண்டும். தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்​படையிடம் சிக்கினால் முதலில் திட்டுவது, 'இந்திய வேசி மகனே’ என்றுதான்.

உயிர்க் கொலைகள் சாதாரண நிகழ்வாக, அன்றாட செய்தியாக மாறிவிட்டது. மீன் தேடும் கடலில், தமிழனின் உயிரைத் தேடுகிறது சிங்களக் கடற்படை.

பயணத்தை முடித்துக்கொண்டு, விமான நிலையம் நோக்கி விரைகிறேன்.

அடுத்த இதழில் முடியும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism