Published:Updated:

கேஸ் சிலிண்டர் சமையல்; ரயிலில் பற்றி எரிந்த தீ! - பாகிஸ்தானை உலுக்கிய 65 பேரின் மரணம்

பாகிஸ்தானில் விரைவு ரயிலில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 65 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் ரயில் விபத்து
பாகிஸ்தான் ரயில் விபத்து ( Twitter/@RadioPakistan )

பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ரயில் வழித்தடங்கள்தான் இன்று வரையிலும் பயன்பாட்டில் உள்ளன. பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதால் பல துறைகளை மேம்படுத்த போதுமான நிதி வழங்கப்படுவதில்லை. அதனால் பாகிஸ்தான் ரயில்களும் நிர்வாகமும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அங்கு அடிக்கடி ரயில் விபத்துகள் நடப்பது வழக்கமாகி வருகின்றன.

பாகிஸ்தான் ரயில் விபத்து
பாகிஸ்தான் ரயில் விபத்து
Twitter/@RadioPakistan

இந்நிலையில், இன்று காலை கராச்சியிலிருந்து ராவல்பிண்டி நோக்கி தேஸ்கம் (Tezgam) என்ற விரைவு ரயில் புறப்பட்டது. அந்த ரயில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஹிம் யார்கான் பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும்போது திடீரென ரயிலின் ஒரு பெட்டியில் தீ பற்றி எரிந்தது. இது உடனடியாக மற்ற மூன்று பெட்டிகளுக்கும் பரவத்தொடங்கியுள்ளது. இதனால் நடுவழியிலேயே ரயில் நிறுத்தப்பட்டது.

இந்தத் தீவிபத்தில் இதுவரை 65 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சர் யாஸ்மின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ரயில் விபத்து
பாகிஸ்தான் ரயில் விபத்து
Twitter/@RadioPakistan

இதையடுத்து விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட பயணிகளே காரணம் என அந்நாட்டு மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷெரின் மஸாரி கூறியுள்ளார். “ இன்று காலை கராச்சியிலிருந்து புறப்பட்ட ரயிலில், ஒரே பகுதியைச் சேர்ந்த சில பயணிகள் ஏறியுள்ளனர். அவர்கள் கேஸ் சிலிண்டர், உணவுப் பொருள்கள், எண்ணெய் போன்ற அனைத்தையும் தங்களுடன் கொண்டுவந்துள்ளனர்.

Vikatan

அவர்கள் காலை ரயிலிலேயே உணவு சமைத்து உண்ண முடிவெடுத்து அதற்காகத் தயார்படுத்திக் கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டர் வெடித்துள்ளது. சிலிண்டருக்கு அருகில் எண்ணெய்யும் இருந்ததால் தீ மளமளவென எரிந்து பிற பெட்டிகளுக்கும் பரவியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ரயில் விபத்து
பாகிஸ்தான் ரயில் விபத்து
Twitter/@RadioPakistan

தேஸ்கம் விரைவு ரயில் பாகிஸ்தானின் மிகவும் பழைமையான மற்றும் பிரபலமான ஒரு ரயில். இந்த விபத்தினால் இரண்டு பிஸினஸ் கிளாஸ் பெட்டிகளும் ஒரு எகானமிக் வகுப்பு பெட்டியும் முற்றிலும் எரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ` இந்த விபத்து தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்' எனப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.