இராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் வைத்து, இரான் ராணுவப்படை தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றது அமெரிக்கா. அவர், அமெரிக்கர்களைத் துன்புறுத்தியதாகவும் அமெரிக்காவுக்கு எதிராகப் பல சதிகளை நடத்தியதாகவும் சுலைமானியின் கொலைக்குக் காரணம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதற்கு, இரான் பதில் தாக்குதல் நடத்தியது. |

இராக் நாட்டில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடந்ததை ஒப்புக்கொண்டது அமெரிக்கா. எனினும், இந்தத் தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் நேரவில்லை எனத் தெரிவித்தார், அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப். அமெரிக்க இரான் இடையே ஆன போர்ப் பதற்றம், உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்தது. இதனிடையே, இவ்விரு நாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உலக நாடுகள், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துவந்தன.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் நேற்று, இராக்கின் பாக்தாத் நகருக்கு வடக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைகள் பறந்தன. ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடந்ததை இராக் ராணுவம் ஒப்புக்கொண்டது. இராக்கின் அல்-பலாத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அங்கிருந்த அமெரிக்கப் படைகள், எப்போதோ அங்கிருந்து வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த இரு வாரங்களாக நீடித்துவரும் பதற்றம் காரணமாகவே அவர்கள் இந்தத் தளத்தை காலிசெய்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இராக் ராணுவம், இந்தத் தாக்குதலுக்கு `கட்யுஷா’ ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 4 இராக் ராணுவர் வீரர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இராக்கில் உள்ள இந்தத் தளம் மிக முக்கியமானது. காரணம், இந்தத் தளத்திலிருந்துதான் அமெரிக்காவின் எஃப் 16 ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும், தாக்குதல் நடந்த சமயத்தில் அங்கு 15 -க்கும் குறைவான அமெரிக்க வீரர்கள் மற்றும் இரண்டு எஃப் 16 ரக விமானம் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இரான் அமெரிக்கா இடையே ஆன போர்ப் பதற்றம் தற்போது இன்னும் அதிகமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது, உலக நாடுகளைக் கவலைகொள்ளச் செய்துள்ளது.