Published:Updated:

கண்முன்னே கொல்லப்பட்ட பெற்றோர்கள்; உதவிக்காக 23 கி.மீ தூரம் ஓடிய சிறுவன்!- பதறவைத்த மெக்சிகோ கும்பல்

மெக்சிகோ தாக்குதல்
மெக்சிகோ தாக்குதல் ( AP )

மெக்சிகோவில் போதை கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் ஆயுதங்கள் பயன்படுத்தும் பழக்கமும் போதைப் பொருள்கள் பயன்படுத்தும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. போதைப் பொருள்கள் கடத்தும் கும்பல்களுக்கு இடையே நடக்கும் மோதல்களினால் ஒன்றும் அறியாத பொதுமக்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதே போன்ற சம்பவத்தில் 6 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் அங்கு நடந்துள்ளது.

மெக்சிகோ தாக்குதல்
மெக்சிகோ தாக்குதல்
AP

அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட லீபாரோன் என்ற குடும்பம், அமெரிக்கா- மெக்சிகோ என இரட்டை குடியுரிமை பெற்றவர்களாக இருந்துள்ளனர். மெக்சிகோவில் வசித்து வந்த இவர்கள் கடந்த திங்கள் கிழமை ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றுள்ளனர். மூன்று கார்களில் சுமார் 17 பேர், சோனோரா - சிஹுஹுவா ( Chihuahua) எல்லைப் பகுதியில் பயணித்துள்ளனர்.

அதில் பெற்றோர்கள் 3 பேர், சிறுவர், சிறுமியர் 14 பேர் என மொத்தம் 17 பேர் சென்றுள்ளனர். அவர்களில் கை குழந்தைகளும் இருந்துள்ளனர். அந்தக் குடும்பம் பயணித்த கார், சரியாக பவிப்ஸ் நகரில் ஆள் நடமாட்டம் இல்லா மலைப்பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த சில மர்ம நபர்கள் அந்த காரை நோக்கித் தொடர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். முதலில் வந்த கார் மீது அதிக குண்டுகள் பாய்ந்ததில் அதிலிருந்த பெட்ரோல் டேங் வெடித்து கார் தீப்பற்றியுள்ளது.

மெக்சிகோ தாக்குதல்
மெக்சிகோ தாக்குதல்
AP

பின்னால் வந்த இரண்டு கார்களிலும் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. தங்களின் எதிரிக் கும்பல் என நினைத்து அங்கு பதுங்கியிருந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. பின்னர் காரில் இருந்தவர்களை இறங்குமாறு மர்ம நபர்கள் கூறும்போதுதான் அவர்களுக்கு உண்மை தெரிந்துள்ளது. இதையறிந்ததும் தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்தை விட்டுத் தப்பி ஓடியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 3 பெற்றோர்கள் மற்றும் 6 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 8 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பிள்ளைகள் கண்முன்னே இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது.

 `5 காரணங்கள்; கசப்பான உண்மை’- துப்பாக்கிச் சூடு நடத்திய அமெரிக்கரின் அதிர்ச்சிப் பதிவு

தாக்குதல் நடந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத எல்லைப் பகுதி என்பதால், அங்கு காயமடைந்த சிறுவர்களுக்கு உதவ யாரும் இல்லாத நிலை இருந்துள்ளது. அதனால் தன்னுடன் வந்த சிறுவர்களை அங்கிருந்த ஒரு புதருக்கு அருகில் மறைந்திருக்கும் படி கூறிவிட்டு, 13 வயதுச் சிறுவன் ஒருவன் அடிப்பட்ட காயங்களுடன் சுமார் 23 கி.மீ நடந்தே சென்று தன் உறவினர்களைச் சந்தித்து, அவர்களுடன் வந்து பிறரைக் காப்பாற்றியுள்ளான். தற்போது அனைத்துக் குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடந்த இடத்தில் உறவினர்கள்
தாக்குதல் நடந்த இடத்தில் உறவினர்கள்
AP

லீபாரோன் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்ட விவகாரம் அமெரிக்கா -மெக்சிகோ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதை கடத்தல் கும்பலின் இந்தச் செயலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்த அந்த இடத்திலிருந்து 200 துப்பாக்கிக் குண்டுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மர்ம கும்பல் பயன்படுத்தியது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் என்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் விசாரணை நடந்துவருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு