Published:Updated:

சர்வதேச அளவில் இந்தியா 7-வது இடம்... பாகிஸ்தான் 8-வது இடம்... எதில் தெரியுமா?

உலகம்
உலகம் ( IJ NET )

இங்கு அதிகாரத்துக்கும், அதிகாரமற்றவர்களுக்குமான இணைப்பாக இருந்து செயல்படக்கூடியவர்கள் பத்திரிகையாளர்களே. அதிகாரமற்றவர்களின் குரலாக அதிகாரத்தைக் கேள்வி கேட்கக்கூடியவர்களும் இங்கு பத்திரிகையாளர்களே.

நவீன ஜனநாயக அமைப்பில் மக்கள்மன்றம், நிர்வாகத் துறை, நீதித்துறை ஆகியவற்றின் வரிசையில் நான்காவது தூணான ஊடகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் மற்ற மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனியாக பணிகள், அதிகாரம் இருந்தாலும் அவையாவும் அரசு என்கிற அமைப்பின் ஒரு அங்கமாகவே (Organ of the State) பார்க்கப்படுகிறது. முதல் மூன்றும் தனக்கே உரிய அதிகாரம் பொருந்திய அமைப்பு. இதன் எதிர்தரப்பாக இருக்கக்கூடியவர்கள் அதிகாரமற்றவர்களான மக்கள். இங்கு அதிகாரத்துக்கும், அதிகாரமற்றவர்களுக்குமான இணைப்பாக இருந்து செயல்படக்கூடியவர்கள் பத்திரிகையாளர்களே. அதிகாரமற்றவர்களின் குரலாக அதிகாரத்தைக் கேள்வி கேட்கக்கூடியவர்களும் இங்கு பத்திரிகையாளர்களே.

நான்காவது தூண்
நான்காவது தூண்
voj news

``ஆயிரம் துப்பாக்கிகளைவிட நான்கு செய்திதாள்களைக் கண்டு தான் அதிகம் அஞ்ச வேண்டும்" என பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்டே கூறியிருக்கிறார். பத்திரிகைகளின் வலிமையை உணர்த்துகிற வரிகள் இவை.

வியட்நாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததே ஒரு புகைப்படம்தான் என இன்றுவரை சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் வறுமையின் கோர முகத்தை உலகுக்கு உணர்த்தியதும் ஒரு புகைப்படமே. துருக்கி கரையில் கரை ஒதுங்கிய சிரிய அகதி சிறுவன் அய்லான் குர்தியின் புகைப்படம் மேற்குலக நாடுகளின் மனசாட்சியை உலுக்கின. அகதிகள் தொடர்பான ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் அணுகுமுறையை மாற்றியதும் அந்தப் புகைப்படமே. அதோடு மட்டுமல்லாமல் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதிலும், குற்றங்களை அம்பலப்படுத்துவதிலும் பத்திரிகையாளர்களின் பங்கு இன்றியமையாதது.

ஆப்பிரிக்க சிறுவன் & அய்லான் குர்தி
ஆப்பிரிக்க சிறுவன் & அய்லான் குர்தி

அமெரிக்க அதிபர் என்பது உலகில் எவ்வளவு சக்திவாய்ந்த பதவி என்பது அனைவருக்கும் தெரியும். இரு நூற்றாண்டு கால அமெரிக்க வரலாற்றில் அதிபராக பதவியில் இருந்தபோதே ராஜினாமா செய்ய நேர்ந்த புகழ் ரிச்சர்ட் நிக்சனுக்கு மட்டுமே உண்டு. அதற்கு காரணமாக இருந்தது யார் தெரியுமா? இரண்டு பத்திரிகையாளர்களே…. பாப் வுட்வேர்ட் மற்றும் கார்ல் பெர்ன்ஸ்டெய்ன் என்கிற இரண்டு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர்கள் நிக்சன் பதவிக் காலத்தில் நடைபெற்ற வாட்டர் கேட் ஊழலை வெளிக்கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக எழுந்த நெருக்கடிகளின் விளைவாகவே நிக்சன் பதவி விலக நேர்ந்தது.

இந்தியாவில் எடுத்துக்கொண்டால் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளைக் கிளப்பியது போஃபர்ஸ் ஒப்பந்தக் குற்றச்சாட்டு. வரலாறு காணாத அரிதிப் பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்த ராஜீவ் காந்தியை ஆட்சியிலிருந்து அகற்றியதில் மிக முக்கிய பங்காற்றியது போஃபர்ஸ் குற்றச்சாட்டு. போஃபர்ஸ் முறைகேட்டை வெளிக்கொண்டு வருவதில் இந்து பத்திரிகையும் என்.ராமும் முக்கிய பங்கு வகித்தனர். போஃபர்ஸ் துப்பாக்கியைவிட ராமின் பேனா சக்திவாய்ந்தது (Ram's pen is powerful than Bofor's gun) எனப் பிரபலமாக சொல்லப்பட்டது.

போஃபர்ஸ்
போஃபர்ஸ்
தி இந்து

இன்று தொழில்நுட்பம் அடைந்துள்ள வளர்ச்சிக்கு ஒரு ஆண்ட்ராய்ட் மொபைல், இன்டர்நெட் வசதி இருந்தால் யாரும் பத்திரிகையாளர்களாக செயல்படலாம் என்கிற ரீதியில் Citizen Journalism என்பதும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. அதே அளவுக்கு போலிச் செய்திகளும் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில் செய்தி தருகிற வடிவங்கள் மாறினாலும் இன்றளவும் களத்துக்குச் சென்று துல்லியத்துடன் செய்தி சேகரிப்பது உள்ளூர் பத்திரிகையாளர்களே.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மனித உரிமைகளை நிலைநாட்ட ஐ.நா போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதில் இன்றியமையாததாக பத்திரிகையாளர்களின் பணியும், உரிமைகளும் அங்கீகரிக்கப்பட்டன. பத்திரிகைச் சுதந்திரத்துக்காக, பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்காக பல சர்வதேச சட்டங்கள், தன்னார்வ அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ராணுவ சர்வாதிகாரிகளையே அச்சுறுத்திய பத்திரிகையாளர்கள் இன்று மிகப்பெரும் அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றனர் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

யுனெஸ்கோ அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் உலகளவில் 1109 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 2013 - 2018 வரையிலான ஐந்தாண்டுக் காலத்தில் 495 பத்திரிகையாளர்கள் உலகம் முழுவதும் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் 2013 -2018 வரையிலான காலகட்டத்தில் பத்திரிகையாளர்கள் அதிகம் கொல்லப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா (22 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்) 7–வது இடத்தைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் (8வது), சோமாலியா (9வது) போன்ற நாடுகள் இந்தியாவுக்கு அடுத்தடுத்த நிலையில் உள்ளன. இதில் 91% சதவிகிதம் பத்திரிகையாளர்கள் பிராந்திய மொழிகளில் பணிபுரியக்கூடிய உள்ளூர் பத்திரிகையாளர்களே என்பது அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது.

இன்ஃபோகிராஃப்
இன்ஃபோகிராஃப்

உள்நாட்டுப் போர், ராணுவ ஆட்சி போன்ற பதற்றம் நிறைந்த (Conflict zones) பகுதிகளில்தான் பத்திரிகையாளர்கள் அதிகம் கொல்லப்படுவதாக பொதுவான ஒரு பிம்பம் உண்டு. சில ஆண்டுகள் முன்புவரை அதுதான் உண்மையாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால், சமீப ஆண்டுகளில் அது மாறிவந்துள்ளது. தற்போது 55% கொலைகள் போர் பதற்றம் இல்லாத (Non-Conflict Zones) பகுதிகளில்தான் நடந்துள்ளன. அதிலும் குறிவைக்கப்படுகிற பத்திரிகையாளர்கள் ஊழல், குற்றம், அரசியல் பற்றி செய்தி வெளியிடுபவர்களாக இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பத்திரிகையாளர் பாதுகாப்பு குறித்து சர்வதேச சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய சம்பவம் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகியின் படுகொலை. சவுதியின் முடி இளவரசர் முகம்மது பின் சல்மானே இதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டபோதும் சவுதி அரசு அதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. பத்திரிகையாளர் கொலை தொடர்பான 90% வழக்குகள் இன்றுவரை தீர்வு எட்டப்படாமல் இருப்பதையும் யுனெஸ்கோ அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

அன்டோனியோ குட்டரேஸ்
அன்டோனியோ குட்டரேஸ்

``பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டால் அதற்கான விலையை ஒட்டுமொத்த சமூகமும் கொடுத்தாக வேண்டும்" என பத்திரிகைச் சுதந்திரத்தின் தேவையை வலியுறுத்தி ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ் பேசியுள்ளார். ஆசிய நாடுகளில் உள்நாட்டுப் போர் தொடர்பாக பணியாற்றி அனுபவம் பெற்ற பத்திரிகையாளர் லூக் ஹன்ட்டை கடந்த மார்ச் மாதம் சந்தித்தேன்.

அப்போது அவர் என்னிடம் குறிப்பிட்ட ``பத்திரிகையாளர்கள் இல்லாத இடத்தில், பத்திரிகையாளர்கள் பணி செய்ய இயலாத இடத்தில்தான் இனப்படுகொலைகள் அரங்கேறுகின்றன" என்ற வரிகள் என் நினைவுக்கு வருகின்றன. பத்திரிகையாளர்களே படுகொலை செய்யப்படும் முரண்பட்ட உலகில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது மறுதலிக்கமுடியாத உண்மை மட்டுமல்ல, ஆபத்தும் கூட..!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு