Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு - `அதிகாரத்தின் கொதி நிழல்’ | பகுதி 2

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

அவன் பிளிறிய சத்தம் பூட்டியிருந்த அறையில் அதிகமாக அதிர்ந்தது. உள்ளே குவிந்திருந்த அதிகாரிகள் அத்தனை பேரின் கண்களையும் தன் பார்வையால் குதறினான்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு - `அதிகாரத்தின் கொதி நிழல்’ | பகுதி 2

அவன் பிளிறிய சத்தம் பூட்டியிருந்த அறையில் அதிகமாக அதிர்ந்தது. உள்ளே குவிந்திருந்த அதிகாரிகள் அத்தனை பேரின் கண்களையும் தன் பார்வையால் குதறினான்.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்

நான் முகாமின் பாதுகாப்பு அதிகாரிகள் தலைமை அலுவலகத்தை நோக்கி நடந்தேன். புதியவர்களின் பெயர் விவரங்களை கணினியில் பதிவேற்றுவதற்கு முன்னர், மின்னஞ்சலைத் திறந்தேன். பொறுப்பதிகாரிகளுக்கு குடிவரவு அமைச்சகத்தின் மெல்போர்ன் காரியாலயம் அனுப்பிய மின்னஞ்சலில் பின்வரும் விடயங்கள் முக்கியமானவையாகக் சிவப்பெழுத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.

`இன்றிரவு முதல் முகாமில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், முகாம் வேலிக்கான சோதனையை அதிகரிக்கவும்.'

`வந்திருக்கும் அகதிகளில் தாலிபன்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடியவர்களும் இருக்கிறார்கள் என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. அவர்கள் குறித்த முழுமையான விசாரணைகள் முடிவடையும் வரைக்கும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும்'.

`அப்பாஸ் என்ற பெயரில் தாய், தகப்பன் இல்லாது தனியாக வந்துள்ள இளைஞனைத் தனிப்பட கவனம் செலுத்தவும்.' ஆப்கனின் மர்ஜா பிரதேசத்தில் போதைப்பொருள் கொடுக்கல் வாங்கலில் இவனுடைய தமையன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறான். சுட்டுக் கொன்றவர்களை படுகொலை செய்வதற்கு இவனுடைய தகப்பனார் துப்பாக்கியோடு திரிகிறார் என்று கேள்விப்பட்டு,

வீட்டுக்கு வந்த ஆயுததாரிகள், இவனது கண் முன்னாலேயே தகப்பனையும் தாயையும் துண்டு துண்டாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.

படகில் வந்தபோதும், ஆஸ்திரேலியா வந்த பின்னரும் இவனது நடத்தை குறித்து சக அகதிகளே அச்சம் தெரிவித்திருக்கிறார்கள் என்பது கிறிஸ்மஸ் தீவில்வைத்து மேற்கொண்ட விசாரணையில் பதிவாகியிருக்கிறது. அதிக கேமராக்கள் அமைந்துள்ள `ஆல்பா’ காம்பவுண்டின் ஒன்பதாவது இலக்க அறையில் இவனை தங்கவைக்கவும்.'

மின்னஞ்சலை மூடிவிட்டு, அகதிகள் இணையக்கோப்பில் அப்பாஸின் விவரத்தை ஒவ்வொன்றாகத் தட்டினேன். 1997-ம் ஆண்டு பிறந்தவன். இரண்டு புருவங்களும் உள்நோக்கி வளைந்து போர் வாள்களாகக் குவிந்திருந்தன. கூர்ந்து பார்க்கும் கண்களில் விகாரம் கொப்பளித்தது. ஒருவித எரிச்சலோடு பூமிக்கு வந்தவனைப்போல, கோபம் அவனது இமைகளுக்குள் கூடுகட்டியிருந்தது. அவன் சிரித்தாலும் பயமாகத்தானிருக்கும் போலிருந்தது. உப்புநீர் பட்டு வெடித்ததோ அல்லது தானே கடித்துக்கொண்டானோ தெரியவில்லை, உதடுகள் வெடித்தும் உரிந்தும் காணப்பட்டன. இரண்டு கன்னங்களிலும் பருக்களை நகங்களால் உடைத்து பிராண்டியதால் தோன்றிய வடுக்கள், கூர் முகத்தில் தழும்புகளாகத் தெரிந்தன.

தொலைபேசியில் சக அதிகாரியை அழைத்து, சாப்பாடு முடிந்த பின்னர் அப்பாஸ் என்ற சிறுவனை, `ஆல்பா’ காம்பவுண்டின் ஒன்பதாம் இலக்க அறையில் கொண்டுபோய் விடும்படிச் சொன்னேன். வந்தவர்கள் அத்தனை பேரது தனித்தனிப் பெயர்களை – அவர்களது குடும்ப விவரங்களை - குடிவரவு அமைச்சின் பொது இணையத்துக்குள் ஒவ்வொன்றாக அடுக்கினேன். பதிவுசெய்து முடிக்கும்போது, ஆழ்ந்த அமைதியின் நிழலில் இரவு தன் வாலை சுருட்டிக்கொண்டு படுத்திருந்தது.

மாதிரி படம்
மாதிரி படம்

முகாமின் எல்லையோரமாக வேலிச் சோதனையை செய்யலாமென்று, நீண்ட தடியொன்றோடு புறப்பட்டேன். கட்டுப்பாட்டு அறைக்கு சென்று, நான் சோதனை செய்யப்போவதையும், வேலியோரமாக நடக்கும்போது அது கேமராவில் தெரிகிறதா என்பதையும் கண்காணிக்கும்படி சொல்லிவிட்டு, முட்கம்பி வேலிப்பக்கமாக நடக்கத் தொடங்கினேன்.

பகல் மழையில் மக்கிப்போன சருகுகள் சப்பாத்தின் அடியில் நசுங்கும் சத்தம் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தது. முகாம் வேலிக்கு வெளிப்புறமாக சுற்றிவர வெறும் காணிகள்தான். எல்லைக்கம்பங்களின் மின் வெளிச்சத்தில், வெட்டிய புல்லின் அடிக்கட்டைகள்கூட தெளிவாகத் தெரிந்தன. வேலியின் ஒவ்வொரு துளைகளையும் உற்றுப் பார்த்தபடி நடந்தேன். கிழக்கு பக்க எல்லைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த யூக்கலிப்டஸ் மரத்திலிருந்து பனி சொட்டிக்கொண்டிருந்தது.

அப்போது முகாமில் திரண்டிருந்த இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு `பளீர்' என்றொரு சத்தம். கண்ணாடி ஜன்னலொன்று ஒரே அடியில் நொறுங்கி விழுகின்றது.

`ஆல்பா’ காம்பவுண்டின் வேலிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த நான், என்னை அறியாமலேயே, சத்தம் கேட்ட வேகத்தில் திரும்பியபோது, ஒன்பதாம் இலக்க அறையின் உடைந்த ஜன்னல் வழியாக ஓர் உருவம் என்னைப் பாத்துக்கொண்டிருந்து.

`ஆல்பா’ காம்பவுண்டிலிருந்து ``ரெஸ்பான்ஸ் ரெஸ்பான்ஸ்... கோர்ட் பிளாக்...” என்ற சத்தம் இருளின் அமைதியைக் கிழித்தது. உதவிகோரும் அதிகாரியின் பதற்றமான குரல், சகல உத்தியோகத்தர்களது தொலைத் தொடர்பு கருவியிலும் அலறியது. கட்டுப்பாட்டு அறை அதிகாரியும் அந்த அபாய அறிவிப்பைத் தனது தொலைத் தொடர்பு கருவியின் ஊடாக உறுதிப்படுத்தி அறிவிக்கிறார்.

காத்திருந்த இரவு துள்ளியெழுந்துகொண்டது. வேறு பணியில் நின்றுகொண்டிருந்த அதிகாரிகள் எல்லோரும் `ஆல்பா’ காம்பவுண்டின் ஒன்பதாவது அறைக்கு ஓடினார்கள்.

நான் அங்கு சென்றபோது அப்பாஸை முதன்முதலாகக் கண்டேன். எந்த அதிகாரியும் அருகில் அடியெடுத்துவைக்க முடியாத ஆத்திரத்தோடு அவன் நின்றுகொண்டிருந்தான். சாப்பாட்டு மண்டபத்திலிருந்து எடுத்து வந்த கோழித்தொடை எலும்பை வலக்கையில் இறுக்கிப் பிடித்தபடி, யாராவது ஒருவரைக் குத்திவிட வேண்டும் என்ற வெறியோடு நின்றுகொண்டிருந்தான். மேல் சட்டை அணியாத அவனது வெண்ணிற தேகத்தில, கோப நரம்புகள் புடைத்து நெளிந்தன. அவனது கணுக்கைகள் கோபத்தில் நடுங்கியபடியிருந்ததன.

``விசா தந்து விடுதலை செய்யப்போகிறோம் என்று மெல்போர்னுக்கக் கூட்டிவந்து, ஏமாற்றப்பார்க்கிறீர்களா... இப்படியே எங்களை முகாமில் முடக்கப்போகிறீர்களா?’’

அவன் பிளிறிய சத்தம் பூட்டியிருந்த அறையில் அதிகமாக அதிர்ந்தது. உள்ளே குவிந்திருந்த அதிகாரிகள் அத்தனை பேரது கண்களையும் தன் பார்வையால் குதறினான். ஏதோவொன்றை செய்வதற்கு முடிவெடுத்துவிட்டவனைப்போல, ஒரு வேட்டை நாயாக உறுமினான்.

சற்றும் எதிர்பாராத வேகத்தில், அவனுக்குப் பின்னிருந்த கண்ணாடிக் கதவின் வழியாக உள்ளே நுழைந்த அதிகாரி ஒருவர், அவனது கால்களுக்குள் தனது காலை நுழைத்து, அப்பாஸைக் கீழே விழுத்தினார். இருட்டில் பின்னாலிருந்து வந்த அதிகாரியின் பிடியை சற்றும் எதிர்பாராத அப்பாஸ், அறையின் நடுவிலிருந்து மேசையில் குப்புற விழுந்தான். பின் தரையில் சரிந்தான். கோழி எலும்பு வைத்திருந்த அவனது கைகளை தரையோடு ஒருவர் அழுத்த, காத்திருந்த ஏனையவர்கள் அவனைப் பந்தாகத் தூக்கிக்கொண்டார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அத்தனை அதிகாரிகளையும் உதறிக்கொண்டு எழுவதற்கு அப்பாஸ் எழுப்பிய சத்தம் முகாமின் வேலிகளையே உலுப்பியது. அவனது கைகளிலிருந்த கோழி எலும்பு அவனது நாடியில் குத்தியது. முழங்கையிலும் ரத்தம் கசிந்தது. முதலுதவிப் பெட்டியோடு விரைந்து வந்த பெண் அதிகாரி, காயத்துக்கு பிளாஸ்டர் போடுவதற்காக அவன் முன்னால் பதற்றத்தோடு குந்தினாள். அவளது முகத்தைச் சரியாக இலக்கு பார்த்த அப்பாஸ், அடி நாவிலிருந்து திரட்டிய எச்சிலை அவள்மீது காறித் துப்பினான். அது அப்படியே அவளது இடது கண்ணில் விழுந்து கன்னத்தோடு வழிந்தது.

அடுத்த நாள் மதியம், முகாமுக்குப் பொறுப்பான குடிவரவு அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பு ஆரம்பமானது. குடிவரவு அமைச்சின் பொறுப்பதிகாரிகள் இருவரும், முகாமின் வைத்தியப் பணிப்பாளரும் பாதுகாப்புக்குப் பொறுப்பான நிறுவனத்தின் சார்பில் நானும் கலந்துகொண்டிருந்தோம்.

மாதிரி படம்
மாதிரி படம்
Clover Photo Design

சந்திப்பு ஆரம்பமாவதற்குக் கடைசி நொடியில் அறைக்குள் மூன்றாவது குடிவரவு அமைச்சின் அதிகாரியும் வந்தார். எஞ்சியிருந்த ஐந்தாவது கதிரையை இழுத்துப்போட்டு அமர்ந்தார். தனது கோப்புக்களோடு, பொலித்தீன் பையில் பாதுகாப்பாக எடுத்து வந்த கோழி எலும்புத்துண்டையும் மேசையின் நடுவில் வைத்தார்.இப்போது எல்லோரும் என்னைப் பார்த்தார்கள்.

``யாரைக் கேட்டு உங்களது அதிகாரிகள் அப்பாஸின் மீது கை வைத்தார்கள்?”

குடிவரவு அமைச்சு அம்மணி, கேள்வி கேட்ட வேகத்தில், அவரது சுருங்கிய கன்னங்களின் மீது குந்தியிருந்த கண்ணாடி ஒரு தடவை துள்ளி அமர்ந்தது.

``அதிகாரிகளைத் தாக்குவதற்காக கைகளில் கோழி எலும்போடு …..”

``எங்களுக்கு எந்த விளக்கமும் வேண்டாம். அதற்குத்தானே உங்களது நிறுவனத்தின் இத்தனை அதிகாரிகளுக்கு அரசாங்கம் ஊதியம் தருகிறது. நீங்கள் கேட்கும் வசதிகளையெல்லாம் செய்து தருகிறோம். இத்தனை அதிகாரிகளிருந்தும், ஒரு சிறுவனை அமைதிப்படுத்த முடியாமல், குப்புற விழுத்தி, முகத்தை உடைத்திருக்கிறீர்கள்.’’

``முகத்தில் காயம் வந்ததற்குக் காரணம், அவன் வைத்திருந்த கோழி எலும்பு…’’

``நான் திரும்பவும் சொல்கிறேன் மிஸ்டர், உங்களால் அமைதிப்படுத்த முடியாத ஒரு சிறுவனுக்கு, உங்களால்தான் காயமேற்பட்டிருக்கிறது. அது கோழி எலும்பென்றால் என்ன... கங்காரு எலும்பென்றால்தான் என்ன?’’

இவருக்கு எங்களது அதிகாரிகளின் மீது பிரச்னையா... கோழி மீது பிரச்னையா?

இப்போது, அடுத்த அதிகாரி ஆரம்பித்தார்.

``நேற்றிரவு எல்லா பிரச்னைகளும் முடிவடைந்து அப்பாஸ் எப்படித் தூங்கப்போனான்... சம்பவ அறிக்கையில், மாத்திரை கொடுத்ததாகக் கூறியிருக்கிறீர்களே...’’

``ஆம், இரண்டு பனடோல்கள் கொடுத்து, அரை மணி நேரத்தில் தூங்கிவிட்டான்.”

``பதினெட்டு வயதுக்குக் குறைந்த ஒரு சிறுவனுக்கு இரண்டு பனடோல்கள் கொடுப்பதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது?’’

மாதிரி படம்
மாதிரி படம்

நான் மருத்துவப் பணிப்பாளரைப் பார்த்தேன். அவர் எனது பார்வையைத் தவிர்ப்பதற்காகவே, சம்பவ அறிக்கையை உன்னிப்பாக வாசிப்பது போன்ற பாவனையிலிருந்தார்.

அந்த அறையில் மேசையின் நடுவிலிருந்த கோழி எலும்பும் நானும்தான் பேசுவதற்கு நாதியற்றவர்களாகக் கிடந்தோம்.

கேள்வி எலும்புகளால் என்னை மாறி மாறிப் போட்டு குதறி முடித்த, குடிவரவு அமைச்சின் அதிகாரிகள், ஒருவாறு இடைவேளை தந்தார்கள்.

``அப்பாஸின் வழக்கு வெளியே அகதிகள் நல அமைப்புகளுக்கு நன்கு தெரியும். அவனை ஒவ்வொரு நாளும் வந்து பார்ப்பதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்கள். செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மன்னிப்புச் சபை முதற்கொண்டு அத்தனை சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களும் அவனை, தடுப்பில் வைத்திருப்பது தொடர்பாக கண்டன அறிக்கை விடுத்திருக்கின்றன. ஆனால், அவனது பின்னணி குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும் வரைக்கும், அவனை விடுதலை செய்ய முடியாது என்று ஆஸ்திரேலிய புலனாய்வுத்துறையும் போலீஸாரும் முடிவெடுத்திருக்கிறார்கள். அதுவரைக்கும், அவனைப் பாதுகாப்பாக கண்காணிக்கவேண்டியது எங்களது பொறுப்பு. உங்களது அமைப்பின் பொறுப்பு.’’

அதிகாரிகள் ஒவ்வொரும் பேசி முடிக்கும்போது, நித்திரை போதாத எனது மூளை இருண்டு இருண்டு விடிந்தது.

``நாளைமுதல், காலை சந்திப்பின்போது ஒவ்வொரு நாளும் அப்பாஸ் தொடர்பான தனி அறிக்கையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.’’

``யெஸ் மேம்.’’

``எந்நேரமும் கண்காணிப்பதற்குக் குறைந்தது ஓர் அதிகாரியை நியமித்து, அவனது நடவடிக்கைகளைப் பதிவு செய்தால், அது எமக்குப் பேருதவியாக இருக்கும்.’’

``கண்டிப்பாக.’’

ஒருவாறு சந்திப்பு நிறைவுக்கு வந்தது.

அப்பாஸ், ஆக்கிரமிப்பின் அகோர கரங்களிலிருந்து தெறித்த தணல்துண்டு. அவனுக்குள் எரிந்துகொண்டிருப்பது அவன் பார்த்த கொடிய நிகழ்வுகளின் கொப்பளிப்பு.

ரத்தமும் நிணமும் அவன் நினைவில் இன்னமும் சமிபாடு அடையாத இறைச்சியாகப் புரையேறிக்கொண்டிருக்கிறது. குடிவரவுக்காரர்கள் வகுப்பெடுப்பதுபோல, அவனை நினைத்தபடியெல்லாம் கட்டுப்படுத்திவிட முடியாது.

ஆனால், குடிவரவு அமைச்சினர் தங்கள் காகிதக் கோப்புகளுக்குள் அவனுக்கு மருந்து வைத்திருப்பதைப்போல, ஒவ்வோர் அறிக்கையாக எடுத்துவைத்து, முகத்துக்கு முன்னால் அசைத்து அசைத்து காற்றிலே கோலாட்டம் போட்டனர்.

கேட்டு முடித்த சட்டங்களையும் திட்டங்களையும் தூக்கிக்கொண்டு முகாம் அலுவலகத்துக்கு நடந்தேன்.

``என்னவாம் இமிகிரேஷன் மாப்பிள்ளைகள்...’’

ஊர்ந்து வந்துகொண்டிருந்த என்னைப் பார்த்து அலன் நக்கலாகக் கேட்டான். சிரித்துக்கொண்டு, மீதி சிகரெட்டை இழுத்தான்.

``கோழி எலும்பால் அப்பாஸுக்கு ஏற்பட்ட காயத்துக்கு நாங்கள்தான் பொறுப்பாம்.’’

சக அதிகாரியென்றாலும் சொல்லியிருக்கத் தேவையில்லாத தகவல். உள்ளே வெந்துகொண்டிருந்த வெறுப்பில் உளறிவிட்டேன்.

வேகமாக வெளியே புகையை ஊதிய அலன், குடிவரவு அமைச்சு அலுவலகத்துக்குள்ளிருக்கும் அத்தனை அதிகாரிகளுக்கும் அடைமொழியாக, தனக்குத் தெரிந்த செழிப்பான கெட்ட வார்த்தைகளைக் கோத்து கோத்து திட்டினான். திட்டும்போது மிக கவனமாக தனது குரலைத் தாழ்த்திக்கொண்டான். வெடித்துப் பறந்த பேச்சில், அவனது நிக்கொட்டின் தசைகள் குலுங்கின.

``அடுத்த தடவை, அப்பாஸ் கோழிக்காலோடு நிற்கும்போது நாங்கள், இரண்டு ஆப்கான் ரொட்டியை கொண்டுபோய் கொடுத்துப் பார்ப்பம். சாந்தி, சமாதானத்தோடு எங்களை ஆசீர்வதிக்கிறானா என்று. முழந்தாளில் குந்தியிருந்து ஜெபித்துக்கூடப் பார்க்கலாம்.”

மாதிரி படம்
மாதிரி படம்
Fernando Llano

மீண்டும் ஒரு கடுஞ்சொல்லோடு காறித் துப்பினான்.

ஒரே நாளில் அப்பாஸ் என்ற அச்சம் மிகுந்த பெயர் முகாம் முழுவதும் மூண்டுவிட்டது.

அலுவலகத்துக்குள் சென்ற நான், ஏ.சி-யை சிறிது அதிகரித்தேன். தூக்கம் போதாத கண்கள் வலியெடுத்தன. பிரின்ட் எடுத்து அலுவலகச் சுவரில் ஒட்டியிருந்த அப்பாஸின் படத்தைப் பார்த்தேன். அவனது கண்கள் என்னையே பார்ப்பதுபோலிருந்தன.

தேநீர் ஊற்றிக்கொண்டு வெளி விறாந்தைக்கு வந்தேன். சிறிலங்கன் பெடியன்களும் பங்களாதேஸ், பர்மா இளைஞர்களும் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். வலையின் இரண்டு பக்கங்களுக்கும் மாறி மாறி தாவிக்கொண்டிருந்தது பந்து. முதல்நாள் பெய்த மழைக்கு சம்பந்தமே இல்லாத வெயில் பகலை நிறைத்திருந்தது.

``என்ன அண்ணன், நேற்றிரவு ஏதோ பெரிய சத்தம் கேட்டுது. புதுசா வந்த பெடியனா...”

தானும் ஒரு தேநீரை போட்டுக்கொண்டு அருகில் வந்தான் நீதன்.

தலையை அசைத்து பதில் சொன்னபடி, ``சத்தம் கேட்டதா’’ என்றேன்.

``ஓ… இரண்டு, மூண்டு தரம் பெரிய சத்தம் கேட்டது. உங்களில யாருக்கோதான் அடி விழுகுதாக்கும் எண்டு, நல்ல சந்தோசத்தில் போத்துக்கொண்டு படுத்திட்டன்.”

தேநீர் சிந்திவிடாமல், குவளையை குந்தில் வைத்துவிட்டு பெரிதாகச் சிரித்தான்.

முகாமிலிருக்கின்ற தமிழ் அகதிகளில் நீதன் ஓர் ஓரமாக வைத்து மதிப்பிடக்கூடியவன். ஓரளவு ஆங்கில அறிவுடையவன். தமிழ் அகதிகளின் பிரச்னைகளை அதிகாரிகளிடம் விளங்கச் சொல்லக்கூடியவன்.

கொழும்புக்கு புலிகளின் தற்கொலை குண்டுதாரியை ஏற்றி வந்து தாக்குதல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தவன் என்று ஆஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் இந்த முகாமில் தடுத்து வைத்திருக்கிறார்கள்.

நன்றாக தேநீர் ஊற்றுவான். அதைத் தாண்டியும் அவனுக்கும் எனக்கும் நல்ல உறவிருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், இந்த கைப்பந்தாட்ட திடல் ஓரத்தில், இரவிரவாக நீதன் தனது வாழ்க்கையை என்னிடம் ஒப்புவித்திருக்கிறான். இருளுக்குள் தெரியாத அவன் கண்ணீரையும், யாருக்கும் தெரியாத அவனது கடந்தகாலத்தையும் வெளிக்காண்பிக்க முடியாத துயரத்தோடு முழுமையாகக் கேட்டிருக்கிறேன்.

நீதன் மாத்திரமல்ல, இந்த முகாமிலுள்ள அறுபத்து மூன்று தமிழ் இளைஞர்களும் என்னோடு மிக நெருக்கமாகப் பழகுபவர்கள். ஒரு நாளைக்கு அறுபத்து மூன்று தேநீர் குடிக்குமளவுக்கு என்னுடன் சிநேகிப்பவர்கள்.

ஒரே மொழி பேசுபவன் என்பதற்கு அப்பால், தங்களது உணர்வுகளைப் புரிந்தவன் ஒருவன் இந்த முகாமில், தங்களைவிட ஓர் அதிகாரத்திலிருக்கிறான் என்பதில் அவர்களுக்கு ஒரு திருப்தியிருந்தது. அவசரத்துக்குத் தங்களது உணர்வுகளைத் தங்களது மொழியில் மனம்விட்டுப் பேசலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.

நீதன் இந்தோனேசியாவில் மூன்று வருடங்களாகத் தங்கியிருந்த காலப்பகுதியில், போகூர் என்ற இடத்தில் சாப்பாட்டுக்கடை நடத்தினான். எந்தக்காலத்திலும் அகதிகள் பெருக்கெடுத்துக்கொண்டேயிருக்கும் போகூரில், நீதன் கடைக்கு இரவு பகல் பாராது வாடிக்கையாளர்கள் குவிந்தனர். அருகிலிருந்த அஸ்லா நகர பொலீஸ் நிலையத்திலிருந்து ஒவ்வொரு நாளும் சாப்பாடு எடுத்துப்போகின்ற அனீஸா என்ற பெண் அதிகாரி, ஒரு நாள் நீதன் கழற்றிவைத்த கடிகாரத்தையும் எடுத்துப்போய்விட்டாள்.

(வலி தொடரும்...)