Published:Updated:

`மருத்துவருக்கு பாசிட்டிவ்; தனிமைப்படுத்தப்பட்ட 8 பேர்’ - அமேசான் பழங்குடிகளையும் துரத்தும் கொரோனா?

பழங்குடிகள்
பழங்குடிகள் ( Representational image )

அமேசான் பழங்குடிகளுக்கு உதவும் மருத்துவருக்குக் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் பழங்குடிகளுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இன்று ஒரே எதிரியாக இருக்கக் கூடிய விஷயம் கொரோனா வைரஸ். சீனாவிலிருந்து உருவானதாகக் கூறப்படும் இது அன்டார்டிக்காவைத் தவிர மற்ற அனைத்துக் கண்டங்களுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,13,882 ஆக உள்ளது. உயிரிழப்புகள் 28,000 -த்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் வெளி உலகத்துடன் தொடர்பு இல்லாத பிரேசில் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடி மக்களுக்கும் வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மருத்துவர்
மருத்துவர்
Representational image

பிரேசில், கொலம்பியா, பெரு ஆகிய நாட்டு எல்லைகளை இணைக்கும் அமேசான் காட்டுப் பகுதியில் டிகுனாஸ் என்ற பெயர் கொண்ட பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யும் பெயர் குறிப்பிடப்படாத மருத்துவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று பிரேசில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவர், தன் விடுமுறை நாள்களில் பழங்குடி மக்களுக்கு மருத்துவம் செய்து வந்துள்ளார் அதேபோல் கடந்த வாரமும் பழங்குடி கிராமத்துக்குச் சென்று மருத்துவ உதவிகளைச் செய்துவிட்டு மார்ச் 18-ம் தேதி பிரேசில் திரும்பியுள்ளார்.

‘ஃபிடல் காஸ்ட்ரோவின் மந்திரம்; உலகைக் காக்கும் மருத்துவர்கள்’ -கியூபாவின் தலைசிறந்த சேவை! #Corona

அப்போதெல்லாம் நன்றாக இருந்த அவருக்கு அடுத்த சில நாள்களில் காய்ச்சல் வரத்தொடங்கியுள்ளது. உடனடியாக மருத்துவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, அவர் இறுதியாகச் சென்று திரும்பிய பழங்குடி மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவருடன் நேரடி தொடர்பிலிருந்த 8 டிகுனாஸ் பழங்குடிகள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பழங்குடிகள்
பழங்குடிகள்
Representational image

மருத்துவரால் ஒரு பழங்குடி கிராமத்துக்கு வைரஸ் அச்சம் என்பது முதல் முறையாக நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பழங்குடிகளில் யாராவது ஒருவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களின் வாழ்க்கை முறை, தொற்று அபாயத்தை மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் வேதனையாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பழங்குடிகள் ஏற்கெனவே ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள். காசநோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால் பழங்குடிகள் மத்தியில் வைரஸ் மிக வேகமாகப் பரவக்கூடும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அமேசான் பழங்குடிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரே தவிர அவர்களுக்குத் தொற்று இருப்பது இன்னும் உறுதியாகவில்லை என்று பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு