Published:Updated:

`உளவுத்துறை அதிகாரியைக் கொல்ல கூலிப்படை!’ - சவுதி இளவரசர் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு

இளவரசர் - உளவுத்துறை அதிகாரி
இளவரசர் - உளவுத்துறை அதிகாரி

சவுதியின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியைக் கொல்ல கூலிப்படையை அனுப்பியதாகச் சவுதி பட்டத்து இளவரசர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சவுதியின் பட்டத்து இளவரசராக இருப்பவர் முகமது பின் சல்மான். இவர் பட்டத்து இளவரசராகப் பொறுப்பேற்றது முதல் தன் நாட்டு மக்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறார். இதனால் தன் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றவராக மாறியுள்ளார் பின் சல்மான். ஆனால், அதே நேரம் இவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தன் பதவிக்கு இடையூறாகவும் தன்னை எதிர்க்கும் அரசக் குடும்பத்தை சேர்ந்தவர்களை சிறைபிடிப்பது, ஜமால் கஷோகி கொலை விவகாரம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளன.

இளவரசர் பின் சல்மான்
இளவரசர் பின் சல்மான்

இந்நிலையில், சவுதி அரேபியாவைச் சேர்ந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரியான சாத் அல் - ஜாப்ரியை கொலை செய்வதற்காக அவர், தற்போது வசிக்கும் கனடாவுக்குக் கூலிப்படையை அனுப்பியதாக இளவரசர் முகமது பின் சல்மான் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியில் உள்ள நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 61 வயதான அல்ஜாப்ரி, அல் கொய்தாவின் அச்சுறுதலுக்கு மத்தியில் மேற்கத்தியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவியதாக அமெரிக்கா, இங்கிலாந்தில் பாராட்டப்பட்ட ஓர் உளவுத்துறை அதிகாரி.

அரச பிடியை இறுக்கும் பின் சல்மான்; மன்னரின் சகோதரர் கைது? - சவுதி இளவரசரைச் சுற்றும் புதிய சர்ச்சை

இங்கிலாந்தின் எம்16 மற்றும் மேற்கு சவுதியின் பல்வேறு நிறுவனங்களில் அல்ஜாப்ரி முக்கிய பங்காற்றியுள்ளார். இவர் தற்போது, கனடாவின் டொரொன்டோவில் தனியார் பாதுகாப்பில் வசித்து வருகிறார். இவர்தான் தன்னை சவுதி பட்டத்து இளவரசர் கொல்ல நினைத்ததாகப் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புகாரில், `சவுதி இளவரசருக்கும் அமெரிக்காவும் இருக்கும் தொடர்பு, அவர் பதவியைப் பெறுவதற்காகத் தன் நாட்டில் செய்த சதித் திட்டங்கள் ஆகியவை ஜாப்ரிக்கு தெரிந்துள்ளது. அதனால் அவரைக் கொல்ல கூலிப்படையை அனுப்பியுள்ளார் பின் சல்மான்.

அல்ஜாப்ரி
அல்ஜாப்ரி

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் கொலைசெய்யப்பட்ட 2 வாரங்கள் கழித்து, இளவரசரின் கூலிப் படையினர் சுற்றுலா விசாவில் கனடா வந்துள்ளனர். அப்போது அவர்கள் மீது சந்தேகம் கொண்ட கனட அதிகாரிகள் அனைவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். அதில் அந்தக் கூலிப்படையினர் ஒருவருக்கு ஒருவர் தெரியும் என்பது புகைப்படங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அல்ஜாப்ரியைக் கொல்லும் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட கனடா நாட்டு அரசு, ``இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, கனடாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வெளிநாட்டு நபர்களை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” எனத் தெரிவித்திருந்தது.

வாட்ஸ்அப் வீடியோவில் விழுந்த ஜெப் பஸாஸ்... வலைவிரித்த சவுதி இளவரசர்!

புலிப்படை என்ற பெயர் கொண்ட அந்தக் குழு, இளவரசர் பின் சல்மானின் சொந்தக் குழு. தன் சொந்த தேவைகளுக்காக மட்டும் இளவரசர் இவர்களைப் பயன்படுத்துகிறார். கஷோகியின் கொலை விவகாரத்திலும் இந்தப் புலிப்படைக்கு பெரும் பங்கு உள்ளது. பின் சல்மான் பலமுறை, அல்ஜாப்ரிக்கு நேரடியாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சவுதி இளவரசரிடமிருந்து தனக்குப் பாதுகாப்பும் நீதியும் வேண்டும்’ என அந்த நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு