Election bannerElection banner
Published:Updated:

பிரதமரின் ட்வீட் அரபு நாடுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கும் சொல்லும் சேதி!

Mohammed Bin Salman and Narendra Modi
Mohammed Bin Salman and Narendra Modi ( Twitter / PMO India )

கொரோனாவுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று பிரதமர் வெளிப்படையாகக் கூறியிருப்பது மிக முக்கிய நிகழ்வாகவே கருதப்படுகிறது.

கொரோனா, உலகம் முழுவதையும் பாதிக்கும் 2020-ம் ஆண்டின் பெரும் பிரச்னை. இயற்கை உருவாக்கிய இந்த வைரஸ் தாக்குதலுக்கு முன்பே, அரசியல்வாதிகள் உருவாக்கிய பெரும் பிரச்னைகள் கடந்த சில ஆண்டுகளாகவே உலக நாடுகளை உலுக்கிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவை.

இந்தியாவில் கடந்த ஆண்டே பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாமல்தான் இருந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புல்வாமா தாக்குதலில் தொடங்கி பால்கோட் பதிலடி, நாடாளுமன்றத் தேர்தல், மோடியின் அசுர வெற்றி என்று பரபரப்பின் கிராப் ஏறிக்கொண்டேயிருந்தது. இரண்டாம் முறையாக மோடி அரசு பொறுப்பேற்ற பின்பு அதகளமானது அரசியல் களம்.

Modi - Amitshah
Modi - Amitshah

முன்னெப்போதும் இல்லாத பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த பா.ஜ.க-வின் மோடி - அமித் ஷா அதிரடிக் கூட்டணி வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களையொட்டிய கொள்கை முடிவுகளோடு களமிறங்கியது. முத்தலாக் தடை, ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமைச் சட்டத்திருத்தம், மாட்டிறைச்சிக்குத் தடை, கும்பல் சித்ரவதை என தொடர்ந்து மதவாத அரசியல் முன்னெடுப்பு தீவிரமானது. கோயிலில் தொடங்கிய இந்து ராஜ்யம் கோஷம், இல்லம்தோறும் புகுந்தது.

இந்திய பல்கலைக்கழகங்களில் கொடூரத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இந்துத்துவத் தலைவர்களின் பேச்சுக்களும் செயல்களும் தேசத்தையே தெறிக்கவிட்டன. மகாத்மா காந்தி ஓரம்கட்டப்பட்டதும், சாவர்க்கர் கொண்டாடப்பட்டதும் சமகாலத்தில் சாதாரண நிகழ்வுகளாய் நடந்தன. இறுதியாக இந்தியாவில் கொரோனா பரவியதற்கும் இஸ்லாம் அமைப்பே காரணமென்ற வெறுப்புரையும் பரப்புரையும் பலமாக நடந்தது.

இந்த வெறுப்பு அரசியலை விதைத்தெடுத்து விருட்சமாக வளரச்செய்ததில் சமூக ஊடகங்களின் பங்களிப்பே அதிகம். வடஇந்தியாவின் எம்.பி-க்கள் தொடங்கி ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் எனப் பலரும் வெளியிட்ட கருத்துகள், காற்றின் வழியே விஷத்தைப் பரப்பின. எதிர்முனையிலும் அது எதிரொலித்தது. இவையனைத்தும் நம் தேசத்தின் எல்லை தாண்டாதவரை, பிரச்னையாகவில்லை. இன்னும் சொல்லப்போனால் சிலருக்குப் பதவியையும் தந்தன; பாதுகாப்பையும் கொடுத்தன.

ஆனால், ஆர்வக்கோளாறில் நாம் எந்தத் தேசத்தில் இருக்கிறோம், எந்தவிதமான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நாம் செயல்பட வேண்டுமென்பதை மறந்து பலரும் எழுதவும் பேசவும் ஆரம்பித்தது பலருக்கு பூமராங் ஆகச் சுற்றிச் சுழன்று தாக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக, அரபு நாடுகளில் இருப்போர் பலரும் இதேபோல சமூக ஊடகங்களில் இப்படிக் கருத்தை வெளியிட்டு இப்போது சரியான சிக்கலில் மாட்டியிருக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹெண்ட்-அல் கஸாமி, சவுரப் உபத்யாய் எனும் இந்தியத் தொழிலதிபரின் மதவெறுப்பு ட்வீட்டை குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இங்கே மதவெறுப்பு பிரசாரத்துக்கு இடமில்லை எனவும் தெரிவித்ததுதான் தொடக்கம்.

அவரைத் தொடர்ந்து, அரபு நாடுகளில் வாழும் இந்தியர்களின் பழைய ட்விட்டர் பதிவுகள் எல்லாம் தோண்டி எடுக்கப்பட்டன. அதற்கு பலமான எதிர்ப்புகள் பதிவுசெய்யப்பட்டது மட்டுமன்றி, சிலர் மீது நடவடிக்கைகளும் பாய்ந்தன. அரபு நாட்டின் முக்கிய தலைவர்கள், மக்களிடையே மதவெறுப்பை ஊக்குவிக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அதற்கான தகுந்த ஆதாரங்களைத் தருமாறும் அந்த ஆதாரங்களைக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்ததையடுத்து, அரபு வாழ் இந்தியர்கள் பலர் அவர்கள் பதிவு செய்த ட்வீட்களை நீக்கியது மட்டுமன்றி வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டனர்.

இந்நிலையில், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவின் பழைய ட்வீட் ஒன்றினால் இந்திய பிரதமர் மோடி வரை இந்தச் சிக்கல் தொடர்ந்தது. தேஜஸ்வி சூர்யா சில ஆண்டுகளுக்கு முன்னர் அரபு நாடுகளில் பெண்களின் நிலை பற்றி பதிவிட்ட ஒரு சர்ச்சையான பதிவைக் கவனித்தார் குவைத்தின் சர்வதேச வழக்கறிஞரும் குவைத் மனித உரிமை கழகத்தின் தலைவருமான முஜ்பில் அஷ்ஷரிக்கா என்பவர்.

உடனடியாக, அந்தப் பதிவைச்சுட்டிக்காட்டி, தனது ட்விட்டர் பதிவில் இந்திய பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு ``மரியாதைக்குரிய இந்திய பிரதமர் அவர்களே! அரபு நாடுகளுடனான இந்திய உறவு என்பது இரு நாடுகளின் இடையேயான மரியாதையின் அடிப்படையிலானது. நீங்கள் உங்கள் பாராளுமன்ற உறுப்பினரை எங்கள் பெண்களை இழிவுபடுத்த அனுமதித்து உள்ளீர்களா... தேஜஸ்வி சூர்யா என்பவரின் இழிவான ட்வீட்டுக்கு எதிரான உங்கள் விரைவான நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியிருந்தார்.

மதவெறியுடன் செயல்படாதீர்கள்! - அமீரக இந்தியர்களுக்கு அறிவுரை கூறிய இந்தியத் தூதர்

அவ்வளவுதான், மதநல்லிணக்கம் பற்றி பிரதமர் மோடி அவசரமாக ஒரு ட்வீட் பதிவு செய்ய, ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்தியத்தூதர், அரபு வாழ் இந்தியர்களுக்கு அறிவுரை கூறினார். இதையடுத்து இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவித்தும், அவர்களுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட, திடீரென தேசத்தின் இதயங்களில் குளிர்காற்று வீசியது.

அரபு நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் ஏன் இப்படி ஒரு மதப் பரப்புரை செய்ய வேண்டும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் அரபு நாடுகளுக்கும் என்ன தொடர்பு என்ற ஒரு கேள்வி இங்கே எழுகிறது.

கேரளாவின் ஆலுவாவில் உள்ள தந்த்ர வித்யா பீடத்தில் 2016-ம் ஆண்டில் ஐக்கிய அரபு நாடுகளில் பெரும் தொழில் செய்யும் இந்தியர்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்திக்கிறார்கள். அந்தச் சந்திப்பில், சங் பரிவார் நிறுவனங்களுக்கு நிதி திரட்டப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களைப் பரப்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளியானது.

அரபு வாழ் இந்திய முதலாளிகள், சமூக ஊடகங்களில் வெளியிட்ட இஸ்லாமிய வெறுப்பு கருத்துகள் இதன் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. காஷ்மீரி வாட்ச் எனும் இதழில், அப்துல் மஜித் சர்கார் எனும் பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையில், கேரளாவில் நடந்த இந்தக் கூட்டத்தைப் பற்றியும், இதுபோல ஒவ்வொரு ஆண்டும் மோகன் பகவத் அரபு வாழ் இந்தியப் பணக்காரர்களைச் சந்தித்து, அவர்களின் தொழில் நிதிநிலை முதல் வேலைக்கு ஆள் எடுப்பது வரை அறிவுரை வழங்குவதையும் குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அரபு நாடுகளில் தொழில் செய்யும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பலப்படுத்த நிதியுதவி தருகிறார்கள் என்பதே புகார். அதன் விளைவாகக் கடந்த இருவாரங்களில் மட்டும் இஸ்லாமுக்கு எதிரான மரியாதைக் குறைவான பதிவுகளை வெளியிட்டதற்காகப் பல இந்தியர்கள், கைது, வேலையிழப்பு உள்ளிட்ட நேரடி நடவடிக்கைகளில் சிக்கியிருக்கின்றனர்.

இந்த அரசியல் எல்லாம் ஒருபுறமிருக்க, அரபு வாழ் இந்தியர்கள் பதிவிட்ட கருத்துகளும் அதற்குக் கிளம்பிய எதிர்ப்பும், அதைத்தொடர்ந்து பறக்கவிடப்பட்ட சமாதான ட்விட்டர் குருவிகளும் சர்வதேச அரசியலில் ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதாவது, இந்தியாவில் இஸ்லாம் விரோதப்போக்கு எவ்வாறு இருக்கிறது என்று உலக நாடுகள் பலவும் கவனிக்கத் தொடங்கியுள்ளன.

̀கொரோனா ஜிஹாத்' என்று பெயர் வைத்து, டெல்லியில் நடந்த இஸ்லாமிய கூட்டம் இந்தியாவில் கொரோனாவை பரப்படுவதற்காகவே நடத்தப்பட்டதுபோல சித்திரிக்கப்படுவதாக அரபு நாடுகளில் ஊடக விவாதங்கள் நடக்கின்றன. குஜராத்தில் கொரோனா வார்டுகளில் மக்கள் மதத்தின் அடிப்படையில் பிரித்து அனுமதிக்கப்பட்டிருப்பது, உத்தரப்பிரதேசத்தில் ஒரு மருத்துவமனையில் முஸ்லிம் நோயாளிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை மாட்டப்பட்டது, மகாராஷ்ட்ராவில் ரயில் நிலையம் அருகே புலம்பெயர் தொழிலாளர்கள் கூடியதை மசூதிக்கு வந்த கூட்டம் எனப் பொய்யாகத் தகவல் பரப்பியது என எல்லா விஷயங்களும் உடனுக்குடனே சர்வதேசத்துக்கும் பகிரப்பட்டு பேசுபொருளாகிறது.

Indian PM narendra modi and Crown Prince 
Mohamed Bin Zayed of Abu dhabi
Indian PM narendra modi and Crown Prince Mohamed Bin Zayed of Abu dhabi
Twitter / PMO India

அரபு நாடுகளில் இருந்து, சில இந்தியர்களின் இஸ்லாம் வெறுப்புப் பதிவுகளுக்கு கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ பக்கத்தில் ட்வீட் செய்திருந்த பிரதமர் மோடி, ``ஒற்றுமையும் சகோதரத்துவமுமே நமது நடத்தையாக இருக்க வேண்டும். கோவிட்-19 சாதி நிறம் இனம் நிறம் எனப் பாகுபாடு பார்த்து வருவதில்லை" எனப் பதிவிட்டிருந்தார். கொரோனாவுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று பிரதமர் வெளிப்படையாகக் கூறியிருப்பது மிகமுக்கிய நிகழ்வாகவே கருதப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்தியாவில் கட்டப்படும் பிம்பத்தைக் கலைக்க இந்தப் பதிவு உதவுமென்று நம்பிக்கை பிறந்துள்ளது.

சுமார் 50 லட்சம் இந்தியர்கள் அரபு நாடுகளில் பணிபுரிகிறார்கள், இவர்களால் பல பில்லியன் டாலர் வருமானம் இந்தியாவுக்கு கிடைக்கிறது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தக உறவு இந்தியாவுக்கும் அரபு நாடுகளுக்கும் உண்டு. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையைத் தீர்ப்பதும் இந்த மத்திய கிழக்கு நாடுகளே. இதில் சமூக ரீதியான பகிர்வு இல்லாவிடினும் எக்காரணத்திற்காகவும் இந்த வர்த்தக உறவில் பாதிப்பு ஏற்படுவதை இரு நாடுகளுமே விரும்பாது என்பதே நிஜம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு