Published:Updated:

தம்பி ஜனாதிபதி... அண்ணன் பிரதமர்... இலங்கையில் ஓங்கும் ராஜபக்‌சேக்களின் ஆதிக்கம்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தன்னுடைய சகோதரர் மகிந்த ராஜபக்‌சேவை பிரதமராக நியமித்தார், புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்‌சே.

ராஜபக்‌சே பதவியேற்பு
ராஜபக்‌சே பதவியேற்பு

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபய ராஜபக்‌சே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றிபெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து, இலங்கைக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்றிருக்கிறார். எதிர்முகாமில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, சஜித் பிரேமதாச அனைத்துப் பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார். அதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, நேற்று தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, புதிய ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.

 ரணில் விக்ரமசிங்கே
ரணில் விக்ரமசிங்கே

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே தன்னுடைய முகநூல் பதிவில், ``கடந்த ஐந்து ஆண்டுகள் நாம் ஜனநாயகத்தை, மனித உரிமைகளை, கருத்து மற்றும் தகவல் சுதந்திரத்தை, சமத்துவத்தை, நல்லிணக்கத்தைப் பாதுகாக்க உழைத்துள்ளோம். 19-வது சட்டத் திருத்தம், அனைத்து அரசமைப்பு நிறுவனங்களையும் அரசியல்மயப்படுவதிலிருந்து காத்தது. அதற்கு, சமீபத்தில் நேர்மையாக நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலே உதாரணம். நான், 19-ம் தேதி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்‌சேவை சந்தித்து நாடாளுமன்ற விவகாரங்களைப் பற்றி விவாதித்தேன். நாடாளுமன்றத்தில் எங்களுக்குப் பெரும்பான்மை இருந்தாலும் தேர்தல் முடிவை ஏற்று பதவி விலகுவதே சரி. இனி புதிய ஜனாதிபதி, புதிய அரசாங்கத்தை நியமிக்கலாம். என்னுடைய பதவிக்காலத்தில் நான் போற்றவும்பட்டிருக்கிறேன், தூற்றவும்பட்டிருக்கிறேன். இது, நாட்டில் நாங்கள் மீட்டுத்தந்த சுதந்திரத்தின் பலனே. எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என்றுள்ளார்.

மேலும் அவர் பதிவேற்றியுள்ள தன்னுடைய ஃபேஸ்புக் கவர் படத்தில், ``நாம் சாதித்தவைகளுக்கான பெருமை மக்களைச் சேரும்; நாம் சாதிக்கத் தவறியவைகளுக்கான பழி என்னையே சேரும்" என்ற வாக்கியமும் இடம்பெற்றிருக்கிறது. ரணில் விக்ரமசிங்கே ராஜினாமாவைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்‌சே புதிய பிரதமராகத் தற்போது பொறுப்பேற்றுள்ளார். புதிய அமைச்சரவை தொடர்பான அறிவிப்பும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இலங்கையின் மாகாணங்களுக்கான ஆளுநர்களும் புதிதாக மாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றம்
இலங்கை நாடாளுமன்றம்
முன்பு மகிந்த ராஜபக்‌சேவின் வலது கை; இப்போது இலங்கை அதிபர் - யார் இந்த கோத்தபய ராஜபக்‌சே?

இலங்கையில், கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது. 4.5 ஆண்டுகள் முடிகிறவரை நாடாளுமன்றத்தை அதிபரால் கலைக்க முடியாது. இந்த அரசு, வருகிற மார்ச் மாதம்தான் 4.5 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பொறுப்பேற்று, தார்மீகமாக பதவி விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். மகிந்த ராஜபக்‌சே, அடுத்த தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் அமைகிற வரையில் இடைக்கால பிரதமராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் தற்போதைய நிலவரம் பற்றிப் பகிர்ந்துகொண்ட அரசியல் விமர்சகர் நிலாந்தன், ``தேர்தல் முடிவுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளுமே பல உட்கட்சிப் பூசல்கள் எழத் தொடங்கியுள்ளன. அதைச் சமாளிக்கவே, ரணில் தார்மீகமாக இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அதே வேளையில், மார்ச் மாதத்துக்கு முன்பாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் அதற்கு முன்கூட்டியே நடத்தப்பட வேண்டுமானால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். அதற்கு, பெரும்பான்மை உள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்க வேண்டும்."

நிலாந்தன்
நிலாந்தன்
Vikatan

``ஒரு பெரிய தோல்விக்குப் பிறகு, உடனடியாக தேர்தலைச் சந்திக்க ரணிலுக்கு விருப்பமில்லை. அதனால் தேர்தல் வரை மகிந்த ராஜபக்‌சே இடைக்கால அரசு நீடிப்பதைத்தான் ரணிலும் விரும்புகிறார். அதே வேளையில், ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளுமே சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க யாரும் கோரிக்கை வைக்காத பட்சத்தில், மகிந்த தலைமையில் இடைக்கால அரசு நீடிக்கும். இலங்கையில் அடுத்த தேர்தல் வரை ஒரு குழப்ப நிலையே நிலவும். ராஜபக்‌சே குடும்பம் மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிற நிலையில், இலங்கை ஒரு அரசியலமைப்பு சர்வாதிகாரத்துக்குள் செல்வது மட்டும் உறுதி" என்றார்.

இனி எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளே இலங்கையின் ஸ்திரத்தன்மையைத் தீர்மானிக்கும். என்னவானாலும் இலங்கைத் தீவில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என்பது மட்டும் அனைத்து தரப்பினரின் ஒருமித்த கணிப்பாக உள்ளது.