Published:Updated:

உக்ரைன்: `3 விமானம் மாறி வந்தோம்; இன்னும் பலர் இருக்காங்க!’ - தேனி திரும்பிய மாணவர் சொல்வதென்ன?!

உக்ரைன் விவகாரம்

``எனது மகன் அருகேயுள்ள ஏர்போர்ட்டை ரஷ்ய வீரர்கள் தகர்த்ததைப் பார்த்திருக்கிறார். இதேபோல ஏராளமான மாணவர்கள் குண்டு வெடிப்புச் சத்தம், போர்க் காட்சிகளைப் பார்த்து மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர்.”

உக்ரைன்: `3 விமானம் மாறி வந்தோம்; இன்னும் பலர் இருக்காங்க!’ - தேனி திரும்பிய மாணவர் சொல்வதென்ன?!

``எனது மகன் அருகேயுள்ள ஏர்போர்ட்டை ரஷ்ய வீரர்கள் தகர்த்ததைப் பார்த்திருக்கிறார். இதேபோல ஏராளமான மாணவர்கள் குண்டு வெடிப்புச் சத்தம், போர்க் காட்சிகளைப் பார்த்து மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர்.”

Published:Updated:
உக்ரைன் விவகாரம்

உக்ரைனைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவ வீரர்கள் போர் தொடுத்துவருகின்றனர். பதற்றமான சூழலுக்கு நடுவே தமிழகத்தைச் சேர்ந்த 5,000 மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர்.

அவர்களில் தேனி மாவட்டம், சீலையம்பட்டியைச் சேர்ந்த வீரமணியின் மகன் கோபிநாத், உத்தமபாளையத்தைச் சேர்ந்த மருது பாண்டியன் மகன் ராஜேஷ் பாண்டியன், அயூப்கானின் மகன் சேக் முகமது ஆகிய மூன்று பேர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்துவருகின்றனர். இந்நிலையில் தற்போது உக்ரைனில் போர் நடந்துவருவதால் உயிர் பயத்திலுள்ள தங்கள் பிள்ளைகளை உடனடியாக மீட்டுத் தரக் கோரி மாணவர்களின் பெற்றோர்கள் தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கலெக்டரிடம் மனு
கலெக்டரிடம் மனு

உக்ரைனில் சிக்கியுள்ள கோபிநாத்தின் தந்தை வீரமணியிடம் பேசினோம். ``எம்.ஏ., பி.எட் படித்திருந்தபோதிலும் விவசாயமே செய்துவருகிறேன். மகனின் டாக்டர் கனவை நிறைவேற்ற வேண்டும் என நீட் தேர்வும் எழுதினோம். அதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. காலத்தை விரையம் செய்யக் கூடாது என்பதற்காக மகனை உக்ரைனுக்கு அனுப்பினோம்.

கடந்த மாதமே அமெரிக்க உளவுத்துறை உக்ரைனில் போர் ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தது. இது குறித்து என் மகனிடம் விசாரித்தபோது, `எங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தில் போர் ஏற்படும் சூழல் இல்லை எனக் கூறியுள்ளனர். மேலும் அவரவர் நாட்டுக்கு செல்ல விரும்புவோர் செல்லலாம்’ எனவும் கூறியுள்ளனர். இதனால் அங்குள்ள மாணவர்கள் உறுதியான முடிவெடுக்க முடியாமல் இருந்தனர். இருப்பினும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் 28 ஆயிரத்துக்கு எடுக்க வேண்டிய விமான டிக்கெட்டை 86 ஆயிரத்துக்கு எடுத்து பிள்ளைகளை நாடு திரும்ப முயன்றோம். அதற்குள் போர் ஏற்பட்டுவிட்டதால் அந்த விமான டிக்கெட்டும் வீணாகிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவர்கள்
மாணவர்கள்

கீவ் பகுதியிலுள்ள என் மகன் அருகே உள்ள ஏர்போர்ட்டை ரஷ்ய வீரர்கள் தகர்த்ததைப் பார்த்திருக்கிறார். இதேபோல ஏராளமான மாணவர்கள் குண்டு வெடிப்புச் சத்தம், போர்க் காட்சிகளைப் பார்த்து மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர்.

இன்று காலை எனக்கு போன் செய்த மகன், `அப்பா குடிக்கக்கூட தண்ணீ கிடைக்கலை, ரொம்ப பயமா இருக்கு’ என்றதைக் கேட்டு உள்ளம் பதறுகிறது. நேற்று இரவு வரை குண்டு வெடிப்புச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டிருக்கின்றன. இன்று காலை 8 மணிக்குப் பிறகு குண்டு சத்தங்கள் கேட்கவில்லை என்றிருக்கிறார்.

அதேபோல இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள முடியவில்லை. இந்தியா சார்பில் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பதெல்லாம் கேள்விப்படுகிறோம். ஆனால், நிஜம் என்னவென்று தெரியவில்லை. ஏனென்றால், உக்ரைனிலுள்ள முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. எல்லைப்பகுதியில் வேற்று நாட்டு விமானங்கள் இறங்க முடியாத சூழல் உள்ளது என்கிறார்கள். பிறகு எப்படி இந்திய விமானங்கள் அங்குள்ள மாணவர்களை மீட்டுவர முடியும்? கீவ் நகரில் 65 சதவிகிதத்தைக் கைப்பற்றியுள்ள ரஷ்ய ராணுவம் அங்கு தங்களின் கொடியையும் நாட்டியுள்ளனர். மேலும் போர் குறித்த பேச்சுவார்த்தைக்குக்கூட வர மறுக்கின்றனர். எனவே, இந்திய அரசு தலையிட்டு அங்குள்ள மாணவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பெற்றோர்கள்
பெற்றோர்கள்

இதற்கிடையே, உக்ரைனிலிருந்து நாடு திரும்பியுள்ள தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் மகன் தனுஷ்குமாரிடம் (20) பேசினோம். ``உக்ரைனின், கீவ் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் 3-ம் ஆண்டு படித்துவந்தேன். என்னுடன் தேனி மாவட்டம், கோம்பையைச் சேர்ந்த கோகுல், ஜெய் ஆகாஷ், ஷாரு அஸ்வின், கோபிகிருஷ்ணா, ரெனிடா, கரூரைச் சேர்ந்த லோகேஸ்வரன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சேலத்தைச் சேர்ந்த தேவ் ஆகிய ஒன்பது பேர் உக்ரைனிலிருந்து திரும்பினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முன்பு, பல்கலைக்கழகத்திலிருந்து `போர் தொடங்க வாய்ப்புகள் குறைவு’ என்றும், `தேவைப்பட்டால் சொந்த நாட்டுக்குச் செல்லலாம் அல்லது இங்கேயே இருந்து படிப்பை தொடரலாம்’ என்றும் தெரிவித்தனர். இதனால், பல மாணவ-மாணவிகள் படிப்பு முக்கியம் என்பதால் சொந்த ஊருக்குத் திரும்பாமல் கல்லூரிக்குச் சென்றனர். போர் தொடங்கிய நாள் வரை வகுப்புகள் நடந்தன. நாங்கள் கடந்த 22-ம் தேதியே உக்ரைனிலிள்ள கார்கிவ் பகுதியிலிருந்து ரயில் மூலம் லிவிவ் பகுதிக்குப் புறப்பட்டோம். அங்கிருந்து துருக்கியிலுள்ள இஸ்தான் புல் விமான நிலையத்துக்கு 23-ம் தேதி சென்றோம். பின்னர் அங்கிருந்து கத்தாரிலுள்ள தோகா விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்தோம். மூன்று விமானங்கள் மாறி கோழிக்கோடு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து பஸ்ஸில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தோம்.

தனுஷ்குமார்
தனுஷ்குமார்

நாங்கள் வந்ததுதான் கடைசி விமானம் என்று நினைக்கிறேன். விமானத்தில் வந்துகொண்டிருக்கும்போதுதான் போர் தொடங்கி, குண்டு வீசத் தொடங்கிய தகவல் கிடைத்தது. என்னோடு படிக்கும் சக மாணவர்களைத் தொடர்புகொண்டேன். அவர்கள் பல்கலைக்கழகங்களில் உள்ள பாதாள அறைகள் மற்றும் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பகுதிகளில் தங்கியிருப்பதாகத் தெரிவித்தனர்.

அங்கு அவர்கள் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். உக்ரைனில் தண்ணீரை ஏ.டி.எம் போன்ற மெஷின்களின் மூலம்தான் பெற முடியும். அந்த மெஷின் அனைத்தும் செயல்படாமல் உள்ளன. போர் காரணமாக தண்ணீர், உணவின்றி தவிப்பவர்களுக்கு அரசு உடனடியாக உதவிகள் செய்ய வேண்டும். போன்களுக்கு சார்ஜ் போடக்கூட வழியின்றி பல மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் பேச முடியாத நிலையில் உள்ளனர். மெட்ரோ சுரங்கப்பாதையில் பதுங்கியிருக்கும் மாணவிகள் கழிப்பறைக்குக்கூடச் செல்ல முடியாமல் தவிப்பதாகக் கூறுகிறார்கள்.

எங்களோடு உக்ரைனிலிருந்து புறப்பட்டு இஸ்தான் புல் விமான நிலையத்துக்கு வந்தவர்களில் இரண்டு பேர் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டு, தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால்தான் விமானத்தில் பயணம் செய்ய முடியும். அதற்கு தடுப்பூசி சான்றிதழ் எண் போன்ற விவரங்கள் தேவை. அது போன்ற விவரங்களை முழுமையாகக் கொடுக்க இயலாமல் இரண்டு பேர் அங்கு நிறுத்தப்பட்டனர். அவர்கள் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை” என்றார்.

உக்ரைன் - ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா

தேனி பங்களாமேடு, திட்டச்சாலையைச் சேர்ந்த சரவணன் மகன் ரோகித் குமார் (22). இவர் உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பு 3-ம் ஆண்டு படித்துவருகிறார். உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், கார்கிவ் நகரை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மாணவன் ரோகித்குமார், உக்ரைனில் தான் வசிக்கும் இடத்திலுள்ள நிலவரம் குறித்து ஒரு வீடியோ பதிவு செய்து தனது பெற்றோருக்கு அனுப்பியுள்ளார். அதில், ``நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனாலும் பயமாக இருக்கிறது. நேற்று இங்கு தொடர்ந்து குண்டுவெடிப்பு நடந்தது. நாங்கள் பாதுகாப்பான இடத்தில்தான் இருந்தோம். எங்களுக்கு உணவு கொடுத்தார்கள். காலையில்தான் பாதாள அறையிலிருந்து வெளியே வந்தோம். இருந்தாலும் மீண்டும் குண்டு வீச்சு நடந்தால் பாதுகாப்பாக இருக்க ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். எங்களை எல்லைக்கு கூட்டிச்சென்று எப்போது இந்தியாவுக்கு அழைத்துச் செல்வார்கள் என்ற விவரம் தெரியவில்லை. நான் படிக்கும் பல்கலைக்கழகத்தில் மட்டும் 200 தமிழ் மாணவர்கள் இருக்கிறோம். இன்னும் அரசிடமிருந்து முறையான உத்தரவு வரவில்லை. உத்தரவு வந்தால் எங்களை எப்படி இங்கிருந்து அழைத்துச் செல்வது என்ற விவரத்தைச் சொல்வதாக கூறியிருக்கிறார்கள். அது மட்டும் எங்களுக்கு வேகமாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.