Published:Updated:

`இப்படி மட்டும் இந்தியாவில் நடந்தால்?!' - நியூசிலாந்து அரசியல்

தற்போது நியூசிலாந்து நாட்டில் நடந்திருக்கும் ஒரு சம்பவம், இந்தியாவில் நடந்தால் நமது அரசியல்வாதிகளில் பலர் டாடா சொல்லிவிட்டு வீட்டுக்குப் போக நேரிடும். அப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்.

நியூசிலாந்து பழைய நாடுதான், ஆனால், தினம் தினம் 'நியூ'வாக நம்மை ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது நியூசிலாந்து நாட்டில் நடந்திருக்கும் ஒரு சம்பவம், இந்தியாவில் நடந்தால் நமது அரசியல்வாதிகளில் பலர் டாடா சொல்லிவிட்டு வீட்டுக்குப் போக நேரிடும். அப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்.

ஜெசிந்தா ஆர்டன்
ஜெசிந்தா ஆர்டன்

2017-ம் ஆண்டு 39 வயதே ஆன ஜெசிந்தா ஆர்டெர்ன் பிரதமராகப் பதவியேற்ற பிறகு அந்த நாட்டின் அரசியல் சூழல் வித்தியாசமாக மாறியிருக்கிறது. உலக நாடுகள் எல்லாம் ஒரே நேரத்தில் கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கிறது. உலகம் மொத்தத்திற்குமான ஒரே பிரச்னை எனும்போது, உலக நாடுகளின் தலைவர்களை எல்லாம் ஒரே தராசுத் தட்டில் ஏற்றிப்பார்த்தனர் உலக அரசியல் விமர்சகர்கள். அதில், மிகத் திறமையான தலைமையெனத் தன்னை நிரூபித்து, நியூசிலாந்து நாட்டை கொரோனாவிலிருந்து முழுவதும் விடுபட்ட நாடாக மாற்றினார் ஜெசிந்தா. இதற்கும் அவரின் மிக நேர்த்தியான நிர்வாகத் திறமையும், அரசை நிர்வகிப்பதில் அவருக்கு இருக்கும் நேர்மையும்தான் காரணம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதற்குச் சான்றாகத்தான் தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

ஜெசிந்தா ஆர்டெர்ன் அமைச்சரவையில் இமிகிரேஷன் அமைச்சராக இருந்தவர் இயன் லீஸ் - கால்லோவே. இவர் தன் கீழ் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் ஒரு வருடத்துக்கும் மேலாக முறையற்ற தொடர்பிலிருந்திருக்கிறார். இது பற்றிய தகவல் அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஜூடித் காலின்ஸ் என்பவருக்கு யாரோ ஒரு நபரால் மின்னஞ்சல் மூலம் அனுப்பப் பட்டிருக்கிறது. உடனடியாக நாடாளுமன்றக் கூட்டம் முடிந்தவுடன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்னை தனிமையில் சந்திக்கக் கேட்டிருக்கிறார் காலின்ஸ். பிரதமர் ஜெசிந்தா அதற்கு ஒப்புதல் அளிக்கவே, அவரிடம் நேரடியாக இந்த விஷயத்தைத் தெரிவித்து, ''இனி இதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்றிருக்கிறார்.

இயன்  லீஸ் - கால்லோவே
இயன் லீஸ் - கால்லோவே
AP

அதுமட்டுமன்றி, பிரதமர் தன்னைத் தொடர்புகொள்ள அளித்த மின்னஞ்சல் முகவரியையும் முதலில் தகவல் அளித்த நபரிடம் பகிர்ந்திருக்கிறார். "இப்படியான ஒரு செய்தி என் கவனத்துக்கு வந்ததும், என்னுடைய வேலை இந்தத் தகவலைப் பிரதமரிடம் கொண்டு சேர்ப்பதே, இது பற்றி மேற்கொண்டு, புகார் அளித்த நபரிடம் பேசி தகவல்களை அறிந்து கொள்ள நான் விரும்பவில்லை" எனச் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் காலின்ஸ். எதிர்க்கட்சியினர் பற்றி இப்படியான ஒரு ஆதாரத்துடன் கூடிய தகவல் கிடைக்கும் பட்சத்தில் நம்மூர் அரசியல்வாதிகளாக இருந்தால் என்ன செய்திருப்பார்கள்? கேள்விக்குறியும், ஆச்சர்யகுறியும் போட்டு அதை வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நியூசிலாந்துக்கு வருவோம்... அடுத்தடுத்து அங்கு நடந்தவையெல்லாம் மேலும் ஆச்சர்யத்தை அளிப்பவை. பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்ஸ் உடனடியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார். சம்பந்தப்பட்ட அமைச்சர் இயன் லீஸ் - கால்லோவே இடம் நேரடியாக இதுகுறித்து விசாரித்திருக்கிறார். முறையற்ற உறவு இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார் இயன். ஆனால், குறிப்பிட்ட இந்த முறையற்ற உறவு நீண்ட நாள்களுக்கு முன்னதாகவே முடிந்துவிட்டதாகவும், அந்தப் பெண்ணின் ஒப்புதலின் பேரிலேயே இந்த உறவு இருந்ததாகவும் கூறியிருக்கிறார் இயன்.

நியூசிலாந்து
நியூசிலாந்து

ஆனால், பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்ஸ் இந்தப் பதில்களில் சமாதானம் ஆகவில்லை. "இமிகிரேஷன் அமைச்சராக, இயன் மிகவும் பொறுப்பான ஒரு பதவியில் இருப்பவர். வேலையிடத்தில் இருக்கும் ஆரோக்கியமான பணி சூழல், கலாசாரத்துக்குப் பொறுப்புடைய அமைச்சகத்துக்குத் தலைமை தாங்கிய ஒருவரே, தன்னுடைய அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்ததாகத் தெரிகிறது. இதனால் அவர் மீது இந்த அரசு கொண்ட நம்பிக்கைக்கு முரணாக நடந்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதன் பேரில் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குகிறேன்" என அதிரடி காட்டியிருக்கிறார்.

அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதும், இயன் தன் வீட்டுக்குச் சென்று, தன்னுடைய குடும்பத்தினருக்குத் தகவலைத் தெரிவிக்கும்வரை அவகாசம் தந்து, பின்னர் ஊடக செய்தி வெளியிட்டிருக்கிறார் ஜெசிந்தா ஆர்டெர்ன். இந்த ஒருவருட உறவில், அரசு பணத்தை அந்தப் பெண்ணுக்காகச் செலவழித்தாரா என்றும் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முக்கியமாகச் சம்பந்தப்பட்ட பெண் யார் என்பது குறித்த அடையாளங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் இயன், "நான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டேன். பிரதமர் ஜெசிந்தா எடுத்த இந்த முடிவு சரியானதே. நான் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். என்னுடைய குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கோருகிறேன். என் குடும்பத்தினரின் தனியுரிமையை (privacy) தயவுசெய்து மதிக்க வேண்டுகிறேன்" என்றிருக்கிறார்.

`குட்பை  ஃப்ரீடம்' - ஹாங்காங்கின் மக்களாட்சிக் கனவுகளைப் பறித்த சீனா!

இதுமட்டுமல்ல, கடந்த வாரம் எதிர்க்கட்சி எம்.பி ஒருவர், ஒரு கல்லூரி மாணவிக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாக வெளியில் தெரியவந்ததை அடுத்து, அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இப்படியான புகார்கள் மட்டுமல்ல, கொரோனா பிரச்னையில் சரிவரச் சமாளிக்கவில்லை என்று புகார் எழுந்ததை அடுத்து அந்தநாட்டின் சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க் ராஜினாமா செய்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று உண்டு, அந்நாட்டில் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இப்படியான ஒரு இக்கட்டான சூழலில் எதிர்க்கட்சிகள் இப்படியான ஒரு புகாரை அறத்தோடு அணுகுவதும், ஆளுங்கட்சி தவற்றை ஒப்புக் கொள்வதும் எல்லாம்தான் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.

நாடாளுமன்றத்தில் ஆபாசப் படம் பார்ப்பது தொடங்கி, பிரசாரத்தில் கெட்ட வார்த்தையில் பேசுவது வரை எல்லாம் நடக்கும் இந்தியாவின் அரசியல் சூழலில் வளர்ந்தவர்கள் நாம். புகார்களும் மீண்டும் புகார்களும், மீண்டும் மீண்டும் வெற்று புகார்களும் மட்டுமே மிஞ்சி, எஞ்சி நிற்கும் இந்திய அரசியல் சூழலில் பழக்கப்பட்டவர்கள் நாம். இப்படியான செய்தி எல்லாம் நம்மை ஆச்சர்யப்படவைப்பது பெரிதில்லைதான். ஜெய் ஹிந்த்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு