Published:Updated:

"விலங்குகளைவிட மோசமாக நடத்தப்படுகிறோம்; உலகில் பிறந்திருக்கவே கூடாது!" - ஆப்கன் இளம்பெண் வேதனை

ஆப்கானிஸ்தான் பெண்கள்

பெண்களின் உயர்கல்வியை மொத்தமும் சிதைக்கும் விதமாக, பெண்கள் அனைவரும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல தடைவிதித்திருக்கிறது தாலிபன் அரசு.

"விலங்குகளைவிட மோசமாக நடத்தப்படுகிறோம்; உலகில் பிறந்திருக்கவே கூடாது!" - ஆப்கன் இளம்பெண் வேதனை

பெண்களின் உயர்கல்வியை மொத்தமும் சிதைக்கும் விதமாக, பெண்கள் அனைவரும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல தடைவிதித்திருக்கிறது தாலிபன் அரசு.

Published:Updated:
ஆப்கானிஸ்தான் பெண்கள்

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தாலிபன்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அங்குப் பெண்களுக்கு எதிராக சட்டங்கள் மிகவும் கடுமையாக விதிக்கப்பட்டுவருகின்றன. பெண்கள் ஆண் துணையில்லாமல் வெளியில் பயணம் செய்ய தடை, பெண்கள் பூங்காக்களுக்குச் செல்ல தடை, கட்டாய ஹிஜாப், பர்தா போன்ற பல கடுமையான சட்டங்களை பெண்கள் எதிர்கொள்கின்றனர். அதோடு ஆப்கானிஸ்தானின் பல இடங்களில் பெண்களுக்கு மேல்நிலை பள்ளிகளில்கூட தடைவிதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தாலிபன்
தாலிபன்

இதெல்லாம் போதாதென்று தற்போது பெண்களின் உயர்கல்வி மொத்தத்தையும் சிதைக்கும் விதமாக, பெண்கள் அனைவரும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல தடைவிதித்திருக்கிறது இந்த தாலிபன் அரசு. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பு கனவுகளுடன் இருந்த பல பெண்களுக்கு இந்த செய்தி தலையில் இடியே விழுந்தது போல் ஆகிவிட்டது. இதற்கு ஆப்கானிஸ்தான் பெண்கள் பலரும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் மருத்துவக் கனவுடன் நுழைவுத்தேர்வை முடித்துவிட்டு மருத்துவ பல்கலைக்கழகத்தில் சேரவிருந்த ஒரு பெண், `இதற்கு பெண்களின் தலையைத் துண்டிக்க உத்தரவிட்டிருந்தால் சிறந்ததாக இருந்திருக்கும்' என வேதனையோடு தன் வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் பெண்கள்
ஆப்கானிஸ்தான் பெண்கள்

ஊடகமொன்றிடம் பேசிய மார்வா எனும் அந்தப் பெண், ``நாம் மிகவும் துரதிஷ்டசாலிகளாக இருப்பதற்கு இந்த உலகில் நாம் பிறந்திருக்கவே கூடாது என்று நினைக்கிறன். இந்த உலகில் நான் இருப்பதற்காக நான் வருந்துகிறேன். பெண்களின் தலையைத் துண்டிக்க அவர்கள் உத்தரவிட்டிருந்தால், அது இந்த தடையை விடவும் சிறப்பாக இருந்திருக்கும். விலங்குகளைவிட மோசமாக நாங்கள் நடத்தப்படுகிறோம். விலங்குகள்கூட எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், பெண்களான எங்களுக்கு எங்கள் வீட்டைவிட்டு வெளியேறக்கூட உரிமை இல்லை" என்று கூறினார்.

ஆப்கானிஸ்தான்  பெண்கள்
ஆப்கானிஸ்தான் பெண்கள்

19 வயதாகும் மார்வா சமீபத்தில்தான் ஆப்கானிஸ்தான் தலைநகரிலுள்ள ஒரு மருத்துவ பல்கலைக்கழகத்தில் மார்ச் முதல் நர்சிங் பட்டப்படிப்பைத் தொடங்குவதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். அதேசமயம், தன்னுடைய குடும்பத்தில் பல்கலைக்கழகம் செல்லும் முதல் பெண்ணாக, மருத்துவச்சியாகவேண்டும் என்ற கனவோடிருந்த ஒரு லட்சியப் பெண்ணுக்கு, தலிபன்களின் இந்த முடிவு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டது. மேலும் இந்த திடீர் அறிவிப்பால் பெண்கள் பலரும் வகுப்பறையில் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.