Published:Updated:

பிரேசில் : `அமேசான் எரிகிறது என்ற கதை பொய்யானது!’ - அதிபர் பொல்சனாரோ

பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ
பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ

``அமேசானில் தீ இயற்கையாக உருவாகவில்லை. மனிதர்களால் உருவாக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கடுமையான தீ ஏற்பட்டது. இதில் உருவான புகையானது ஆயிரக்கணக்கான கி.மீ அப்பால் உள்ள சாவோ பவுலோ நகரில் தென்பட்டது”

உலகின் மிகப்பெரிய காடு, அமேசான். சுமார் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தக் காடு விரிந்து காணப்படுகிறது. பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈகுவேடார், கயானா, பெரு, சுரிநேம், வெனிசூலா உள்ளிட்ட நாடுகளில் அமேசான் படர்ந்துள்ளது. பூமியின் நுரையீரலாகக் கருதப்படும் இந்த அமேசான் காட்டில் இருந்துதான், உலகின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தியில் சுமார் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதிகளவில் நன்னீரையும் இந்தக் காடுகள்தான் அளித்து வருகின்றன. பல்வேறு மொழிகளைப் பேசும் பழங்குடி மக்கள் இங்கே வாழ்ந்து வருகின்றனர். மருத்துவ குணம் கொண்ட அரிய வகை மூலிகைகள் மற்றும் அரிய வகை உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன.

அமேசான்
அமேசான்
RT

குறிப்பாக, அமேசான் காடுகள் பிரேசிலில்தான் அதிகளவில் பரந்துள்ளது. பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஐ.என்.பி.இ, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2019-ம் ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் சுமார் 10,129 சதுர கி.மீ அளவு காடு அழிக்கப்பட்டுள்ளதாகத் தகவலை வெளியிட்டது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மேன்படுத்த அந்நாட்டு அதிபர் பொல்சனாரோ தொடர்ந்து காடுகள் அழிப்பில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தநிலையில், பிரேசிலியப் பகுதியில் உள்ள அமேசானில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீ பாதிப்பு இருந்ததைவிட இந்த ஆண்டு ஜூலை மாதம் சுமார் 28% அதிக தீ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

`10,000 சதுர கி.மீ மழைக்காடுகள் அழிப்பு; தொடரும் சட்டவிரோத நடவடிக்கைகள்!’ - ஆபத்தில் அமேசான்

பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் அமேசான் மழைக் காடுகளில் 6,803 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகப் பதிவு செய்துள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டில் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம் எனவும் தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5,318 தீ விபத்துகள் பதிவாகி இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமேசானில் தீ பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கவும் அதிபர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என சர்வதேச அளவில் தொடர்ந்து அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் அதிபர் பொல்சனாரோ, ``வெப்பமண்டல மழைக்காடுகளில் தீ பிடிக்காது. எனவே, அமேசான் எரிந்து கொண்டிருக்கிறது என்ற கதை பொய்யானது” என்று தெரிவித்துள்ளார்.

அமேசான்
அமேசான்
AP

இயற்கை ஆர்வலர்கள் காடழிப்பு தொடர்பாக பேசுகையில், ``அமேசானில் தீ இயற்கையாக உருவாகவில்லை. காடுகளை அழிக்க மனிதர்களால் உருவாக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கடுமையான தீ ஏற்பட்டது. இதில் உருவான புகையானது ஆயிரக்கணக்கான கி.மீ அப்பால் உள்ள சாவோ பவுலோ நகரில் தென்பட்டது” என்று தெரிவித்துள்ளனர்.

காடுகள் அழிப்பு மிகப்பெரிய பாதிப்பை வரும் நாள்களில் ஏற்படுத்தும் என்றும் இதற்காக உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும், அந்நாட்டு அரசு இவற்றை மறுத்து வருகிறது. இதனால், ஆர்வலர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

பிரேசில்: `அமேசானின் நிலை மிகவும் கவலையளிக்கிறது!’ - அதிகரிக்கும் தீயால் ஆர்வலர்கள் வேதனை
அடுத்த கட்டுரைக்கு