Published:Updated:

`முறையான அனுமதி பெறவில்லை...!' - லண்டனில் உள்ள அம்பேத்கர் மியூசியத்தை மூட உத்தரவு!

எம்.குமரேசன்

``கட்டடம் மியூசியமாக மாற்றப்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் வருகிறார்கள். அவர்கள் அதிக சத்தம் எழுப்புகிறார்கள்.''

Ambedkar’s museum
Ambedkar’s museum

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் நிறுவனத்தில் படித்தவர். வடக்கு லண்டனில் நம்பர் 10, கிங் ஹென்றி தெருவில் உள்ள 4 மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதியில் அம்பேத்கர் வசித்தார். 1921 -22 ம் ஆண்டுகளில் இந்தக் கட்டடத்தில் அம்பேத்கர் வாழ்ந்து வந்துள்ளார். அம்பேத்கர் வசித்த இந்தக் கட்டடத்தை மகாராஷ்டிரா அரசு ரூ.31 கோடி கொடுத்து வாங்கியது.

Ambedkar’s museum Opened by MOdi
Ambedkar’s museum Opened by MOdi

கட்டடத்தை லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் பராமரித்து வருகிறது. 2050 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்தக் கட்டடம் மியூசியமாக மாற்றப்பட்டது. மியூசியத்துக்குள் அம்பேத்கர் சிலை உள்ளது. 2015- ம் ஆண்டு பிரதமர் மோடி இங்கிலாந்துக்குச் சென்ற போது, இந்த மியூசியத்தை திறந்து வைத்தார். வீட்டை மியூசியமாக மாற்ற அங்கு வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி கட்டடம் மியூசியமாக மாற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கட்டடத்தை நிரந்தரமாக மியூசியமாக மாற்றுவதற்காக இந்தியத் தூதரகம், லண்டன் மாநகரத் திட்டக் குழுவிடம் (Camden council) விண்ணப்பித்தது. ஆனால், மக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்தக் கட்டடம் இருப்பதால் அதை மியூசியமாக மாற்ற லண்டன் நகரத் திட்டக் குழு மறுப்பு தெரிவித்துள்ளது. மீண்டும் கட்டடத்தை மக்கள் வசிக்கும் வீடாகப் பயன்படுத்த ஒப்படைக்க வேண்டுமென்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Ambedkar’s museum
Ambedkar’s museum

இங்கு வசிக்கும் சூப்ரைஸ் என்பவர், ``கட்டடம் மியூசியமாக மாற்றப்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் வருகிறார்கள். அவர்கள் அதிக சத்தம் எழுப்புகிறார்கள். வாரத்தின் ஏழு நாள்களும் இதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். இந்தக் கட்டத்தை மியூசியமாக மாற்றுவது குறித்து எங்களிடம் விவாதிக்கப்படவில்லை'' எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

1916- ம் ஆண்டு முதன்முறையாக அம்பேத்கர் லண்டனுக்குச் சென்றார். 1921- ம் ஆண்டு இந்தியா திரும்பினார். 1923-ம் ஆண்டு `The Problem of the Rupee’ என்ற தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார். கட்டடத்தின் ஒரு பகுதியில் அம்பேத்கர் பயன்படுத்திய பொருள்கள் மக்கள் பார்வைக்கு வைக்கவும் மற்றொரு பகுதியில் நூலகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

London School of Economics
London School of Economics

மேலும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் நிறுவனத்தில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைக்கும் இரு மாணவர்கள் இங்கே தங்கியிருந்து படிக்கும் வசதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் இரு இந்திய மாணவர்களுக்கு அம்பேத்கர் பெயரில் ஸ்காலர்ஷிவ் வழங்க முன் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்டடம் 125 ஆண்டுக்காலம் பழைமையானது. தற்போது, மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மேல்முறையீடு மனு Camden council அமைக்கப்பட்டக் குழுவிடம் செப்டம்பர் 24-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.