Published:Updated:

16 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் இலங்கை தமிழ்ப் பெண் அம்பிகை செல்வக்குமார் - என்ன காரணம்?

அம்பிகை செல்வக்குமார்
அம்பிகை செல்வக்குமார்

இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலையில் தொடர்புடைய இலங்கை அரசை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஈழத்தமிழ்ப் பெண் அம்பிகை செல்வக்குமார் தொடர்ந்து 16-வது நாளாக லண்டனில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

அம்பிகை செல்வக்குமார், லண்டனில் வசித்துவரும் இலங்கைத் தமிழ்ப் பெண். இனப்படுகொலையைத் தடுப்பதற்கான சர்வதேச மையத்தின் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி முதல் தொடர்ந்து 16 நாள்களாக உண்ணாவிரதமிருந்து வருகிறார். இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரியும், இதில் தொடர்புடைய இலங்கைக்கு எதிராக சர்வதேச மனித உரிமை பேரவையில் ஆதரவு அளிக்கக் கூடாது என்பது இவரது கோரிக்கை. தற்போது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருக்கும் நிலையில், அவரின் வீட்டுக்கு முன் குவிந்துள்ள ஆதரவாளர்களான தமிழர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அம்பிகை செல்வக்குமார்
அம்பிகை செல்வக்குமார்

உண்ணாவிரதம் குறித்து அம்பிகை செல்வக்குமார் கூறுகையில், ``இலங்கையில், ஈழத் தமிழர்கள் மீதான போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றுகுவித்த இலங்கை மீது, ஜெனீவாவிலுள்ள ஐ.நா-வின் மனித உரிமைப் பேரவையில், பிரிட்டன் அரசின் ஆதரவு நாடுகள் இலங்கைக்கு ஆதரவான தீர்மானத்தை முன்வைக்கவிருக்கிறார்கள். இது இலங்கை அரசு மேலும் மேலும் தமிழ் மக்களைத் துன்பறுத்தவும், இதுவரை செய்த கொடுமைகளைத் தொடரவும், கொன்றுகுவித்த மக்களின் மீதான நியாயத்தை கேள்விக்குறியாக்கும் நிலையில் உள்ளது. இதை எதிர்த்து, பிரிட்டன் அரசிடம் கோரிக்கைவைத்து சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில், நார்வே முதல் பல்வேறு நாடுகளிலுள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக திரைப்பிரபலங்கள், அரசியவாதிகள் ஆகியோர் தங்கள் ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர்.

மேலும் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகிவருகிறது. இந்தநிலையில் ஈழத் தமிழ்ப் பெண்னின் உயிரைக் காப்பாற்ற உலகத் தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் சில நாள்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்தார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பிரிட்டனின் தூதரகத்தில், தமிழீழ விடுதலைக்கான இளையோர் கூட்டமைப்பு மற்றும் அனைத்துலக தமிழர் செயலகம் சார்பில் கோரிக்கை மனு ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு