Published:Updated:

இஸ்ரேல்-பாலஸ்தீன போர்: ரூ. 5,000 கோடிக்கு இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை! - ஒப்புதல் வழங்கிய அமெரிக்கா

இஸ்ரேல்-பாலஸ்தீன போர்
இஸ்ரேல்-பாலஸ்தீன போர் ( AP )

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்தச் செயலை, ``ரத்தக்கறை படிந்த உங்கள் கைகளால் வரலாற்றை எழுதுகிறீர்கள்” என துருக்கி அதிபர் எர்டோகன் விமர்சித்துப் பேசியுள்ளார்.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீன விடுதலைப் போராளிகளான ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான போர் நடைபெற்றுவருகிறது. இந்த மோதலில் இதுவரை மொத்தம் 222 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக பாலஸ்தீனத்தில் 61 குழந்தைகள் உட்பட 212 பேரும், இஸ்ரேலில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் கடந்த ஞாயிறு மட்டும் 42 பேர் உயிரிழந்ததாக காசா பகுதியின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த அல்ஜசீரா, அசோசியேட் பிரஸ் போன்ற பத்திரிக்கை நிறுவனத்தின் அலுவலகத்தையும் குண்டுவீசி தரைமட்டமாக்கியது இஸ்ரேல்.

இஸ்ரேல்- பாலஸ்தீன தாக்குதல்
இஸ்ரேல்- பாலஸ்தீன தாக்குதல்
Adel Hana

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரை நிறுத்த வேண்டும் எனப் பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துவருகின்றன. போரில் அதிகமாக பாதிக்கப்பட்டுவரும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், அதன் அங்கமான காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும் இந்தியா உட்பட பல்வேறு நாட்டு மக்களும் வீதியில் இறங்கி குரலெழுப்பிவருகின்றனர். அதேநேரம், அமெரிக்கா உள்ளிட்ட சில வல்லரசு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றன.

போரின் ஆரம்பகட்டத்திலிருந்தே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கவலை தெரிவித்து தொடர்ச்சியாகக் கருத்து தெரிவித்துவந்தார். பின்னர், இஸ்ரேலுக்குத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை உள்ளது என இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பேசினார். தற்போது, போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜோ பைடன் |
ஜோ பைடன் |
Andrew Harnik

ஒருபுறம் "இரு நாடுகளும் வன்முறையை கைவிட வேண்டும்”, “போர் நிறுத்தம் செய்ய வேண்டும்” என அமைதி கருத்து தெரிவித்துக்கொண்டே, இஸ்ரேலுடன் பல மில்லியன் கோடிக்கு ஆயுத விற்பனைக்கான ஒப்பந்தத்துக்கும் ஒப்புதல் அளித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

இது குறித்து அந்நாட்டின் பிரபல பத்திரிகையான `வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்ட செய்தியில், `இஸ்ரேலுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 735 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில், இஸ்ரேல் நாட்டுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன போர்
இஸ்ரேல்-பாலஸ்தீன போர்
Yousef Masoud

இந்திய ரூபாயில் சுமார் 5.4 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஆயுதங்களில், இலக்கை துல்லியமாக குறிவைத்து தாக்கி அழிக்கும் உயர் ரக ஆயுதங்களும் அடங்கியுள்ளன. இதனால், பாலஸ்தீனத்தின் காசா பகுதிமீது இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் இன்னும் அதிதீவிரமாக இருக்கும் எனப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பதற்றத்தில் உள்ளனர்.

மேலும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி, `இஸ்ரேலுடனான ஆயுத விற்பனை தொடர்பாக மே 5-ம் தேதியே அமெரிக்க காங்கிரஸுக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்கிறது. மேலும், `இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மோதல் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே இஸ்ரேலுடனான ஆயுத விற்பனை குறித்த தகவலை அமெரிக்க காங்கிரஸிடம் ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய சில காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்’ என செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: `1948 டு 2021’ ; ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! - என்ன பிரச்னை?

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்தச் செயலை, `ரத்தக்கறை படிந்த உங்கள் கைகளால் வரலாற்றை எழுதுகிறீர்கள்’ என துருக்கி அதிபர் எர்டோகன் விமர்சித்துப் பேசியுள்ளார். உலக அளவில், ஆயுத விற்பனை மற்றும் ஏற்றுமதியில் பல்லாண்டு காலமாக அமெரிக்காவே முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து அதிகப்படியான ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் சவுதி அரேபியா, இந்தியா, தைவான் உள்ளிட்ட நாடுகள் முன்னணியில் உள்ளன. குறிப்பாக, கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவத்துறையின் கீழ் செயல்படும், ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் (TSCA) வெளியிட்ட தகவல்படி, `இந்தியா சுமார் 25,000 கோடிக்கு அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி, அமெரிக்க ஆயுதங்களை மிக அதிக அளவு கொள்முதல் செய்த நாடு என்ற பெயரை எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்

அமெரிக்கா உலகளாவிய தனது ஆயுத விற்பனையை அதிகரிக்க, உலக நாடுகளுக்கிடையே செயற்கையான போர்களைத் தூண்டிவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. உதாரணமாக இந்தியா-பாகிஸ்தான், சீனா-தைவான், வடகொரியா-தென்கொரியா, சவுதி அரேபியா மற்றும் அரபுநாடுகள் என நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இருவேறுபட்ட நாடுகளுக்கும் ஆயுத விற்பனை செய்வதாக பகீர் குற்றச்சாட்டுகளை ஏற்கெனவே பல்வேறு உலகத் தலைவர்கள் முன்வைத்துவருகின்றனர்.

இந்தநிலையில், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் தலையிட்டு போர் நிறுத்தம் செய்து, சுமுகமான தீர்வு எட்டப்பட வழிவகுக்காமல், மேலோட்டமாகப் போரை எதிர்ப்பது போன்றும், இன்னொரு புறம் ஆயுத விற்பனையை இஸ்ரேலுடன் தொடங்கி போரை ஊக்குவிப்பதும் போன்றும் இருக்கும் அமெரிக்காவின் செயல்பாடுகள் சந்தேகத்தை கிளப்பிவருகின்றன. மேலும் இதை, "இது அமெரிக்காவின், போர்ச்சூழலில் லாபம் பார்க்கும் வழக்கமான சுயநல அரசியல்" என உலக அரசியல் நோக்கர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: ஓயாத போர் மேகம்... 31 குழந்தைகள் உட்பட 119 பேர் உயிரிழந்த சோகம்!
அடுத்த கட்டுரைக்கு