Published:Updated:

`கடைசிவரை கிடைக்காத ஆயுதம்!' - இராக் மீது அமெரிக்கா போர் அறிவித்த தினம் இன்று

இராக் போர்
இராக் போர்

இராக் மீது அமெரிக்கா போர் தொடுக்கப்போவதாக அறிவித்த தினம் (மார்ச் 19, 2020) இன்று.

‘War Monger’ என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. எப்போதும் போர், பதற்றம் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிற மனநிலையைத்தான் அவ்வாறு குறிப்பிடுவர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மனநிலையும் அதுவே. 20-ம் நூற்றாண்டில் நடைபெற்ற பெரும்பாலான உள்நாட்டுப் போர், குழப்பங்களின் காரணகர்த்தா ஏகாதிபத்திய அமெரிக்காவே. அவ்வாறு பேரழிவிற்கான ஆயுதங்களை சதாம் உசேன் வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் போர் பிரகடனம் அறிவித்த தினம் இன்று.

அமெரிக்கா
அமெரிக்கா

லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தென் கிழக்கு ஆசியா என அமெரிக்கா போரில் ஈடுபட்ட பிராந்தியங்களின் பட்டியல் நீண்டது. சோவியத் ரஷ்யாவுடனான பனிப்போர், மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தின் மீதான ஆதிக்கம் எனப் பல்வேறு காரணங்களைச் சொல்லி, அமெரிக்கா தன்னுடைய போர் வியாபாரத்தை மேற்கொண்டுவந்தது.

தற்போது, அந்த வியாபாரத்தை முன்னின்று நடத்திவருபவர், தொழிலதிபராக இருந்து அமெரிக்க அதிபராக மாறிய டொனால்டு ட்ரம்ப். ட்ரம்ப் பயணம் செய்கின்ற அனைத்து நாடுகளுடனும் ஆயுத ஒப்பந்தங்களை கோடிக் கணக்கில் மேற்கொண்டுவருகிறார். சமீபத்தில், இந்திய வருகையின்போதும் இந்திய அரசுடன் 21 ஆயிரம் கோடிக்கு ஆயுத ஒப்பந்தங்களைச் செய்துள்ளார்.

இரான் ராணுவத் தளபதி சுலைமானியை சட்டவிரோதமாகக் கொன்று, மத்திய கிழக்கை மீண்டும் போர் பதற்றத்துக்கு இட்டுச் சென்றார், ட்ரம்ப். இராக் போரில் செய்த தவற்றை இரானிலும் அமெரிக்கா செய்யக்கூடாது என அமெரிக்காவுக்குள்ளுமே இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ‘பேரழிவிற்கான ஆயுதங்களை சதாம் உசேன் வைத்துள்ளார். இது, அமெரிக்காவின் நலனுக்கு ஆபத்தானது’ என்று கூறித்தான் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இராக் மீது போர் தொடுத்தன. சதாம் உசேன் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டார். ஆனால், 'கிணத்தைக் காணவில்லை' என்பதைப் போல இராக்கில் இருப்பதாக அமெரிக்கா உலகம் முழுவதும் பிரசாரம் செய்த பேரழிவிற்கான ஆயுதங்கள் கடைசி வரை கிடைக்கவில்லை. பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு, இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததாகப் பலரும் பின்னர் ஒப்புக்கொண்டனர்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்
ஆன்லைன் பொருள்கள் டெலிவரியின் மூலம் கொரோனா தொற்று ஏற்படுமா... மருத்துவர்கள் சொல்வது என்ன?

இன்று, கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அனைத்து நாடுகளும் தங்களுடைய எல்லைகளை மூடிவருகின்றன. உள்நாட்டிற்குள் மக்கள் நடமாட்டம் முடங்கிவருகிறது. சீனாவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா, தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. சீனா, இரான், இத்தாலி போன்ற நாடுகள் கொரோனாவால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஆரம்பம் முதலே கொரோனா வைரஸை சட்டைசெய்யாமலே இருந்துவந்தார். தற்போது வரை கொரோனா வைரஸை 'சைனீஸ் வைரஸ்' என்றே சொல்லிவருகிறார்.

ஆனால், அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் தற்போது மெல்ல மெல்ல உணரப்பட்டுவருகிறது. தற்போது, அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்க சுகாதாரத்துறையின் பாதகங்களும் தற்போது வெளி உலகத்திற்குத் தெரிய வந்துள்ளன. உலக நாடுகளால் ராணுவத் தேவைகளுக்காக நிதியுதவி அளித்துவரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

கொரோனா
கொரோனா

கொரோனா நோய் பாதிப்புகள், மனிதர்களை பாரபட்சமின்றித் தாக்குகின்றன. சாதாரண குடிமகன் தொடங்கி கனடா பிரதமரின் மனைவி வரை கொரோனா தாக்கியுள்ளது. ஆனால், அவ்வாறு பாதிக்கப்படும் மனிதர்களுக்கு ஒரே மாதிரியான மருத்துவ வசதிகள், சிகிச்சைகள் கிடைக்கின்றவா என்றால் இல்லை. மருத்துவ சேவைகளை வழங்குவதில் உள்ள பற்றாக்குறையைப் போக்க, ஸ்பெயின் தன்னுடைய தனியார் மருத்துவமனைகள், மருத்துவ சேவைகளை நாட்டுடமையாக்கியுள்ளது.

மிக நீண்ட காலத்தில் உலகம் எதிர்கொள்கிற மிகப்பெரிய அச்சுறுத்தலாக கொரோனா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து மீண்டு வருகிற அதேசூழலில், போர் மற்றும் ராணுவத் தயாரிப்புகளுக்காக செலவிடப்படும் பல லட்சம் கோடிகள் என்ன நன்மைகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதையும் நாம் யோசித்துப்பார்க்க வேண்டும்.

கொரோனா
கொரோனா
கொரோனா எதிரொலி -  தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை கோயில்களில் சாமி தரிசனம் ரத்து #NowAtVikatan

கொரோனா பாதிப்புகளை கருத்தில்கொண்டு, வீட்டிலிருந்து பணிசெய்ய ஊழியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே நேரத்தில், வீடே இல்லாமல் தெருவோரங்களில் வாழும் மக்களின் நிலை என்ன என்கிற கேள்வியும் இங்கு எழுகிறது. இத்தகைய ஏற்றத்தாழ்வுகளுக்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல. பொருளாதார சமமின்மை வரலாற்றில் இல்லாத உச்சத்தில் இருக்கிற காலகட்டத்தில், மருத்துவம் என்கிற அடிப்படை வசதியை அனைவருக்கும் சமமானதாக கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்கிற குரல்களும் எழுந்துள்ளன. போர் விரும்பிகள் இனியாவது உணர்ந்துகொள்வார்களா?

அடுத்த கட்டுரைக்கு