Published:Updated:

``அமெரிக்கா இனவெறி நாடு எனக் கூறுவது ஃபேஷனாகிவிட்டது!" - வைரலான நிக்கி ஹேலியின் பேச்சு

Nikki Haley
Nikki Haley ( AP Photo / Susan Walsh )

அமெரிக்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சிக்கும் ட்ரம்ப்புக்கும் ஆதரவாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி பேசியிருப்பது பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு இருக்கும் பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியினருக்கு இடையேயான அரசியல் மோதல் அதிகமாகத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு தற்போதைய அதிபர் ட்ரம்பும், துணை அதிபர் பதவிக்கும் தற்போதைய அதிபர் மைக் பென்ஸும் போட்டியிடவுள்ளனர். அதேபோல் ஜனநாயக கட்சியைப் பொறுத்தவரை அதிபர் பதவிக்கு ஜோ பிடனும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸூம் போட்டியிடவுள்ளனர்.

Kamala Harris
Kamala Harris
AP Photo / Carolyn Kaster

கமலா ஹாரிஸ் இந்திய மற்றும் அமெரிக்க ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஜமைக்காவையும் தாய் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அமெரிக்க அரசியலில் கமலா ஹாரிஸ் சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்துள்ளார். இவருக்குப் போட்டியாக தங்கள் கட்சியில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண்ணை களமிறக்கியுள்ளது குடியரசு கட்சி. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. நிக்கி ஹேலி 2024-ம் ஆண்டு தேர்தலில் குடியரசு கட்சியின் பிரதான வேட்பாளராக இருப்பார் என கூறப்படுகிறது.

`கமலா ஹாரிஸைவிட என்னிடம் அதிக இந்தியர்கள் உள்ளனர்!’ - அதிபர் ட்ரம்ப்

இந்திய - அமெரிக்க அரசியல்வாதியும், ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதருமான நிக்கி ஹேலி, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அண்மையில் பேசியுள்ளார். அதில், ``அமெரிக்கா ஒரு இனவெறி நாடு இல்லை. இந்தியாவிலிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் மகள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். என் தந்தை தலைப்பாகை அணிந்திருந்தார், தாய் புடவை உடுத்தியிருந்தார். நான் கறுப்பு மற்றும் வெள்ளை உலகில் ஒரு பழுப்பு நிறப் பெண். என் குடும்பம் நிறைய பாகுபாடுகளையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டது. ஆனால் ஒருபோதும் என் பெற்றோர் எனக்குக் குறைகளையும் வெறுப்பையும் கற்பிக்கவில்லை.

Nikki Haley
Nikki Haley
AP Photo / Susan Walsh

அமெரிக்கா ஒரு முன்னேற்றத்தைக் காணும் நாடு, தற்போது அந்த முன்னேற்றத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. அமெரிக்காவை இன்னும் சுதந்திரமாகவும் அழகாகவும் சிறப்பாகவும் மாற்ற வேண்டும். அதனால்தான் ஜனநாயக கட்சி, கண்மூடித்தனமாகக் கலவரத்தை நோக்கி மாறுவதைப் பார்க்கத் துன்பமாக உள்ளது. ஒவ்வொரு அமெரிக்க ஆப்ரிக்கரின் வாழ்க்கையும் மதிப்பு மிக்கது என்பதை நாங்கள் அறிவோம். அமெரிக்கா இனவெறி மிக்க நாடு என்று கூறுவது ஃபேஷனாகிவிட்டது. ஆனால் அது முற்றிலும் பொய்யானது, நிச்சயமாக அமெரிக்கா இனவெறி நாடு கிடையாது. ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் பிரசாரத் திட்டங்களானவை அராஜகங்கள், கலவரங்கள் மற்றும் கலாசார எதிர்ப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்டுள்ளன” என்று எதிர்க்கட்சியினரையும் ஜோ பிடனையும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் ஹேலி. இவரது பேச்சு அமெரிக்காவில் வைரலாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு