Published:Updated:

அதிபர் சஸ்பென்ஸில் அமெரிக்கத் தேர்தல்!

ட்ரம்ப்
பிரீமியம் ஸ்டோரி
ட்ரம்ப்

அமெரிக்காவை உலகம் பார்க்கும்விதம் வேறு; அமெரிக்கர்கள் பார்க்கும்விதம் வேறு. முதிர்ச்சியாகவும் பக்குவமாகவும் முடிவுகள் எடுக்கும் ஜனநாயக தேசமாக உலகம் அதைப் பார்க்கிறது.

அதிபர் சஸ்பென்ஸில் அமெரிக்கத் தேர்தல்!

அமெரிக்காவை உலகம் பார்க்கும்விதம் வேறு; அமெரிக்கர்கள் பார்க்கும்விதம் வேறு. முதிர்ச்சியாகவும் பக்குவமாகவும் முடிவுகள் எடுக்கும் ஜனநாயக தேசமாக உலகம் அதைப் பார்க்கிறது.

Published:Updated:
ட்ரம்ப்
பிரீமியம் ஸ்டோரி
ட்ரம்ப்
‘இவ்வளவு குழப்பமான ஒரு தேர்தல் நடைமுறையை வடிவமைத்தது யார்’ என்பதுதான் இப்போது அமெரிக்க இளைஞர்கள் மனதில் எழுந்திருக்கும் மில்லியன் டாலர் கேள்வி. ஒரு தேர்தலில் போட்டியிட்ட இருவருமே தாங்கள் வெற்றிபெற்றதாக அறிவித்துக்கொண்டால், குழப்பம்தானே வரும்! கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கு உலகத்துக்கே முன்மாதிரியாக இருக்கும் அமெரிக்காவில்தான், உலகிலேயே மிகவும் சிக்கலான தேர்தல் நடைமுறை இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘ஜோ பைடன் வெல்வார்’ என்ற எதிர்பார்ப்பில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே அமெரிக்க பங்குச்சந்தை உயர்கிறது. ஜோ பைடன் முன்னணி என அறிந்ததும் மும்பை பங்குச்சந்தை உயர்கிறது. இப்படி அமெரிக்காவில் நிகழும் எந்த மாற்றமும் உலகம் முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்காவை உலகம் பார்க்கும்விதம் வேறு; அமெரிக்கர்கள் பார்க்கும்விதம் வேறு. முதிர்ச்சியாகவும் பக்குவமாகவும் முடிவுகள் எடுக்கும் ஜனநாயக தேசமாக உலகம் அதைப் பார்க்கிறது. இன்னொரு பக்கம் விஷம் தோய்ந்த கருத்துகளால் அமெரிக்கச் சமூகத்தையே பிளவுபடுத்தியவர், கொரோனாவை அலட்சியம் செய்து 2,35,000 அமெரிக்கர்கள் பலியாகக் காரணமாக இருந்தவர், வரலாறு காணாத அளவுக்கு வேலையிழப்புகள் ஏற்படும் வகையில் பொருளாதாரத்தைச் சேதப்படுத்தியவர்... இப்படியெல்லாம் ட்ரம்ப்பை உலகம் பார்க்கிறது. அதனால் அவர் படுதோல்வி அடைவார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், ‘நான் ஜெயித்துவிட்டேன்’ எனத் தேர்தல் முடிவை அறிவிப்பதற்கு முன்பே வெற்றியைக் கொண்டாடுகிறார் ட்ரம்ப். கொரோனா சேதாரங்களைக் கண்ணெதிரே பார்த்தாலும், அமெரிக்கர்களில் ஒரு பிரிவினர் அவரைக் கைகழுவத் தயாராக இல்லை. குறிப்பாக, வெள்ளை இனத்தவர்களில் பெரும்பான்மையினர் அவரைப் பாதுகாவலராக நினைக்கின்றனர். அமெரிக்காவின் பழைய பெருமையை மீட்பவராக அவரை நம்புவோர் அதிகம்.

ஜோ பைடன்
ஜோ பைடன்

இப்படிப்பட்ட சூழலில்தான், தெளிவற்ற ஒரு தேர்தல் முடிவு வந்திருக்கிறது. கடந்த 120 ஆண்டுகளில் இல்லாதபடி அதிக அளவு ஓட்டுப்பதிவு நடந்திருந்தாலும், நகம் கடித்தபடி முடிவுக்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. முடிவு எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழல். அதை இரண்டு தரப்புமே ஏற்க மறுக்கும் என்பதும் யதார்த்தம்.

அமெரிக்கத் தேர்தல் நடைமுறை இயல்பாகவே குழப்பங்கள் நிறைந்தது. கொரோனா சூழல் அதை இன்னும் குழப்பம் நிறைந்ததாக மாற்றிவிட்டது.

அதிக ஓட்டு வாங்குபவர்கள் ஜெயிப்பதுதான் தேர்தல் வழக்கம். ஆனால், அதிக ஓட்டு வாங்கித் தோற்பது அங்கு பலமுறை நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் 50 மாகாணங்கள். ஒவ்வொரு மாகாணத்துக்கும் மக்கள்தொகை அடிப்படையில் ‘எலெக்டோரல் காலேஜ் ஓட்டு’ உண்டு. மொத்தமாக 538 ஓட்டுகள். 270 வாங்கினால் ஜெயித்துவிடலாம். ஒவ்வொரு மாகாணத்திலும் யார் அதிக சதவிகித ஓட்டு வாங்குகிறார்களோ, அந்த வேட்பாளருக்கே அந்த மாகாணத்தின் அத்தனை எலெக்டோரல் காலேஜ் ஓட்டுகளும் கொடுக்கப்படும். கடந்த தேர்தலில் ட்ரம்ப்பைவிட 28 லட்சம் ஓட்டுகள் அதிகம் வாங்கியும் ஹிலாரி கிளின்டன் தோற்றது இதனால்தான்!

சில மாகாணங்கள் பாரம்பர்யமாக ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்கும்; சில குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்கும். சில மாகாணங்கள் மட்டும் ஒவ்வொரு தேர்தலிலும் திசைமாறும். இந்த மாகாணங்களே முடிவைத் தீர்மானிக்கும். எனவே, வேட்பாளர்கள் இங்கு கூடுதல் கவனம் செலுத்துவார்கள். பைடன் முன்னணியில் இருக்கும்போது, கடைசியாக வாக்கு எண்ணிக்கையை நடத்தும் ஜார்ஜியா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, நெவேடா போன்றவை இப்படிப்பட்ட மாகாணங்கள்தான்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்தியாபோல அமெரிக்கத் தேர்தலை, மையப்படுத்தப்பட்ட ஒரு தேர்தல் ஆணையம் நடத்துவதில்லை. மாகாண அரசுகளே தேர்தல் நடைமுறைகளை கவனிக்கும். ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் விதிமுறைகள் மாறுபடும். நவம்பர் 3-ம் தேதி தேர்தல் என்றால், அன்றுதான் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சில மாகாணங்களில் பொது இடங்களில் வாக்குப்பெட்டிகள் முன்கூட்டியே வைக்கப்படும். அதில் வாக்குச்சீட்டைச் செலுத்தலாம். இந்த முறை கொரோனா சூழலைக் கருதி, தபால் வாக்குகளும் பெரிய அளவில் அனுமதிக்கப்பட்டன. வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே அமெரிக்காவில் சுமார் 10 கோடிப் பேர் வாக்களித்துவிட்டார்கள். பென்சில்வேனியா மாகாணத்தில் நவம்பர் 3-ம் தேதி ஒருவர் தபாலில் ஓட்டுச்சீட்டை அனுப்பிவைக்கலாம். நான்கைந்து நாள்கள் கழித்து வந்து சேர்ந்தாலும், அது செல்லும் ஓட்டுதான். அதனால்தான், ‘தேர்தல் முடிவை அறிவிக்க சில நாள்கள் ஆகலாம்’ என அடம்பிடிக்கிறது அந்த மாகாணம்.

தேர்தல் நாளில் பதிவான வாக்குகளை முதலில் எண்ணிவிட்டு, அதன் பிறகு இந்தத் தபால் ஓட்டுகளை எண்ணுவார்கள். அமெரிக்க மக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி இப்படி தபால் ஓட்டுகளை அதிகம் வாக்களிக்கச் செய்தது ஜனநாயகக் கட்சி. இந்தத் தபால் ஓட்டுகளையும், முன்கூட்டியே வாக்களிக்கும் முறையையும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு முன்பே, தான் ஜெயித்துவிட்டதாக அறிவிப்பு வெளியிட்டார். தபால் ஓட்டுகள் ஜனநாயகக் கட்சிக்கே பெரிதும் சாதகமாக இருந்ததால், பல மாகாணங்களில் முடிவுகள் மாறின. ஜோ பைடன் முன்னணிக்கு வந்தார். ட்ரம்ப் கொந்தளித்து, ‘இது அமெரிக்க மக்கள்மீது எதிர்க்கட்சிகள் நிகழ்த்தும் மோசடி. இந்த வாக்குகளை எண்ணுவதை நிறுத்தாவிட்டால், நான் உச்ச நீதிமன்றம் போவேன்’ என எச்சரித்தார். ஆனால், ‘ஒவ்வொரு வாக்கும் எண்ணப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடியும்போது நான் ஜெயித்திருப்பேன். நம் ஜனநாயகத்தை யாரும் பறித்துவிட முடியாது. யார் ஜெயித்தது என்பதை ட்ரம்ப்போ, நானோ அறிவிக்க முடியாது. அதை அமெரிக்க மக்கள் தீர்மானிக்க வேண்டும்’ என்றார் பைடன்.

வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும் இடங்களில், ‘மறுபடியும் எண்ண வேண்டும்’ என்று தோற்றவர் கோரிக்கை வைக்க முடியும். கோர்ட்டுக்கும் போக முடியும். ட்ரம்ப் இரண்டுக்குமே தயாராக இருக்கிறார். தேர்தல் பரபரப்புகளுக்கு நடுவிலும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக அமி கோனி பேரட் என்பவரை சமீபத்தில் நியமித்திருந்தார் ட்ரம்ப். அந்த நீதிமன்றத்தை ட்ரம்ப் மலைபோல நம்புகிறார். ஜோ பைடனும் வழக்கைச் சந்திக்க ரெடியாகி வருகிறார். வாக்கு எண்ணிக்கை மையங்களை ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள். வாக்கு எண்ணிக்கை நடந்த முதல் 24 மணி நேரத்துக்குள் ட்ரம்ப்பின் ஆறு ட்வீட்களை ‘தவறான தகவல்’ என மறைத்திருக்கிறது ட்விட்டர் நிறுவனம்.

அதிபர் சஸ்பென்ஸில் அமெரிக்கத் தேர்தல்!

இந்தத் தேர்தல் நேரத்தில் அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குத் துப்பாக்கி வியாபாரம் அதிகரித்திருக்கிறது. பெருநகர வணிக வளாகங்கள் பலவற்றின் கண்ணாடிச் சுவர்கள்மீது தற்காலிகப் பலகைத் தடுப்புகள் பொருத்தியிருக்கிறார்கள். அதிபரின் வெள்ளை மாளிகையிலேயே புது தடுப்புச் சுவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தங்கள் பாதுகாப்பு குறித்த அச்சம் சராசரி அமெரிக்கர்கள் மனதில் எழுவதற்கு இந்தத் தேர்தல் பிரசாரம் காரணமாகியிருக்கிறது. எரிகிற தீயில் ட்ரம்ப் எண்ணெய் வார்த்துக்கொண்டிருக்கிறார்.

கடந்த 2000-மாவது ஆண்டு அதிபர் தேர்தல் முடிவு பெரும் இழுபறியானது. நூலிழை வித்தியாசத்தில் முடிவுகள் வர, வழக்கு, மறுவாக்கு எண்ணிக்கை என ஒரு மாத காலம் பரபரப்பு நிலவியது. 271 வாக்குகள் பெற்று ஜார்ஜ் புஷ் ஜெயித்ததாகவும், அல் கோர் தோற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அமெரிக்கத் தேர்தல் முறைமீதும், நீதிமன்றங்கள்மீதும் ஏராளமான மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகப் பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. 35 சதவிகிதத்துக்கும் மேலான அமெரிக்கர்கள் வாக்களிப்பதில்லை.

இந்த நம்பிக்கையின்மை ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism