Published:Updated:

ட்ரம்ப்: நீங்கள் ஒன்றும் புத்திசாலி கிடையாது - ஜோ பைடன்: நீங்கள் ஒரு கோமாளி!

ட்ரம்ப்
பிரீமியம் ஸ்டோரி
News
ட்ரம்ப்

நாங்கள் தேர்தலில் வென்றிருக்கிறோம். உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தைப் பொறுத்தவரை செனட் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது

நவம்பர் 3, அமெரிக்க அதிபர் தேர்தல். அங்கே அதிபர் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடி விவாதம் நடைபெறுவது வழக்கம். தற்போதைய அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப் - முன்னாள் துணை அதிபரும், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான ஜோ பைடன் இடையிலான முதல் விவாதம் ஓஹியோவின் கிளைவ்லேண்டில் நடைபெற்றது. ‘ஃபாக்ஸ் நியூஸி’ன் கிரிஸ் வாலஸ் நெறிப்படுத்தினார்.

`கொரோனா சூழல், இனவெறிப் பிரச்னை, உச்ச நீதிமன்ற நீதிபதி நியமன விவகாரம், பொருளாதாரம், தேர்தலின் நம்பகத்தன்மை, இருவரின் சாதனைகள் ஆகிய ஆறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்’ என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. விவாதத்தில் ட்ரம்ப் 39:06 நிமிடங்களும், ஜோ பைடன் 37:56 நிமிடங்களும் பேசினார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ட்ரம்ப்: நாங்கள் தேர்தலில் வென்றிருக்கிறோம். உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தைப் பொறுத்தவரை செனட் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது... மக்கள் எங்களுக்குப் பெரும்பான்மை அளித்திருக்கிறார்கள்.

ஜோ பைடன்: அதிபர் தேர்தல் முடிந்து யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ட்ரம்ப்: தபால் வாக்குகளில் முறைகேடு நடக்க வாய்ப்பிருக்கிறது... தேர்தல் முடிவுகளைப் பல மாதங்கள் நாம் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போகலாம்.

ஜோ பைடன்: வாக்கு எண்ணிக்கை குறித்த பயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. நான் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் ஏற்றுக்கொள்வேன். உங்களுக்கு வசதியானது எதுவோ, அந்தமுறையில் வாக்களியுங்கள்.

ட்ரம்ப்: சுத்தமான தண்ணீர், காற்று ஆகியவையே எனது லட்சியம். அழகான, சுத்தமான காற்றே எனக்கு வேண்டும். காட்டுத் தீ விவகாரத்தைப் பொறுத்தவரை நமக்குச் சிறப்பான வன நிர்வாகம் வேண்டும்.

ஜோ பைடன்: வெள்ளம், புயல், கடல்நீர் மட்டம் உயருதல் எனப் பல்வேறு பிரச்னைகளில் நாம் சிக்கித் தவிக்கிறோம். பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் மீண்டும் இணைய வேண்டும்.

ட்ரம்ப்: ஆப்பிரிக்க அமெரிக்கர்களை, இந்த நாட்டிலிருக்கும் எவரையும்விட மிக மோசமாக நடத்தியிருக்கிறார் ஜோ பைடன். இது வலதுசாரிகளால் ஏற்பட்ட பிரச்னை கிடையாது. இடதுசாரிகளால் ஏற்பட்ட பிரச்னை.

ஜோ பைடன்: இவர் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மீட்பரா? இந்த விவகாரத்தில் இவர் எதுவுமே செய்யவில்லை. அமைதியான போராட்டங்களை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், வன்முறையை அல்ல.

ட்ரம்ப்: கொரொனாவால் சீனா, ரஷ்யா, இந்தியாவில் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என்று தெரியாது. அவர்கள் உண்மையான எண்ணிக்கையை அளிப்பதில்லை. ஜோ பைடன் அதிபராக இருந்திருந்தால், 20 கோடிப் பேர் கொரோனாவால் இறந்திருப்பார்கள்.

ஜோ பைடன்: கொரோனா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் முட்டாள்தனமாக நடந்துகொண்டார். `ஈஸ்டருக்குப் பிறகு கொரோனா இருக்காது’ என்று சொன்னவர்தான் இவர். மற்ற நாடுகளைவிட மோசமான நிலையில் அமெரிக்கா இருக்கிறது.

ட்ரம்ப்: பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறேன். நீங்கள் 47 ஆண்டுகளில் செய்யாததை நான் 47 மாதங்களில் செய்து முடித்திருக்கிறேன்.

ஜோ பைடன்: அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபர் நீங்கள்தான். உங்கள் ஆட்சியில் அமெரிக்கா வலிமை குறைந்து, பலவீனமாக, ஏழையாகி நிற்கிறது. சுகாதாரப் பராமரிப்பில் உங்களிடம் எந்தத் திட்டமும் இல்லை. என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதுகூட உங்களுக்குத் தெரியாது.

ட்ரம்ப் - ஜோ பைடன்
ட்ரம்ப் - ஜோ பைடன்

விவாதத்தில் ட்ரம்ப் இந்தியாவை இரண்டு முறை குறிப்பிட்டுப் பேசினார். இரண்டு முறையுமே பாராட்டும் நோக்கில் அல்ல. `கொரோனா இறப்பு எண்ணிக்கை விவகாரத்தில் சரியான தகவலை வெளியிடுவதில்லை’ என சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இந்தியாவையும் குறிப்பிட்டார். அதேபோல், பருவநிலை மாறுபாடு விவகாரத்தில் காற்று மாசுபாட்டுக்கு சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளே காரணம் எனவும் தனது பேச்சில் ட்ரம்ப் குறிப்பிட்டார். ஜோ பைடன், தனது பேச்சில் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

முதல் விவாதம் முடிவடைந்திருக்கும் நிலையில், அடுத்தடுத்த விவாதங்கள் அக்டோபர் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் சார்பில் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் மைக் ஃபென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் இடையிலான நேரடி விவாதம் அக்டோபர் 7-ம் தேதி நடைபெறுகிறது.