Published:Updated:

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு... இந்தியாவின் ஆதரவு யாருக்கு?

மகிந்தா ராஜபக்‌சே  - கோத்தபய ராஜபக்‌சே
மகிந்தா ராஜபக்‌சே - கோத்தபய ராஜபக்‌சே

தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருந்த ராஜபக்‌சே சகோதரர்களுக்கு ஜாக்பாட் போல கொரோனா வேறு மாட்டிக்கொண்டது. மிகுந்த உற்சாகத்தோடு தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டனர் அவர்கள். இது ஒருபுறமிருக்க, தமிழ்க் கட்சிகள் மூன்று அணிகளாகப் பிரிந்து நிற்கின்றன.

இலங்கையில் கொரோனா காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட அந்த நாட்டின் 9-வது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடைபெறும் என, அந்த நாட்டின் தேர்தல் ஆணைய தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். புதிய சுகாதார விதிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தை, அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்‌சே, கடந்த மார்ச் இரண்டாம் தேதி கலைக்க உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஆறு மாதம் மீதமிருந்த நிலையிலும், நான்கரை ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டால் நாடாளுமன்றத்தைக் கலைத்துக்கொள்ளலாம் என அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைச் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 25-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது தேர்தல் ஆணையம்.

மார்ச் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வேட்புமனுத் தாக்கலும் நடைபெற்றன. அந்த நேரத்தில்தான், சீனாவை அச்சுறுத்திக்கொண்டிருந்த கொரோனா வைரஸ், உலகெங்கும் பரவத் தொடங்கி இலங்கைக்குள்ளும் நுழைந்தது. உடனடியாக தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது கொரோனா ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்துவிட, தேர்தலை நடத்தத் திட்டமிட்டு தேதியையும் அறிவித்துவிட்டது, இலங்கைத் தேர்தல் ஆணையம்.

ரணில் விக்ரமசிங்கே -  சஜித் பிரேமதாசா
ரணில் விக்ரமசிங்கே - சஜித் பிரேமதாசா

சுமார், 2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், ஒட்டு மொத்தமாகவே, 1,869 பேருக்குத்தான் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதில், 1,122 பேர் தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்துவிட்டனர். 11 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

கொரோனா ஒழிப்பில் ராணுவம் முழுமையாகக் களமிறக்கப்பட்டு இது சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் மீதிருந்த பல்வேறு களங்கங்களைத் துடைத்தெறிந்து புனித பிம்பத்தைக் கொடுத்துள்ளன கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள். அந்த வெற்றியோடு தேர்தலைச் சந்தித்தால், கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடலாம் எனக் கணக்குப் போடுகின்றனர் ராஜபக்‌சே சகோதரர்கள்.

மறுபுறம் பிரதான எதிர்க்கட்சியான, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுற்றிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த, சஜித் பிரேமதேசா, ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் தனி அணியாகி, சிறுபான்மை முஸ்லிம் மற்றும் தமிழ்க் கட்சிகளை இணைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கினார். அப்போதே தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருந்த ராஜபக்‌சே சகோதரர்களுக்கு ஜாக்பாட் போல கொரோனா வேறு மாட்டிவிட்டது. மிகுந்த உற்சாகத்தோடு தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டனர். இதுஒருபுறமிருக்க, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எனத் தமிழ்க் கட்சிகளும் மூன்று அணிகளாகப் பிரிந்து நிற்கின்றன.

கொரோனா பீதியில் உலகமே மிரண்டு போயிருக்க, இலங்கையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்துச் சிலரிடம் பேசினோம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகித்து வருபவருமான, சிவாஜிலிங்கம் பேசும்போது,

``இலங்கை கொரோனாவைக் கடந்துவிட்டது என்றே சொல்லலாம். அந்தளவுக்குப் பாதிப்பு என்பது மிகக்குறைவு. ஊரடங்கு மிகவும் கட்டுப்பாடாகப் பின்பற்றப்பட்டது. தற்போது இரவிலும், விடுமுறை நாள்கள் மற்றும் விழாக்காலங்களில் மட்டுமே முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் போல் கூட்டம் கூட்டமாக மக்கள் சாலையில் செல்லவில்லை. கொரோனாவை ஒழிக்கும் பணி ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வெளியில் வந்தால் சுட்டுவிடுவார்கள் என்கிற அளவுக்கு மக்கள் மத்தியில் அச்சம் இருந்தது. தவிர, இலங்கை மக்கள் யுத்தச் சூழல் காரணமாக ஊரடங்குக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட ஆள்கள். அதனால் பெரிய அளவில் தொற்று பரவாமல், தற்போது கட்டுக்குள் வந்துவிட்டது. அதன் காரணமாகவே தேர்தலை நடத்தலாம் எனத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதேநேரம், சமூக இடைவெளி, 100 பேருக்கு மட்டுமே மீட்டிங் அனுமதி போன்ற கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரத்திலிருந்து பிரசாரம் தொடங்கலாம் எனத் திட்டமிருக்கிறோம். சிலர் இப்போதே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர்.

சிவாஜிலிங்கம்
சிவாஜிலிங்கம்

அரசின் சார்பில் மாதிரி வாக்களிப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. வாக்களிக்கும் நேரத்தையும் ஒரு மணி நேரம் அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனாலும், இந்த முறை வாக்கு சதவிகிதம் குறையும். அது ராஜபக்‌சே சகோதரர்களுக்கே சாதகமாக அமையும். காரணம், ஆளும் கட்சிக்கு எதிராக தீவிரமான பிரசாரத்தை முன்னெடுக்க வாய்ப்புகளும் கால அவகாசமும் குறைவு.

ஊரடங்கு போன்ற விஷயங்கள் தளர்ந்தாலும் மக்களிடம் கொரோனா பீதி இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இது போன்ற நேரத்தில், மக்களைச் சந்தித்து வாக்குகள் கேட்பதில் சின்ன நெருடல் இருக்கத்தான் செய்கிறது. தமிழ்க் கட்சிகளும் மூன்று அணிகளாகப் பிரிந்து நிற்கிறோம். என்றாலும், இந்தியாவில் உள்ளது போல், தேர்தலில், வாக்குகள் அடிப்படையில் அதிக வாக்குகள் வாங்கியவர் வெற்றி, குறைந்த வாக்குகள் வாங்கியவர் தோல்வி போன்ற முறை இங்கு கிடையாது. வாக்குகளின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கும் விகிதாசாரப் பிரதிநித்துவம்தான் நடைமுறையாக இருக்கிறது. அதனால் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் எந்தப் பிரச்னையும் இருக்காது. தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் இடங்களில் யாருக்கும் இடங்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்பிருக்கிறது. அதனால் எங்கள் கூட்டணி அது போன்ற இடங்களில் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்கிற முடிவை எடுத்திருக்கிறோம்'' என்கிறார் சிவாஜிலிங்கம்.

இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர் நிலாந்தனிடம் பேசினோம்,

``இலங்கை ஒரு தீவு என்கிற படியாலும் நாட்டை முழுமையாக ராணுவமயப்படுத்தியதாலும் கொரோனா ஒழிப்பில் வெற்றியடைந்துள்ளனர் ராஜபக்‌சே சகோதரர்கள். கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்ட குழுவின் பெயரே, `கோவிட் கிளர்ச்சிக்கெதிரான குழு' என்பதுதான். ராணுவத் தளபதிதான் அந்தக் குழுவின் தலைவராக இருந்தார். சுகாதாரத்துறைச் செயலாளராகவும், பல மாகாணங்களில் ஆளுநர்களாகவும் கூட ராணுவ அதிகாரிகளே நியமிக்கப்பட்டனர். யுத்தக் காலத்தில் கூட இப்படி சிவில் கட்டமைப்புகள் ராணுவத்தின் வசம் ஒப்படைக்கவில்லை. அந்தளவுக்கு பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கியமான மூன்று துறைகள் ராணுவத்தின் வசமே இருந்தன. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவுற்று இருப்பது நல்லதல்ல. ஒரு ஜனநாயகவாதியின் ஆட்சியில் அப்படி இருந்தால்கூட பரவாயில்லை. ராஜபக்‌சேக்களைப் போன்ற சர்வாதிகளின் ஆட்சியில் இப்படி இருந்தால் நாடு இன்னும் சர்வாதிகாரத்தன்மைக்கு மாறிவிடும். கேள்வி கேட்க ஆளில்லாமல், முழுமையாக ராணுவ மயமாகிவிடும் .

நிலாந்தன்
நிலாந்தன்

அதேநேரம், இந்தத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெற்றுவிட வேண்டும் என்கிற மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார்கள் ராஜபக்‌சே சகோதரர்கள். அதற்குக் காரணம், ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் இலங்கை அரசியலமைப்பின் 18-வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஜனாதிபதிக்கு அளவு கடந்த அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மைத்திரிபால சிரிசேனா அதிபர் ஆனபிறகு, ராஜபக்‌சே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் திருத்தப்பட்டு இலங்கை அரசியலமைப்பின் 19-வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

ஈழத் தமிழர் இனப்படுகொலை... தமிழகம் மற்றும் இலங்கை தேர்தல் அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னென்ன?

அதன்படி, ஜனாதிபதிக்கு இருந்த அளவு கடந்த அதிகாரம் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்திடம் அது வழங்கப்பட்டது. மேலும், ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராகப் பதவி வகிக்கக் கூடாது; இரட்டைக் குடியுரிமை உடையோர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது; 31 வயதுக்கு மேற்பட்டவர்தான் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என முறையே, மகிந்தா ராஜபக்‌சே, கோத்தபயா ராஜபக்‌சே (அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக, அமெரிக்கக் குடியுரிமை வைத்திருந்து பின்னர் தேர்தல் போட்டியிடுவதற்காக அதைக் கைவிட்டவர்), ராஜபக்‌சேவின் மகன் நமல் ராஜபக்‌சே ஆகியோருக்கு செக் வைக்கப்பட்டது. ராஜபக்‌சேவின் அதிகாரத்தைக் குறைக்க மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்லாது இந்தியாவுக்கும் பங்கு உண்டு. மீண்டும் ஆட்சிக்கு வந்து அந்தச் சட்டத் திருத்தத்தில் மாற்றம் மேற்கொள்ள ராஜபக்‌சே சகோதரர்கள் ஆவலாக உள்ளனர்.

தமிழக சட்டமன்றம்
தமிழக சட்டமன்றம்

இந்தத் தேர்தல் ராஜபக்‌சே சகோதரர்களுக்கே சாதகமாக இருக்கும். இந்தத் தேர்தலில் இந்தியாவின் ஆதரவும் முழுமையாக ராஜபக்‌சே சகோதரர்களுக்கே இருக்கிறது. இந்தியத் தூதரக அதிகாரிகள் ராஜபக்‌சே சகோதரர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். அதேநேரம் தமிழ்க் கட்சிகள் மூன்று அணிகளாகப் பிரிந்து தேர்தலைச் சந்திப்பதால். விகிதாரப் பிரதிநிதித்துவம் குறையும். போனஸ் சீட்கள் கிடைக்காது.

இந்த நேரத்தில், தமிழகத்தில் இருக்கும் ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள் ஒதுங்கிக்கொள்ளக் கூடாது. வடமாகாணத் தமிழ் வாக்குகள் சிதறாதபடிக்கு, ஐக்கியப் பட்டு தேர்தலில் நிற்க, ஈழத்தில் உள்ள தமிழ்க் கட்சிகளுக்குக் கோரிக்கை வைக்கவேண்டும். அதேபோல, இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் கட்சிகளுக்கே வாக்களிம்படியும், ஈழத் தமிழ் மக்களிடம் கேட்டுக் கொள்ளலாம். இலங்கைப் பாராளுமன்றத்தை விட, பலம் வாய்ந்த, தமிழகச் சட்டமன்றத்தில் இனப்படுகொலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற, காரணமான தமிழகக் கட்சிகளுக்கு இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கான அத்தனை உரிமை இருக்கிறது'' என்கிறார் அவர்.

இலங்கையின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் குடும்பத்துக்குள் கொண்டு வரும் ஆட்டத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள் ராஜபக்‌சே சகோதரர்கள்...என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு