Published:Updated:

`பாகிஸ்தானுடன் மட்டுமே பேச்சுவார்த்தை!' - ட்ரம்ப் கருத்துக்கு இந்தியா பதில்

சத்யா கோபாலன்

காஷ்மீர் தொடர்பான பேச்சுவார்த்தை பாகிஸ்தானுடன் மட்டுமே நடக்கும் என ட்ரம்ப்பின் கருத்துக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையில் மூன்றாம் நபரின் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதைத்தான் இந்தியா பல வருடங்களாகக் கூறிவருகிறது. இப்படியிருக்கச் சமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "நானும் இந்தியப் பிரதமர் மோடியை இரண்டு வாரங்களுக்கு முன்பு சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் இந்தியா- பாகிஸ்தான் பிரச்னையில் நீங்கள் மீடியேட்டராக இருந்து தீர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்” எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

மோடி - இம்ரான்கான்
மோடி - இம்ரான்கான்

அமெரிக்க அதிபரின் இந்தக் கருத்தை இந்தியா முற்றிலுமாக மறுத்தது. இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், "இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை தொடர்பாகப் பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை. இரு நாடு எல்லையில் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதைப் பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என விளக்கம் அளித்தார். ட்ரம்ப்பின் கருத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் நிராகரித்திருந்தார்.

ஆனால், அமெரிக்க அதிபரிடம் கேட்டதாகக் கூறப்படும் பிரதமர் மோடி மட்டும் இந்த விவகாரம் தொடர்பாக இன்னும் வாய் திறக்கவில்லை. இந்த நிலையில், இதே கருத்தை தற்போது மீண்டும் தெரிவித்துள்ளார் ட்ரம்ப். "காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அவர்கள் கேட்டால் அதில் தலையிடத் தயாராக உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப் தெரிவித்துள்ள `அவர்கள்’ என்ற வார்த்தைக்கு இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளா அல்லது இந்தியா மட்டுமா என்பது தெரியவில்லை.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இதற்கிடையில் தாய்லாந்தில் நடைபெற்று வரும் 9-வது கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பாம்பியோவைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்குப் பிறகு ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், "காஷ்மீர் பிரச்னை தொடர்பாக நடைபெறும் எந்த ஒரு கலந்துரையாடலும், விவாதமும் பாகிஸ்தானுடன் மட்டுமே இருக்கும் என அமெரிக்க வெளியுறவுச் செயலருக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.