ஆஸ்திரேலியாவில் அதானிக்குச் சொந்தமான கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை (Carmichael coal mine) எதிர்த்து அந்நாட்டின் பூர்வகுடி மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் இந்த மோசமான திட்டத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். ஏற்கெனவே, 2010-ம் ஆண்டு ஒப்பந்தமிடப்பட்ட இந்தத் திட்டம், 2014-ம் ஆண்டே செயல்பட்டிருக்கவேண்டும் ஆனால் பழங்குடி மக்களின் போராட்டத்தால் நீண்டகாலம் தடைபட்டது. அதோடு சேர்த்து கார்மைக்கேல் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு முதலீடு செய்ய முன்வந்த பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களும் பின்வாங்கிக்கொண்டன. இந்நிலையில், அடுத்த அடியாக அதானி திட்டத்துக்கு எதிராகப் போராடும் பழங்குடி மக்களை நிலக்கரி சுரங்கப்பகுதியிலிருந்து வெளியேற்ற மாட்டோம் என ஆஸ்திரேலிய காவல்துறை அதிரடியாக அறிவித்திருக்கிறது.

என்ன நடந்தது... நடக்கிறது... ஆஸ்திரேலியாவில்..!
அதானி திட்டத்தின் பின்னணி:
2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்திலுள்ள கலீலி (Galilee) ஆற்றுப்படுகையில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணிக்கான ஒப்பந்தத்தில் இந்தியாவின் அதானி குழுமம் கையெழுத்திட்டது. இந்தத் திட்டம், ``ஆண்டுக்கு 10 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தித் திட்டம் என்றும், இதனால் 10,000 ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும்" எனத் திட்டம் குறித்துப் பேசினார் கௌதம் அதானி.

குயின்ஸ்லாந்தில் பாயும் நதியான `கார்மைக்கேல்' பெயரே அந்தத் திட்டத்துக்குச் சூட்டப்பட்டது. முதல்கட்டமாக 6 திறந்தவெளி, 5 நிலத்தடி சுரங்கங்கள் தோண்டப்பட்டு ஆண்டுக்கு 1 கோடி டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படும். அந்த நிலக்கரியை வெளிநாடுகளுக்கு (குறிப்பாக இந்தியாவுக்கு) ஏற்றுமதி செய்ய வசதியாக 200 கிலோ மீட்டருக்கு ரயில்பாதை அமைக்கப்படும். அந்த ரயில்பாதை குயின்ஸ்லாந்து கடற்கரையில் இருக்கும் அபாட் துறைமுகத்துடன் (Abbot port) இணைக்கப்படும். துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) கடற்பகுதி வழியாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு நிலக்கரி வர்த்தகம் செய்யப்படும் என்பதுதான் இந்த திட்டத்தின் முழு வடிவமெனச் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த அபாட் துறைமுகத்தை ஏற்கெனவே கடந்த 2011-ம் ஆண்டு அதானி குழுமம் 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்திருக்கிறது. ஆஸ்திரேலிய ஆளுங்கட்சி அரசாங்கம், குயின்ஸ்லாந்து மாகாண அரசாங்கம் என அனைத்து அரசு சார் துறைகளிடமும் அதானி குழுமத்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் திட்டத்துக்கான ஒப்பந்தம் அதானிக்கு எளிதில் கிடைத்தது. மேலும் சுற்றுச்சூழல் அனுமதியும் சுலபமாகக் கிடைத்தது. இனி, சுரங்கம் தோண்டுவதும் ரயில்பாதை அமைப்பதும்தான் பிரதான நோக்கம் என்று கருதிய அதானி குழுமத்துக்கு முதல் அடியாக வந்து விழுந்தது, குயின்ஸ்லாந்து பழங்குடி மக்களின் போராட்டம்.

பழங்குடிகள் போராட்டத்தின் பின்னணி:
அதானி நிலக்கரி சுரங்கம் அமைக்கும் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வாழும் இருபெரும் பூர்வகுடி மக்கள்தான் வாங்கன், ஜகலிங்கோ (Wangan and Jagalingou) இனக்குழுவினர். இயற்கையையும், நீரூற்றுகளையும் புனிதமாகக் கருதும் இவர்களுக்கு குயின்ஸ்லாந்து பகுதி மட்டுமே ஒற்றை வாழ்விடமாக இருக்கிறது. அங்கிருக்கும் சுமார் 2,47,000 ச.கி.மீட்டர் பரப்பிலான கலிலீ ஆற்றுப்படுகைக்கு அடியில் மிகப்பெரிய நிலக்கரி கையிருப்பு உள்ளது. இவற்றை வெட்டி எடுப்பதன் மூலம் நிலத்தடிநீர் தட்டுப்பாடு, காற்றுமாசுபாடு போன்ற சூழலியல் சீர்கேடுகள் ஏற்படுவதோடு தங்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனக்கூறி அதானியின் நிலக்கரி திட்டத்தை எதிர்த்து போராடத்தொடங்கினர்.

அதற்கேற்றபடி, பல விஞ்ஞானிகள் அதானியின் சுரங்கம் செயல்பட ஆண்டுக்கு 12 பில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றும், அப்படி செயல்பட்டால் சுமார் 297 பில்லியன் லிட்டர் நிலத்தடி நீர் இருப்பு முற்றிலும் இல்லாமல் போகும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதுமட்டுமல்லாமல், தி கிரேட் பேரியர் ரீஃப் (The Great Barrier Reef) கடற்பகுதி வழியாக ராட்சத கப்பல்களில் டன் கணக்கில் நிலக்கரிகளை ஏற்றிச்சென்றால் அங்கிருக்கும் மிகப்பெரிய பவளப்பாறைத் தொகுதிக்கும் பெருமளவு சேதம் உண்டாகும் என சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் போராட்டக்களத்தில் குதித்தனர். சுமார் 2,300 கி.மீ. பரப்பளவுக்கு விரிந்திருக்கும் தி கிரேட் பேரியர் ரீஃப் கடற்பகுதி, யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி, வரலாற்று, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த தங்களின் தாயகத்தை பேராபத்திலிருந்து பாதுகாக்க ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடினர். #StopAdani, #AdaniGoHome என வீதியில் இறங்கி கோஷமிட்டனர். குறிப்பாக, 2018-ம் ஆண்டு 15,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளைப் புறக்கணித்து போராட்ட களம் கண்டனர். கிட்டதட்ட 10 ஆண்டுகள் நெருங்கிய, மக்கள் போராட்டத்தையும் மீறி, 2019-ம் ஆண்டு அதானியின் நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதி கொடுத்தது ஆஸ்திரேலிய அரசாங்கம்.
அதானிக்கு அடிமேல் அடி:
போராட்டத்தால் பல ஆண்டுகள் தடைபட்ட அதானியின் நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்கு அடுத்த அடியாக வந்து விழுந்தது பொருளாதாரச் சிக்கல். ஆரம்பத்தில் அதானியின் திட்டத்துக்கு ஆஸ்திரேலியாவின் முதன்மையான வங்கிகள் நிதியுதவி வழங்க முன்வந்தன. பின்னர் மக்களின் போரட்டத்தால் அவை பின்வாங்கிக்கொண்டன. அதேபோல் வெளிநாட்டு வங்கிகளும், இந்தத் திட்டத்தில் பெரிய அளவில் பொருளாத சாத்தியக்கூறுகள் இல்லை என நிதியுதவி வழங்கும் முடிவை திரும்பப்பெற்றுக்கொண்டன. சர்வதேச வங்கிகள், ஆஸ்திரேலிய வங்கிகள், பல்வேறு பெரிய நிதி நிறுவனங்கள் என ஒட்டுமொத்தமாக 103 நிறுவனங்கள் அதானி திட்டத்துக்கு நிதி வழங்க மறுத்தன.

இதுபோன்ற காரணங்களால், 16 பில்லியன் டாலர் முதலீட்டில் தொடங்கத் திட்டமிடப்பட்ட அதானி நிலக்கரி சுரங்கம், 2 பில்லியனாக குறைந்தது. இந்த சூழலில்தான் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவின் எஸ்.பி.ஐ. வங்கி (State Bank of India) , அதானியின் ஆஸ்திரேலிய நிலக்கரி திட்டத்துக்கு சுமார் 1 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாகத் தகவல்கள் வெளியாகின. அடுத்த இரண்டு நாள்களுக்குள் குயின்ஸ்லாந்து மக்கள் ``எஸ்.பி.ஐ. வங்கியே அதானிக்கு நிதியுதவி வழங்காதே" (SBI - NO $ 1BN ADANI LOAN) எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவிலும் ஏற்கெனவே வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் பெற்றுக்கொண்டு தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரை குறிப்பிட்டும், கொரோனா சூழலில் கடும் பொருளாதாரத் தட்டுப்பாடு நிலவும் நிலையில் எஸ்.பி.ஐ-க்கு இது தேவையா என கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் எஸ்.பி.ஐ வங்கியும் நிதியுதவி வழங்கும் முடிவை ஒத்திவைத்தது.
தற்போதைய நிலை என்ன?
அதானி முற்றிலுமாக திட்டத்தை கைவிடாதவரை நாங்கள் எங்கள் போராட்டத்தைக் கைவிடமாட்டோம் எனக்கூறிய பழங்குடி மக்கள், 2021 ஏப்ரல், மே மாதங்களில் ``நிலத்தோடு நிற்கிறோம்" (Standing Our Ground), ``கார்மைக்கேல் நோக்கி" (Tour de carmichael) என அடுத்தடுத்த போராட்டங்களைப் பல்வேறு வழிமுறைகளில் தொடர்ந்தனர்.
ஒருபுறம் போராட்டம் தொடர்ந்தாலும், 2019-லிருந்து 2,600 பணியாளர்களுடன் நிலக்கரி தோண்டும் பணியை மெல்ல நகர்த்தி வந்தது அதானி நிறுவனம். இந்நிலையில், 2022 ஆண்டுக்குள் 60 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதனால், போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

இப்படி, கடந்த ஆறுமாதங்களாக அதானி நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்டு, சாலைகளை வழிமறித்து, குடில் அமைத்து, தங்களின் பண்பாட்டு முறையில் புனித நெருப்பு மூட்டி ஆயிரக்கணக்கானப் பழங்குடி மக்கள் (வாங்கன், ஜகலிங்கோ) மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆரம்பத்தில் போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறைகளைக் கையாண்ட ஆஸ்திரேலியக் காவல்துறை, தற்போது ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறது.
``அதானி உங்கள்மீது புகாரளித்திருக்கிறார், அதற்காக நாங்கள் உங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. அதானி வேண்டுமானால் சட்ட வழிமுறைப்படி அணுகட்டும். உங்களின் போராட்டம் மனித உரிமைகளின் கீழ் நடந்து வருகிறது. நீங்கள் மறைந்து வரும் உங்களின் வாழ்வியல் பண்பாட்டை இழக்க விரும்பவில்லை. எனவே, நாங்கள் இங்கிருந்து உங்களை வெளியேற்றமாட்டோம்! எங்களின் நோக்கமே உங்களுக்கு ஆதரவாக இருப்பதுதான்"ஆஸ்திரேலிய காவல்துறை
என ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரி பேசிய பதிவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. இது அதானி குழுமத்துக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் ஒன்றாக கருதப்படுகிறது.

ஏற்கெனவே, அதானி நிறுவனம் ஆஸ்திரேலிய அரசுடன் இணைந்து, பழங்குடி மக்களுடன் Indigenous Land Use Agreement - ILUA ஒப்பந்தத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக்கொண்டது. இதன்மூலம் அதானியின் கார்மைக்கேல் நிலக்கர சுரங்கத்திற்காக வாங்கன், ஜகலிங்கோ பழங்குடி மக்கள் வசிக்கும் சுமார் 1,385 ஹெக்டேர் நிலப்பரப்பை கையகப்படுத்த குயின்ஸ்லாந்து அரசாங்கம் திட்டமிட்டது. பழங்குடி மக்களை பூர்வீக நிலத்திலிருந்து வெளியேற்றும் வகையில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தைக் காரணம் கட்டி அதானி நிறுவனமும், இதை எதிர்த்து பழங்குடியினர் தரப்பும் Native Title Act -1993 மூலம் சட்டப்போராட்டங்கள் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.