Published:Updated:

வங்கதேசம்: இந்துக்கள் மீதான தாக்குதல்; வீடுகள் தீ வைப்பு; பின்னணி என்ன?

வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் பல்வேறு இந்துக் கோயில்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த வங்கதேசம் 1947-ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானின் ஓர் அங்கமாக மாறியது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1971-ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடக உருவானது. வங்கதேசத்தில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்களே வசித்துவருகின்றனர். குறைந்த அளவிலான இந்துக்கள் வசித்துவருகின்றனர். இங்கு வருடம்தோறும் இந்துக்களால் துர்கா பூஜை மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

சேதப்படுத்தப்பட்ட சிலைகள்
சேதப்படுத்தப்பட்ட சிலைகள்
Twitter

சில தினங்களுக்கு முன்னர், துர்கா பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது, அங்குள்ள கொமில்லா மாவட்டத்தின் ஒரு பகுதியில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது, இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன், துர்கையின் பாதத்தில் வைத்ததுபோல ஒரு வீடியோ வைரலானது. இந்த வீடியோ வைரலானதால், சந்த்ப்பூர் பகுதியில் உள்ள ஓர் இந்துக் கோயில் ஒரு கும்பலால் சூறையாடப்பட்டது. மேலும், அந்தக் கோயிலில் காவல்துறையினர் சென்று பார்த்தபோது இரண்டு பேர் உயிரிழந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தத் தகவல் காட்டுத்தீபோலப் பரவ, நாடு முழுவதும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. மேலும், அங்குள்ள ராங்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இஸ்லாமியர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து அந்தப் பகுதியில் நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்த 60-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடியது. அதோடு, அங்கிருந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்தினர்.

தீ வைப்பு சம்பவம்
தீ வைப்பு சம்பவம்
Twitter

தலைநகர் தாகாவில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின்போது, வங்கதேச இஸ்லாமிய இயக்கத் தலைவர் மோசதிக் பில்லாஹ் அல் மதனி (MOSADDEK BILLAH AL MADANI), ``கொமில்லா-வில் குர்ஆனை அவமதித்தவர்களைக் கைதுசெய்ய வேண்டும். அந்தப் புகைப்படத்தை வெளியிட்டவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்திவந்தன. ஆங்காங்கே ஏற்பட்டிருந்த கலவரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழந்திருப்பதாகவும். அதோடு, பல நூறு பேர் படுகாயம் அடைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், துணை ராணுவத்தினரின் உதவியுடன் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுவருகின்றன.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா
ANI

இந்த வன்முறைச் சம்பவம் குறித்துப் பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, ``இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம். இந்த வன்முறை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். இந்துக் கோயில்மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் புரிந்தவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் தப்ப முடியாது. குற்றவாளிகளுக்குக் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும். இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்கும் வகையில் தண்டனை அமையும். இந்த நாட்டு மக்கள் அவர்களின் மத நம்பிக்கைகளைச் சுதந்திரமாகப் பின்பற்ற அனைத்து வகையிலும் இந்த அரசு துணை நிற்கும். சாதி, மதம், இனம் போன்ற அனைத்துப் பாகுபாடுகளையும் கடந்து எல்லோருக்குமான வளர்ச்சியை இந்த அரசு வழங்கும்" என்று பேசியிருந்தார்.

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக இந்தியா கண்டனம் தெரிவித்திருக்கிறது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ``வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவம் நடைபெற்றதாகத் தகவல்கள் வந்துள்ளன. வன்முறைகளைக் கட்டுப்படுத்தி, நிலைமையைச் சரிசெய்ய வங்கதேச அரசை வலியுறுத்தியிருக்கிறோம். அங்குள்ள நமது தூதரகங்கள் அந்த நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.

அரிந்தம் பாக்சி
அரிந்தம் பாக்சி

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களின் மீது வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது இது முதன்முறை கிடையாது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதுவரை 3,600-க்கும் அதிகமான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 550-க்கும் அதிகமான வீடுகள் மற்றும் 440-க்கும் மேற்பட்ட கடைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

வங்கதேசம்: மோடியின் வருகைக்கு எதிர்ப்பு  - 13 பேர் சுட்டுக் கொலை!

இந்தச் சம்பவம் தொடர்பாக, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், ``இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று பாஜக கூறினால் மட்டும் போதாது. அதைச் செயலில் உறுதிசெய்ய வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி எதுவும் சொல்லாமல் மௌனம் காப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உறுதியாகச் செயல்பட வேண்டும்" என்று பேசினார்.

மம்தா - மோடி
மம்தா - மோடி

வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் குறித்தும். இந்துக்கள் கொல்லப்பட்டது குறித்தும் இதுவரை இந்தியப் பிரதமர் மோடி எந்த கருத்தும், கண்டனமும் தெரிவிக்கவில்லை என்று பல்வேறு தரப்பினர்களும் குற்றம்சாட்டிவருகின்றனர். அதேவேளையில் மேற்கு வங்கத்தின் அருகிலுள்ள நாடுதான் வங்கதேசம், அப்படியான நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார் என்ற விவாதமும் மற்றொரு தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு