Published:Updated:

ஆர்மேனியா Vs அஜர்பைஜான்: 35 ஆண்டுக்கால மோதல்... மீண்டும் போர்ப் பதற்றம் - என்ன பிரச்னை?!

ஆர்மேனியா - அஜர்பைஜான்

ஆர்மேனியா, அஜர்பைஜான் நாடுகள் மோதிக்கொள்வது ஏன்... என்ன பிரச்னை?!

ஆர்மேனியா Vs அஜர்பைஜான்: 35 ஆண்டுக்கால மோதல்... மீண்டும் போர்ப் பதற்றம் - என்ன பிரச்னை?!

ஆர்மேனியா, அஜர்பைஜான் நாடுகள் மோதிக்கொள்வது ஏன்... என்ன பிரச்னை?!

Published:Updated:
ஆர்மேனியா - அஜர்பைஜான்

சோவியத் யூனியன் உடைந்தபோது தனிக் குடியரசு நாடுகளான ஆர்மேனியாவும், அஜர்பைஜானும் தற்போது தீவிரமாக மோதிக்கொண்டிருக்கின்றன. இந்த மோதலில் 170-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இரு நாடுகளும் மோதிக்கொள்வது ஏன்... என்ன பிரச்னை? - விரிவாகப் பார்ப்போம்!

ஆர்மேனியா - அஜர்பைஜான் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இரு நாட்டு வீரர்களிடையே கடந்த வாரம் இறுதியில் மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து இரு நாட்டு வீரர்களும் ஆயுதங்களைப் பயன்படுத்தி மாறி மாறித் தாக்கிக்கொண்டதால், அங்கு போர்ப் பதற்றம் ஏற்பட்டது. செப்டம்பர் 14-ம் தேதி அன்று பீரங்கிகள், துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இரு நாட்டு ராணுவமும் தீவிரத் தாக்குதல்களில் ஈடுபட்டன. `நாங்கள் முதலில் தாக்குதல் நடத்தவில்லை. தற்காத்துக்கொள்ளவே ஆயுதங்களைக் கையிலெடுத்தோம்' என இரு நாடுகளும் தெரிவித்திருக்கின்றன.

அஜர்பைஜான் போர்
அஜர்பைஜான் போர்

இரு நாடுகளுக்குமிடையே சமரசம் உண்டாக்க ரஷ்யா முயன்றுவருகிறது. ஆனால், அந்த முயற்சிகளுக்கு எந்தவிதப் பலனும் இதுவரை கிடைக்கவில்லை. இரு நாடுகளும் தாக்குதல்களை நாளுக்கு நாள் தீவிரப்படுத்திவருகின்றன. வீரர்களைத் தாண்டி எல்லையில் வசிக்கும் பொதுமக்கள் சிலரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஏற்கெனவே, ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்துவரும் நிலையில், அஜர்பைஜான் - ஆர்மீனியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்ன பிரச்னை?

சோவியத் யூனியன் நாடுகளாக இருந்தபோதே அஜர்பைஜானும், ஆர்மேனியாவும் மோதிக்கொண்டுதான் இருந்தன. 4,400 சதுர கி.மீ பரப்பளவுகொண்ட நார்கோனா - காராபாக் மலைப் பகுதிதான் இரு நாடுகளுக்குமான எல்லைப் பகுதி. இந்த மலைப் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதுதான் மோதலுக்கு முக்கியக் காரணம். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அஜர்பைஜானும், கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் ஆர்மேனியாவும் மதத்தை வைத்துக்கூடச் சிறு சிறு சண்டைகள் போட்டிருக்கின்றன. ஆனால், எல்லைப் பிரச்னைதான் இரு நாடுகளுக்குமிடையேயான பிரதான பிரச்னை.

அஜர்பைஜான் - ஆர்மீனியா
அஜர்பைஜான் - ஆர்மீனியா

ஆர்மேனியா, அஜர்பைஜான் நாடுகளைப் பிரிக்கும் நாகோர்னா - காராபாக் பிராந்தியம், 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சர்ச்சை மிகுந்த பகுதியாக இருக்கிறது. 1988-ம் ஆண்டு, இந்த எல்லைப் பகுதிக்கான மோதலில் பெரும் போர் வெடித்தது. ஆறு ஆண்டுகள் நடந்த இந்தப் போரில், சுமார் 30,000 பேர் உயிரிழந்தனர். பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்தனர். 1994-ம் ஆண்டு, இந்தப் போர் முடிவுக்கு வந்தபோது, சர்ச்சைக்குரிய நாகோர்னா - காராபாக் பகுதி அஜர்பைஜான் நாட்டின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பகுதியில் ஆர்மேனியா அரசின் ஆதரவைப் பெற்றிருக்கும் ஆர்மேனிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் வாழ்கின்றனர். இந்தப் பகுதியின் முழுக் கட்டுப்பாடும் அவர்கள் கைகளில்தான் இருந்தன.

இந்த நிலையில், 2016-ம் ஆண்டு முதல் மீண்டும் இரு நாடுகளுக்குமிடையே எல்லை விவகாரம் தொடர்பாக மோதல்கள் உண்டாகின. இந்த மோதல் 2020-ம் ஆண்டில் போராக மாறியது. ஆறு வாரங்கள் நடந்த இந்தப் போரை ரஷ்யா தலையிட்டு முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்தப் போரில் சுமார் 6,000 பேர் உயிரிழந்தனர். போரின் இறுதியில் ஆர்மேனியா இனக்குழுவின் கட்டுப்பாட்டிலிருந்த நாகோர்னா - காராபாக் பகுதியைக் கைப்பற்றியது அஜர்பைஜான். அப்போதிலிருந்தே இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் அதிகரித்தே காணப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் இரு நாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.

ரஷ்யா யாருக்கு ஆதரவு?

எண்ணெய் வளம்மிக்க அஜர்பைஜானுடன் துருக்கி நெருக்கமான உறவைக்கொண்டிருக்கிறது. ஆர்மேனியாவில் ரஷ்யாவின் ராணுவம் தளம் ஒன்று இருக்கிறது. அதனால், அந்த நாட்டுடன் ரஷ்யா நல்லுறவைப் பேணிவருகிறது. இருந்தாலும், அஜர்பைஜானுடனும் ரஷ்யா நல்லுறவிலிருக்கிறது. எனவே, இந்த முறையும் ரஷ்யா தலையிட்டுத்தான் இரு நாடுகளுக்கிடையேயான மோதலையும் நிறுத்திவைக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

ரஷ்யா - புதின்
ரஷ்யா - புதின்

``ரஷ்யா - உக்ரைன் போர், ஐரோப்பா தாண்டி உலகம் முழுக்கவே பொருளாதாரீதியாக பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், அஜர்பைஜான் - ஆர்மேனியா நாடுகளிடையே போர் மூண்டால், அது மேலும் பல சிக்கல்களை உண்டாக்கும். எனவே, ஐ.நா-வும், உலக நாடுகளும் தலையிட்டு இந்த மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்'' என்பதே சர்வதேச அரசியல் வல்லுநர்களின் பார்வையாக இருக்கிறது.