Published:Updated:

கனடா: இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே தேர்தல்... ஏன்? - மீண்டும் ஆட்சியமைப்பாரா ஜஸ்டின் ட்ரூடோ?!

தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ஜஸ்டின் ட்ரூடோ தரப்பு நான்காம் அலையைக் காரணம் காட்டினாலும், உண்மையான காரணம் அதுவல்ல என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்! - என்ன காரணம்..?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எப்போதும் அமெரிக்க அதிபர்களாக இருப்பவர்கள்தான் இந்திய மக்களால் அதிகம் அறியப்படும் சர்வதேசத் தலைவர்களாக இருப்பார்கள். ஆனால், சமீபகாலமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், `இந்தியாவில் பிரபலமான அரசியல் தலைவர்கள்' என்கிற பட்டியலில் இணைந்திருக்கிறார். இந்தியர்களுக்கு மதிப்பளிப்பது, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது எனப் பல்வேறு விஷயங்களால் இந்தியா முழுக்க பிரபலமடைந்தார் ட்ரூடோ. ​அதிலும் குறிப்பாக, தமிழக மக்களிடையே அதிகம் அறியப்பட்டவராக இருக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றவைதான் இதற்குக் காரணம்!

கடந்த 2018-ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் தனது மனைவி, மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்திருந்தார் ஜஸ்டின் ட்ரூடோ. அந்தச் சமயத்தில் ட்ரூடோவின் இளைய மகன் ஹட்ரியன் (Hadrien) செய்த சேட்டைகள் அனைத்தும் இணையதளங்களில் செம வைரலானது குறிப்பிடத்தக்கது!

கனடா தேர்தல்!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கனடாவில் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் நடைபெறும். ஆனால், இந்த முறை இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே, அதாவது 2023-ல் நடைபெற வேண்டிய தேர்தலை, 2021-ம் ஆண்டே நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். வரும் செப்டம்பர் 20-ம் தேதி கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

முன்கூட்டியே தேர்தல்... ஏன்?

உலகம் முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று, கனடாவையும் விட்டுவைக்கவில்லை. இருந்தும், திறம்படச் செயல்பட்டு கொரோனா பரவலை தற்போதுவரை கட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறது கனடா அரசு. `கொரோனா மூன்றாம் அலை தொடக்க நிலையிலிருக்கும் கனடாவில், 2023-ம் ஆண்டு நான்காவது அலையின் தாக்கம் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் தேர்தலை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்' என்கிறது ஜஸ்டின் ட்ரூடோ தரப்பு.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
`கனடா வரலாற்றின் இருண்ட பக்கங்கள்’.. பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள்! - அதிர்ச்சி

உண்மையான காரணம் என்ன?

ஜஸ்டின் ட்ரூடோ தரப்பு நான்காம் அலையைக் காரணம் காட்டினாலும், உண்மையான காரணம் அதுவல்ல என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். ``2015-ம் ஆண்டில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தார் ஜஸ்டின் ட்ரூடோ. ஆனால், 2019 தேர்தலில் லிபரல் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் சிறு சிறு கட்சிகளைக் கூட்டணியில் இணைத்துக்கொண்டு ஆட்சி அமைத்தார் ட்ரூடோ. எனவே, கனடா அரசு சார்ந்த ஒவ்வொரு விஷயத்திலும் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து முடிவெடுக்கவேண்டிய சூழலே நிலவிவந்தது. இதை ட்ரூடோ விரும்பவில்லை. அதன் காரணமாகத்தான் தனது ஆட்சியைக் கலைத்துவிட்டு, தேர்தலை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். இந்த முறை, கொரோனா தடுப்புப் பணிகளால் மக்கள் மத்தியில் தனக்குக் கிடைத்திருக்கும் நற்பெயரைக்கொண்டு தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கவே, முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவெடுத்திருக்கிறார்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன?

கனடா தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் பலவும் ட்ரூடோவுக்கு எதிராகவே இருக்கின்றன. ஒருசில கருத்துக் கணிப்புகளைத் தவிர, மற்றைய கருத்துக் கணிப்புகளிலெல்லாம், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் எரின் ஓ டூலிதான் முன்னிலை வகிக்கிறார். ட்ரூடோவுக்கான செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்திருப்பதாகவே கருத்துக் கணிப்பு முடிவுகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.

ட்ரூடோவை எதிர்த்து நிற்கும் எரின் ஓ டூலி, ``கொரோனா தொற்று காரணமாக அதிகரித்துக்கொண்டே போகும் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றைப் பற்றி ட்ரூடோவுக்கு கவலையே இல்லை. பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே அவரின் குறிக்கோளாக இருக்கிறது'' என்று எதிர் பிரசாரங்கள் செய்துவருகிறார்.

எரின் ஓ டூலி
எரின் ஓ டூலி
Twitter/@erinotoole

அதுமட்டமின்றி, கனடாவின் ஒரு சில பகுதிகளில் கட்டாய கொரோனா தடுப்பூசி திட்டத்துக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. மேலும், இந்தத் திட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் சிலர், கடந்த வாரம் ட்ரூடோ பிரசாரம் செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்மீது கற்களை வீசி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஆட்சியைத் தக்கவைப்பாரா ட்ரூடோ?

`ஆட்சியைத் தக்கவைப்பாரா ட்ரூடோ?' என்கிற கேள்விக்கு சில பதில்களைச் சொல்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். ``இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தலை அறிவித்திருக்கிறார் என்றால், நிச்சயம் ஆட்சியைத் தக்கவைப்போம் என்ற நம்பிக்கை ட்ரூடோவிடம் இருக்கும். கொரோனாவைக் கட்டுப்படுத்தியது, விரைவாக மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தியது, சரியான நேரத்தில் ஊரடங்கு அறிவித்தது என கொரோனா கட்டுப்பாடுகளில் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

 ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ
விவசாயிகள் போராட்டம்; ஜஸ்டின் ட்ரூடோ கருத்து... கனடா தூதரை அழைத்து எதிர்ப்பைப் பதிவு செய்த இந்தியா!

அதே நேரத்தில், கொரோனா பேரிடரையும், நான்காம் அலையையும் காரணம் காட்டி, அவர் அரசியல் செய்வது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டபோது, `இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே தேர்தல் தேவையா?' என்று கனடா மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 60 சதவிகிதம் பேர் `இப்போது தேர்தல் வேண்டாம்' என்ற பதிலையே சொல்லியிருக்கிறார்கள். 2021 தேர்தலைப் பொறுத்தவரை ட்ரூடோவுக்கும், டூ ஒலிக்கும் இடையில் கடுமையான போட்டி இருக்கும். எனவே, ட்ரூடோ மீண்டும் வெற்றிபெறுவாரா இல்லை சறுக்குவாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு