Published:Updated:

கட்டாய தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத போராட்டம்... கனடா பிரதமர் ட்ரூடோ என்ன செய்யப்போகிறார்?!

கனடா போராட்டம் ( AP Photo )

கட்டாய தடுப்பூசியால் கட்டுக்கடங்காத போராட்டம்... எப்படிச் சமாளிக்கப்போகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?!

கட்டாய தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத போராட்டம்... கனடா பிரதமர் ட்ரூடோ என்ன செய்யப்போகிறார்?!

கட்டாய தடுப்பூசியால் கட்டுக்கடங்காத போராட்டம்... எப்படிச் சமாளிக்கப்போகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?!

Published:Updated:
கனடா போராட்டம் ( AP Photo )

கனடா தலைநகர் ஒட்டாவாவின் முக்கியத் தெருக்கள் அனைத்தையும் லாரி ஓட்டுநர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அங்கு திரும்பும் பக்கமெல்லாம் லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் நடத்தும் போராட்டம்தான் கனடா தலைநகர் ஒட்டாவாவை ஸ்தம்பிக்கவைத்திருக்கிறது. ஹாரன்கள், சைரன்கள், பட்டாசுகள் மூலம் அடிக்கடி ஒலியெழுப்பி, போராட்டத்தைக் கொண்டாட்டமாக மாற்றியிருக்கிறார்கள் லாரி ஓட்டுநர்கள். 10 நாள்களுக்கு மேலாக நடக்கும் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிவருகிறது கனடா அரசு. திணறிவருகிறார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

என்ன பிரச்னை?

அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, கனடாவில் தொற்றுப் பரவலைத் தடுக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவற்றில் குறிப்பாக, `பொது இடங்களுக்கு வருபவர்களும், பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்களும் கட்டாயம் தடுப்பூசிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். லாரி ஓட்டுநர்கள் பயணம் மேற்கொள்ளவும் தடுப்பூசிச் சான்றிதழ் அவசியம்!' என்று கனடா அரசு உத்தரவிட்டிருந்தது.

கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து, லாரி ஒட்டுநர்கள் பலரும் இதற்கு எதிராகக் குரல்கொடுக்கத் தொடங்கினர். கடந்த ஜனவரி 29-ம் தேதி அன்று, கனடா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் தலைநகர் ஒட்டாவாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். அன்றிலிருந்து, தினசரி பல நூறு லாரி ஓட்டுநர்கள் ஒட்டாவாவை அடைந்தனர். ஒட்டாவாவின் சாலையோரங்களில் கூடாரம் அமைத்துப் போராட்டங்களில் ஈடுப்பட்டனர். கட்டாய தடுப்பூசி உத்தரவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலில், லாரி ஓட்டுநர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், நாள்கள் செல்லச் செல்ல கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனநிலையிலிருப்பவர்களும் கலந்துகொள்ளத் தொடங்கினர். இதனால் கனடா அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்தது. முன்னதாக, `தலைநகரில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்தோடு ரகசிய இடத்துக்குச் சென்றுவிட்டார்' எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

அரசின் நடவடிக்கைகள் என்னென்ன?

கடந்த 10 நாள்களாக ஒட்டாவாவில் நடந்துவரும் இந்தப் போராட்டத்தால், கனடா அரசுக்குப் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. லாரி ஓட்டுநர்களோ, `கட்டாய தடுப்பூசி உத்தரவை நீக்கிக்கொண்டால் மட்டுமே, போராட்டத்தைக் கைவிடுவோம்' என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதனால், என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிவருகிறது கனடா அரசு.

Canada Protest
Canada Protest
AP Photo

இந்த நிலையில், போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, ஒட்டாவாவில் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தி உத்தரவிட்டார் ஒட்டாவா மேயர் ஜிம் வாட்ஸன். ``போராட்டக்காரர்களைவிட காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், போராட்டங்கள் எல்லைமீறிச் சென்றுகொண்டிருக்கின்றன. ஒட்டாவா நகரத்தை மீட்டெடுக்க அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார் ஜிம் வாட்ஸன்.

என்ன செய்யப்போகிறார் ஜஸ்டின் ட்ரூடோ?

இதையடுத்து கனடா நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ``இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்'' என்று வலியுறுத்தியதோடு, லாரி ஓட்டுநர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பிப்ரவரி 8-ம் தேதி அன்று, தனது ட்விட்டர் பக்கத்தில், ``கனடா மக்களுக்குப் போராட்டம் நடத்தவும், தங்கள் அரசாங்கத்துடன் உடன்படாமல் இருக்கவும், தங்கள் குரல்களை அரசாங்கத்துக்குக் கேட்கச் செய்யவும் உரிமை உண்டு. அந்த உரிமையை நாங்கள் எப்போதும் பாதுகாப்போம். ஆனால், நமது பொருளாதாரத்தையோ, ஜனநாயகத்தையோ அல்லது நமது சக குடிமக்களின் அன்றாட வாழ்க்கையையோ முடக்க அவர்களுக்கு உரிமை இல்லை. அது நிறுத்தப்பட வேண்டும்!'' என்று பதிவிட்டிருக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ.

இது குறித்து, ``பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, போராட்டக்காரர்களைக் கண்டித்தது தவறு. எங்களுக்கு என்ன வேண்டும் என்பதைக் காது கொடுத்துக் கேட்கவே அவர்கள் தயாராக இல்லை. கட்டாய தடுப்பூசி உத்தரவு திருப்பிப் பெறப்படும் வரை போராட்டங்கள் ஓயாது" என்றிருக்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த 2019 தேர்தலில், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றினார் ட்ரூடோ. அடுத்த தேர்தல், 2023-ம் ஆண்டுதான் நடைபெறவிருந்தது. ஆனால், நாடாளுமன்றத்தை இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே கலைத்துவிட்டு 2021-லேயே தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார் ட்ரூடோ. ``கூட்டணி ஆட்சி என்பதால், ட்ரூடோவால் தனித்து எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. அதனால்தான் இரண்டே ஆண்டுகளில் மீண்டும் தேர்தலை நடத்தி மக்கள் பணத்தை வீணடிக்கிறார்'' என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்தக் குற்றச்சாட்டுகளையும் மீறித் தேர்தலை நடத்தி, ஆட்சியைக் கைப்பற்றினார் ட்ரூடோ.

மீண்டும் ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களிலேயே ட்ரூடோவுக்கு, மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது லாரி ஓட்டுநர்களின் போராட்டம். கனடா தாண்டி வெளிநாடுகளிலும் இந்தப் போராட்டம் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்குச் சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. லாரி ஓட்டுநர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் சிலரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்திருப்பது, ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலத்தையே அசைத்துப் பார்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜஸ்டின் ட்ரூடோ, இந்தப் பிரச்னைக்கு எப்படித் தீர்வு காணப்போகிறார்... கனடா அரசியலில் தன்னை எப்படி நிலை நிறுத்திக்கொள்ளப் போகிறார் என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!