Published:Updated:

`Me Too' பதிவு... காணாமல் போன சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவாய் - என்ன நடந்தது?!

சீனாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான பெங் ஷுவாய், சீனாவின் முன்னாள் துணை அதிபர்மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

`Me Too' என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி உலகம் முழுவதுமிருக்கும் பெண்கள் பலரும், தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்தனர். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான பெங் ஷுவாய், சீனாவின் முன்னாள் துணை அதிபர்மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

சீனாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய். உலக தரவரிசைப் பட்டியலில், முதன்முறையாக முதலிடம் பிடித்த சீன டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் இவர். ஒற்றையர் பிரிவில் இரண்டு முறையும், இரட்டையர் பிரிவில் 22 முறையும் பட்டம் வென்றிருக்கிறார் பெங் ஷூவாய்.
zhang gaoli
zhang gaoli

`மீ டு' குற்றச்சாட்டு!

இரண்டு வாரங்களுக்கு முன்னர், தனது வெய்போ (சீனாவிலுள்ள சமூக வலைதளம்) சமூக வலைதளப் பக்கத்தில், ``2012 முதல் 2018 வரை என்னைப் பலவந்தப்படுத்தி, பாலியல் தொல்லைகளைக் கொடுத்து வந்தார் ஜாங் கயோலி (Zhang Gaoli) . ஆரம்பத்தில் நான் முடியாது என்றேன். ஆனால், என்னை அடிபணியவைத்து சித்ரவதை செய்துவந்தார். அவராக என்னிடம் பேசுவதை நிறுத்தும்வரை இந்தச் சித்ரவதைகளை நான் அனுபவித்தேன். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரமில்லை. ஆனால், கயோலியின் மனைவிக்கு இது தெரியும்’’ என்று பதிவிட்டிருந்தார் பெங் ஷூவாய்.

இந்தப் பதிவு வெளியான சில மணிநேரங்களிலேயே இணையதளத்திலிருந்து அகற்றப்பட்டது. இருந்தும், அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவிவந்தன. இதையடுத்து இந்த விவகாரம் பெரிய அளவில் பேசுபொருளானது.

ஷூவாய் குற்றஞ்சாட்டிய ஜாங் கயோலி யார்?

சீனாவின் முன்னாள் துணை அதிபராக இருந்தவர்தான் இந்த ஜாங் கயோலி. 2013 முதல் 2018 வரை துணை அதிபர் பதவி வகித்தார். இவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தவிர்க்க முடியாது முக்கியத் தலைவராக இருந்துவந்தவர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார மிக்க குழுவான `பொலிட் பீரோ'வில் உறுப்பினராக இருந்தவர் கயோலி. மேலும், கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்திருக்கிறார். தற்போது அரசியலிலிருந்து ஓய்வுபெற்றிருந்தாலும், சீன அரசியலில் அதிகாரம் பெற்றவராகவே திகழ்ந்துவருகிறார் கயோலி.

மாயமான ஷூவாய்!

ஷூவாய், கயோலி குறித்து வெய்போ தளத்தில் பதிவிட்ட ஓரிரு நாள்களில், ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் அவரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்ததாகவும், ஆனால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் செய்தி வெளியிட்டிருந்தது. கயோலியையும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தகவல் தெரிவித்தது ஏ.எஃப்.பி. இந்த நிலையில், பெங் ஷூவாய் காணாமல் போய்விட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

`பெங் ஷூவாய் எங்கே?'

ஜப்பானைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா, #WhereIsPengShuai என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ``பெங் ஷூவாய் எங்கே'' என்று ட்விட்டரில் கேள்வியெழுப்பியிருக்கிறார். அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான கிறிஸ் எவர்ட்டும் இதே ஹேஷ்டேக்கை பயன்படுத்திக் கேள்வியெழுப்பியிருக்கிறார். மகளிர் டென்னிஸ் சம்மேளனம் பெங் ஷூவாய் காணாமல்போன விவகாரத்தில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்ததோடு, இதில் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீனாவைச் சேர்ந்த மகளிர் நல அமைப்பான `ஃப்ரீ சைனிஸ் ஃபெமினிஸ்ட்' என்கிற அமைப்பும் பெங் ஷூவாய்க்காக குரல் கொடுத்துவருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், ``சீனாவைச் சேர்ந்த பெண்கள் பலரும் ஷூவாய்க்கு ஆதரவாகக் குரலெழுப்ப வேண்டுமென நினைக்கிறார்கள். ஆனால், அவர்களால் அதைச் செய்ய முடியாத சூழலே நிலவிவருகிறது. எது எப்படியோ நாங்கள் ஷூவாயின் கதையை வெளி உலகுக்குக் கொண்டுவருவோம்'' என்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்று (நவ. 17) சீனாவின் அரசு ஊடகம், பெங் ஷூவாயின் இ-மெயில் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், கயோலி மீது தான் பாலியல் குற்றச்சாட்டே வைக்கவில்லை என்று பெங் ஷுவாய் தெரிவித்திருக்கிறார். மேலும், ``நான் நலமோடு இருக்கிறேன். வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன்'' என்றும் சொல்லியிருக்கிறார். இருந்தும், இந்த இ-மெயிலின் நம்பகத்தன்மை குறித்து டென்னிஸ் வீரர்கள் பலரும் கேள்வியெழுப்பிவருகின்றனர்.

`Me Too' பதிவு... காணாமல் போன சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவாய் - என்ன நடந்தது?!

இந்த விவகாரம் குறித்துப் பேசும் சர்வதேச அரசியல் நோக்கர்கள், ``ஏற்கெனவே சீன அரசுக்கு எதிராகப் பேசிய அலிபாபா நிறுவனர் ஜாக் மா, பல காலம் மாயமாக இருந்தார். சில நாள்களுக்கு முன்புதான் வெளி உலகுக்குத் தலைகாட்டினார். ஃபேன் பிங்பிங் என்கிற சீன நடிகையும் அரசுக்கு எதிராகப் பேசியதால் மாயமானார். அந்த வகையில், தற்போது ஷூவாயும் மாயமாகியிருக்கிறார். ஏற்கெனவே, சீனாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகப் புகார்கள் எழுந்துவருகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட்டு, பிரச்னைக்கு உரிய தீர்வுகாண வேண்டும்'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு