Published:Updated:

தகர்க்கப்பட்ட பள்ளிக்கூடம்; உயிரிழந்த 60 பேர் - உக்ரைனுக்காகக் களமிறங்க உலக நாடுகள் தயங்குவது ஏன்?!

ரஷ்யா - உக்ரைன் போர்

உக்ரைன் உருக்குலைவதை உலக நாடுகள் வேடிக்கை மட்டும் பார்ப்பது ஏன்?

தகர்க்கப்பட்ட பள்ளிக்கூடம்; உயிரிழந்த 60 பேர் - உக்ரைனுக்காகக் களமிறங்க உலக நாடுகள் தயங்குவது ஏன்?!

உக்ரைன் உருக்குலைவதை உலக நாடுகள் வேடிக்கை மட்டும் பார்ப்பது ஏன்?

Published:Updated:
ரஷ்யா - உக்ரைன் போர்

பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், 80 நாள்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் ரஷ்யாவின் போர்க் கப்பலான `மாஸ்க்வா' தகர்க்கப்பட்டதை அடுத்து, உக்ரைன் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியிருக்கிறது ரஷ்யா. `போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்' என்ற உலக நாடுகளின் கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல் போரைத் தீவிரப்படுத்தியிருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்.

 ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
AP

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், உக்ரைனிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறது ரஷ்யா. கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியிலுள்ள பிலோஹோரிவ்கா (Bilohorivka) என்ற கிராமத்தில் பள்ளிக்கூடம் ஒன்று அமைந்திருக்கிறது. இந்தப் போரில் வாழ்விடங்களையும், உடைமைகளையும் இழந்த பிலோஹோரிவ்கா கிராமத்தைச் சேர்ந்த சுமார் 90 பேர் அந்தப் பள்ளிக்கூடத்தில்தான் தஞ்சமடைந்திருந்தனர். மே 8 அன்று அந்தப் பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது ரஷ்யப் படை. இதனால், பலத்த சேதமடைந்த அந்தப் பள்ளிக்கூட கட்டடத்தில் தீப்பற்றி எரிந்தது. அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்த பின்னர், இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டிருந்தவர்களை மீட்டுவருகின்றனர். இதுவரை இந்தத் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

போர் தொடங்கிய பிறகு, ஒரே நாளில் அதிக பொதுமக்கள் உயிரிழந்தது (60) இந்தத் தாக்குதலில்தான் என்று சொல்லப்படுகிறது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலையும் கைப்பற்றி தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது ரஷ்யா. அங்குள்ள இரும்பு ஆலை ஒன்றில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உணவு, நீரின்றி சிக்கித் தவிப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. இதையடுத்து ரெட் கிராஸும், ஐ.நா சபையும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, அங்கிருக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டுவருகிறார்கள்.

இரும்பு ஆலையிலிருந்து வெளியேறிய சிலர் சர்வதேச ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருந்தனர். அதில், ``எங்களை வெளியேற்றியவர்கள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். நாங்கள் ரஷ்யாவுக்கு வர மறுப்பு தெரிவித்தோம். `ஒன்று ரஷ்யாவுக்கு வாருங்கள்... இல்லை இங்கேயே இருந்து சிதைந்து கிடக்கும் மரியுபோல் நகரை மீண்டும் கட்டியெழுப்பிக் கொள்ளுங்கள்’ என்றனர். நாங்கள் எப்படி மரியுபோலை கட்டியெழுப்புவது'' என்றிருக்கிறார்கள் பாவமாக.

உக்ரைன் போர்
உக்ரைன் போர்

உக்ரைன் போரை உற்றுநோக்கும் சிலர், `` `உக்ரைனிலிருந்து ரஷ்ய ராணுவத்தால் மீட்கப்படும் மக்களை தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்று கொத்தடிமைகளைப்போல ரஷ்யா வேலை வாங்குகிறது' என்கிற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்தப் போரால் உக்ரைன் மக்கள் மிகப்பெரிய கஷ்டங்களைச் சந்தித்துவருகிறார்கள். உக்ரைனிலுள்ள இளைஞர்கள், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது'' என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மரியுபோல் நகரம் மட்டுமல்ல, உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சிதைந்தே காணப்படுவதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன. உக்ரைனில், 200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. பள்ளிக் கட்டடங்கள், ஆலைகள், வணிக நிறுவனங்கள் எனப் பல்வேறு இடங்களும் இடிந்து கிடக்கின்றன. ஒருவேளை தற்போது போர் நிறுத்தப்பட்டாலும், உக்ரைன் இயல்புநிலைக்குத் திரும்பப் பல ஆண்டுகள் ஆகும் என்பதால், அந்த நாட்டு மக்கள் செய்வதறியாமல் திண்டாடிவருகின்றனர்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைனுக்கு ஆதரவாகப் பல்வேறு நாடுகளும் ஆயுதங்கள், நிதி உதவிகள் வழங்கிவந்தாலும், களத்தில் இறங்கி உதவி செய்ய எந்த நாடும் தயாராக இல்லை. போருக்கு முன்பாக `நாங்கள் இருக்கிறோம்... பார்த்துக்கொள்ளலாம்' என உக்ரைனுக்கு தைரியம் சொன்ன அமெரிக்காவும், களத்தில் தனது படை வீரர்களை இறக்கி உதவ முன்வரவில்லை. இது குறித்துப் பேசும் சர்வதேச அரசியல் நோக்கர்கள், ``இந்தப் போருக்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று, உக்ரைன் நேட்டோ படைகளில் சேர நினைத்ததுதான். ஆனால், உக்ரைனுக்குக் களத்தில் உதவி செய்ய நேட்டோ நாடுகள் கூட்டமைப்புகூட முன்வரவில்லை.

அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளும் ஆயுதங்கள் வழங்கியும், நிதி அளித்தும் உக்ரைனுக்கு உதவிவருகின்றன. அதேபோல பல நாடுகள், உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாமீது பொருளாதாரத் தடையும் விதித்திருக்கின்றன. இருந்தும் எந்த நாடும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று, தங்களது படைகளை உக்ரைனுக்கு ஆதரவாகக் களமிறக்கத் தயங்குகின்றன. மற்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகத் தங்கள் படைகளைக் களமிறக்கினால், அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்பதுதான் தயக்கத்துக்கான காரணம். நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் இந்தப் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிலாவது உலக நாடுகள் தீவிரம்காட்ட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இந்தப் போர் முடிவுக்கு வரும்!'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism