Published:Updated:

ஹெராயின் மாஃபியா: இந்தியாவைச் சுற்றிவளைக்கும் போதைப் போர்!

ஹெராயின்

உலக அளவில் கைப்பற்றப்படும் ஹெராயின், மார்பின் போன்ற போதைப்பொருள்களில், 80% ஆப்கனில் உற்பத்திசெய்யப்படுபவை என அறுதியிட்டுச் சொல்கிறது ஐ.நா-வின் UNODC அறிக்கை.

ஹெராயின் மாஃபியா: இந்தியாவைச் சுற்றிவளைக்கும் போதைப் போர்!

உலக அளவில் கைப்பற்றப்படும் ஹெராயின், மார்பின் போன்ற போதைப்பொருள்களில், 80% ஆப்கனில் உற்பத்திசெய்யப்படுபவை என அறுதியிட்டுச் சொல்கிறது ஐ.நா-வின் UNODC அறிக்கை.

Published:Updated:
ஹெராயின்

இன்றைய நவீன யுகத்தில் ஒரு நாட்டைத் தாக்கும் ஆயுதம் துப்பாக்கியாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை; ஒரு நாட்டின் வளர்ச்சி, வளங்களை நிர்மூலமாக்க அணுகுண்டுகள் அனுப்பிய காலம் மெல்ல காலாவதியாகிக்கொண்டிருக்க, பொருளாதாரப் போர் (Economic war), உயிரியல் போர் (Bio War), இணையப் போர் (Cyber War) எனப் போர்தொடுக்கும் யுக்திகள் காலத்திற்கேற்ப நவீனமடைந்துகொண்டிருக்கின்றன. அப்படியான ஒரு மறைமுகப் போர் முறையைத்தான், இந்தியா இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஆம், அது ஹெராயின் மாஃபியா. இதை ஒரு `போதைப் போர்’ (Narcotics War) என்றும்கூட சொல்லலாம்.

ஓபியம் பாப்பி
ஓபியம் பாப்பி

ஹெராயின் என்றால் என்ன?

ஓபியம் பாப்பி (Opium Poppy) எனும் அபின்செடியிலிருந்து இயற்கை முறையில் பெறப்படும் பொருள்கள்தான் ஹெராயின் (Heroin), மார்பின் (Morphine) போன்ற போதைப்பொருள்கள். அடிப்படையில் வலி நிவாரணிகளாக மருத்துவத்துறையிலும், கசகசா இலை, விதைகள் எனச் சமையைலறையிலும் பயன்படுத்தப்பட்டுவந்த இந்த மூலப்பொருள்கள்தான் காலப்போக்கில் கட்டுப்படுத்த முடியாத போதைப்பொருள்களாக உருமாறிவிட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹெராயின் உற்பத்தி செய்யப்படும் நாடுகள்:

அபின் செடிகள் (Opium Poppy) மருத்துவத் தேவைக்காக உற்பத்திசெய்யப்படுவதைக்காட்டிலும், லாபநோக்கத்துக்காக, சட்டவிரோத கடத்தலுக்காகவே அதிகம் விளைவிக்கப்படுகின்றன. அதில் முன்னணி வகிக்கும் முக்கியமான இரண்டு பகுதிகள், மத்திய ஆசியாவின் `தங்க முக்கோணம்' (Golden Triangle), மத்திய கிழக்காசியாவின் `தங்கப் பிறை' (Golden Crescent). அதாவது, நிலவியல் அமைப்பில் பிறைவடிவில் அமைந்திருக்கும் ஆப்கானிஸ்தான், இரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதிகள் தங்கப் பிறை தேசங்கள் எனவும், முக்கோண அமைப்பில் இருக்கும் மியான்மர், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகள் 'தங்க முக்கோணம்' என்றும் அழைக்கப்படுகின்றன.

தங்க முக்கோணம்' -`தங்கப் பிறை'
தங்க முக்கோணம்' -`தங்கப் பிறை'
விக்கிபீடியா

இவை தவிர மூன்றாவதாக, மத்திய, தென் அமெரிக்கப் பகுதிகளில் 'ஓபியம் பாப்பி' மிக அதிகமாக உற்பத்திசெய்யப்படுகிறது.

இந்தியா இலக்கானது எப்படி?

தெற்காசிய பூலோக அமைப்பைப் புரிந்துகொண்டாலே பாதி உண்மைகள் விளங்கிவிடும். அபின் நாடுகளாக வர்ணிக்கப்படும் தங்க முக்கோணப் பிரதேசத்துக்கும், தங்கப்பிறை பிரதேசத்துக்கும் இடையேதான் இந்தியா மாட்டிக்கொண்டிருக்கிறது.

இந்தியா
இந்தியா

ஹெராயின் விற்பனைக்கு ஏற்ற மனிதவளம்மிக்க சந்தைக்களமாகவும், பிறநாடுகளுக்கு ஹெராயின் கடத்துவதற்கு ஏதுவான சர்வதேசப் பாதைகளைக்கொண்டிருப்பதாலும் சட்டவிரோத கடத்தல்காரர்களின் இலக்காக இந்தியா இயற்கையாகவே அமைந்துவிடுகிறது.

இந்தியாவுக்கான ஹெராயின் பாதைகள்:

இந்தியாவில் சட்டவிரோத ஹெராயின் கடத்தல், வான், கடல், தரை என மூன்று வழிகளில் நான்கு திசைகளை நோக்கியும் படையெடுத்துவருகிறது. குறிப்பாக, வட இந்தியாவைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான்-இந்தியா எல்லைப் பகுதியில் இருக்கும் பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களின் தரைவழியாக கடத்தப்படுகிறது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை
Jafar Khan

அதேபோல், வடகிழக்கு இந்தியாவின் எல்லைப் பகுதியில் இருக்கும் மியான்மர், பங்களாதேஷ், பூடான் உள்ளிட்ட நாடுகள் வழியாக அஸ்ஸாம், மியான்மர் போன்ற மாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. பெரும்பாலும் தரைவழி, வான்வழியைக் கொண்டே நடத்தப்பட்டுவந்த ஹெராயின் கடத்தல், கடந்த சில ஆண்டுகளாக கடல்வழியே கொடிகட்டிப் பறக்கின்றன.

வடகிழக்கு மாநிலங்கள்
வடகிழக்கு மாநிலங்கள்

குறிப்பாக, 'தங்கப் பிறை' நாடுகளின் துறைமுகங்களிலிருந்து கப்பல் மூலம் இந்தியாவின் குஜராத், மும்பை, கொச்சி, தூத்துக்குடி, இலங்கையின் கொழும்பு துறைமுகங்களுக்கு கடத்தப்படுகிறது.

ஆப்கன் எனும் ஹெராயின் தேசம்:

`உலகிலேயே அதிக அளவு ஓபியம் உற்பத்தி செய்யும் நாடு ஆப்கானிஸ்தான்’ என ஐ.நாவின் (UNODC- United Nations Office on Drugs and Crime) அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, 2015-20 காலகட்டத்தில் மட்டும் உலகளாவிய ஓபியம் உற்பத்தியில் 83% ஆப்கனில் இருந்துதான் உற்பத்திசெய்யப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார், 1,20,000 ஆப்கானிய விவசாயிகள் சட்டவிரோத ஓபியம் பயிரிடலில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

2020-ம் ஆண்டில் உலக அளவில் பயிரிடப்பட்ட 2.94 லட்சம் ஹெக்டேர் சட்டவிரோத ஓபியம் பாப்பியில், 2.24 லட்சம் ஹெக்டேர் ஆப்கானிஸ்தானில் மட்டுமே பயிரிடப்பட்டது. இது கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த பரப்பளவைவிட 80% அதிகம். குறிப்பாக, கொரோனா சூழலிலும் ஓபியம் சாகுபடி பரப்பு 37% அதிகரித்திருக்கிறது. எனவே, ஆப்கனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 11% ஓபியம் உற்பத்தி மூலமே கிடைக்கிறது.

ஓபியம் பாப்பி
ஓபியம் பாப்பி
pixabay

உலக அளவில் கைப்பற்றப்படும் ஹெராயின், மார்பின் போன்ற போதைப்பொருள்களில், 80% ஆப்கனில் உற்பத்திசெய்யப்படுபவை எனச் சொல்கிறது ஐ.நா-வின் UNODC அறிக்கை.

ஹெராயின் கடத்தல் பின்னணியில் யார்?

ஹெராயின் கடத்தல் பின்னணியில், மத்திய ஆசியப் பகுதியில் இயங்கும் தீவிரவாத அமைப்பினரே முன்னணி வகிக்கின்றனர். குறிப்பாக தாலிபன்கள். காரணம், தாலிபன் போன்ற தீவிரவாத அமைப்புக்கான நிதிவருவாய், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலமாகவே கிடைக்கிது.

தாலிபன்
தாலிபன்

குறிப்பாக, கடந்த 2018-19-ம் ஆண்டில் மட்டும் தாலிபன்கள் சுமார் 400 மில்லியன் டாலர் வருமானத்தை ஓபியம் வர்த்தகத்தின் மூலம் ஈட்டியிருப்பதாகவும், தாலிபன்களின் ஆண்டு வருமானத்தில் 60% சட்டவிரோத ஓபியம் வர்த்தகத்தின் மூலமே கிடைத்திருப்பதாகவும் ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது.

ஓபியம் பாப்பி மலர்
ஓபியம் பாப்பி மலர்
pixabay

இந்தியா எதிர்கொள்ளும் பாதிப்பு:

தாலிபன்கள் போன்ற தீவிரவாத அமைப்புகள், இந்தியாவில் இருக்கும் தங்களின் ஆதரவளர்கள், இடைத்தரகர்கள், சட்டவிரோத கடத்தல்காரர்கள் உதவியுடன் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக சர்வ சாதாரணமாக ஹெராயின் கடத்தலில் ஈடுபடுகின்றன. இதன் மூலம், ஆயுத மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பில் தன்னிறைவு பெறும் தீவிரவாதக்குழுக்கள் அடுத்தகட்ட தாக்குதலுக்குத் தங்களை வலிமைப்படுத்திக்கொள்கின்றன. அதேபோல், இந்தியாவின் வளமாக, வளர்ச்சிக்கு அடையாளமாகத் திகழும் இளைஞர்களை 'ஹெராயின்' போன்ற போதைப்பொருள்களின் பக்கம் அடிமையாக்கி பலவீனப்படுத்துகின்றன.

ஹெராயின்
ஹெராயின்
Photo by Colin Davis on Unsplash

இதன் விளைவாக, தெற்காசியாவிலேயே இந்தியாவில்தான் மிக அதிகமாக ஹெராயின் பயன்படுத்தப்படுவதாக ஐ.நா வருத்தம் தெரிவித்திருக்கிறது. ஆண்டுதோறும் 7,000 கோடி மதிப்பிலான 17 டன் ஹெராயின் இந்தியாவில் பயன்படுத்தப்படுவதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. சட்டவிரோத போதைப்பொருள்கள் பயன்படுத்துவதில் ஒட்டுமொத்த உலக (0.70%) மற்றும் ஆசிய நாடுகளின் (0.46%) சராசரியைவிட இந்தியாவின் (2.06%) சராசரியே மிக அதிகமாக இருப்பதாக சமீபத்திய UNODC அறிக்கை எச்சரிக்கிறது.

இந்தியாவில் அதிகரிக்கும் ஹெராயின் கடத்தல்:

2021-ம் ஆண்டை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தொடர்ச்சியாகப் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில மாதங்களில் மட்டும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய ஹெராயின் கைப்பற்றப்பட்டது. குறிப்பாக, கடந்த ஜூலை 11-ம் தேதி, தலைநகர் டெல்லியில்வைத்து ரூ.2,500 கோடி மதிப்புள்ள 354 கிலோ ஹெராயின் டெல்லி சிறப்பு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், இரண்டு ஆப்கானிஸ்தானியர்கள் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின்
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின்

தரைமார்க்கமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் எல்லைவழியாக சட்டவிரோதமாக பஞ்சாப் மாநிலத்துக்கு கடத்திவரப்பட்ட 40.81 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. மே மாதத்திலும் 12.9 கிலோ ஹெராயின் பஞ்சாப் பெரோஸ்பூரில் கைப்பற்றப்பட்டு, பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அதேபோல், காஷ்மீரின் கத்துவாவில் வைத்து ரூ.135 கோடி மதிப்புள்ள 27 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

வடகிழக்கு இந்தியாவிலும், மியான்மர் வழியாக இந்தியாவின் மணிப்பூருக்குக் கடத்திவரப்பட்ட 80 கோடி மதிப்பிலான 20 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

கடல்மார்க்கத்தைப் பொறுத்தவரையில் மார்ச் 31-ம் தேதி, கேரளாவின் கொச்சியில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கப்பலிலிருந்து, ரூ.3,000 கோடி மதிப்பிலான 300 கிலோ ஹெராயினுடன் ஐந்து ஏ.கே-47 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டு, ஆறு இலங்கை நாட்டினர் கைதுசெய்யப்பட்டனர். செப் 1-ம் தேதி இந்திப்பெருங்கடல் பரப்பில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 301 கிலோ ஹெராயினைக் கடத்திவந்த பாகிஸ்தான் கப்பலை சுற்றிவளைத்துப் பிடித்த இலங்கை கடற்படையினர் நான்கு பாகிஸ்தானியர்கள் உட்பட ஏழு பேரைக் கைதுசெய்தனர்.

ஹெராயின்
ஹெராயின்

வான்மார்க்கமாக கடந்த ஜூன் 5-ம் தேதி கத்தார் தோஹாவிலிருந்து, ஹைதராபாத் விமான நிலையத்துக்குக் கடத்திவரப்பட்ட 68 கோடி மதிப்பிலான 9.8 கிலோ ஹெராயினை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே மாதத்தில், 19.5 கோடி மதிப்பிலான 3 கிலோ ஹெராயினும் கைப்பற்றப்பட்டது. சென்னை விமான நிலையத்திலும், 70 கோடி மதிப்பிலான 10 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

சட்டவிரோத ஹெராயின் கடத்தலைத் தடுக்க உலக நாடுகள் துரிதமாகச் செயல்பட்டாலும், வெறும் 23.5% மட்டுமே அந்த நாட்டு காவல்துறையினரால் கைப்பற்றப்படுகிறது.