`ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. பெரும்பான்மை எம்.பி-க்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது' என்றெல்லாம் சொல்லிவந்த மகிந்த ராஜபக்சே இப்போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அந்த ராஜினாமாவுக்கு முன்பாக அவர் குடும்பம் செய்த புனிதப்பயணங்கள் கைகொடுக்கவில்லை. தனக்கு இருக்கும் ஆதரவைக் காட்ட அவர் செய்த முயற்சி, கொழும்பு போராட்டக் களத்தில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கலவரத்துக்கு நடுவே அவர் ராஜினாமா கடிதத்தை தன் தம்பியும் அதிபருமான கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
மகிந்த ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இலங்கை முழுக்க அவரின் ஆதரவாளர்களுக்கும் போராடும் மக்களுக்கும் இடையே மோதல் பரவுகிறது.

நாடு முழுக்க அவசரநிலைப் பிரகடனம் அமலில் இருந்தாலும், கலவரங்களைத் தடுக்க முடியவில்லை. இன்னொரு பக்கம் மகிந்தவின் ராஜினாமாவால் போராட்டக்காரர்கள் எழுச்சி பெற்றிருக்கிறார்கள். 'அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் ராஜினாமா செய்ய வேண்டும், ராஜபக்சே குடும்பம் ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்து விலக வேண்டும்' என்று ஜனாதிபதி மாளிகையைச் சூழ்ந்துகொண்டு மக்கள் போராடுகிறார்கள். போராட்டம் தொடங்கி ஒரு மாதம் ஆகியும் அதன் வீரியம் இன்னும் குறையவில்லை.
இத்தனைக் காலமும் ஒற்றுமையாக இருந்து அதிகாரத்தை அனுபவித்த ராஜபக்சே குடும்பம், தங்கள் குடும்பத்திலேயே யாரையாவது காவு கொடுத்துவிட்டு அதிகாரத்தைத் தக்கவைக்கத் துடிக்கிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிபர் பதவியில் இருக்கும் தம்பியும், பிரதமராக இருந்த அண்ணனும் கடைசி நிமிடம் வரை ஏதாவது செய்து தங்கள் பதவிகளைக் காப்பாற்றும் முயற்சியில்தான் இருந்தார்கள். இவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவரோ, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இவரோ நேரடியாக இதுவரை சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால், ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியினரே இரண்டு அணிகளாகப் பிரிந்து பிரதமர் பக்கமும் அதிபர் பக்கமும் சென்றார்கள். 'பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜினாமா செய்தால் மக்களின் கோபம் குறைந்துவிடும். நம் கட்சியின் அதிகாரமும் காப்பாற்றப்படும்' என்று தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் தன் அண்ணனுக்குத் தகவல் சொல்லி அனுப்பினார் கோத்தபய. ஆனால் மகிந்த இதை ஏற்கவில்லை. 'திடீரென உரங்களுக்குத் தடை விதித்து இயற்கை விவசாயத்துக்கு மாறியது, வரிகளைக் குறைத்தது, ஐ.எம்.எஃப் நிறுவனத்திடம் கடன் வாங்க தாமதம் செய்தது என்று எல்லாத் தவறுகளையும் செய்தது அதிபர்தான். அவர் செய்த தவறுகளே இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம். அவர் செய்த தவறுகளுக்கு நான் ஏன் பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகட்டும்'' என்று பதில் சொல்லி அனுப்பினார் மகிந்த.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமக்கள் போராட்டம் ஆரம்பித்தது முதல் மகிந்த ராஜபக்சே எங்கும் வெளியில் போகவில்லை. மே 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதன்முதலாக அனுராதபுரம் போனார். புனிதமாகக் கருதப்படும் மகாபோதி ஆலயத்தில் வழிபட்டு தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவே இந்தப் பயணம். வழியெங்கும் மக்கள் எதிர்ப்பு கோஷங்களுடன் அவர் வாகனத்தை எதிர்கொண்டு, அவரைப் பதவி விலகச்சொல்லி முழக்கமிட்டார்கள். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தனக்குப் பெரும் ஆதரவு தந்து பதவியில் அமர்த்திய அதே சிங்கள மக்கள், தனக்கு எதிராக வீதியில் நிற்பதைக் கண்டு முகம் சிவந்துபோனார் மகிந்த ராஜபக்சே. அனுராதபுரத்தில் வழிபடும்போதும், பௌத்த பிக்குகளிடம் ஆசி பெறும்போதும் அவரது முகம் இறுக்கமாகவே இருந்தது.

மகிந்த ராஜபக்சேவின் இந்தப் பயணத்துக்கு முன்பாக அவர் மனைவி ஷிராந்தி ராஜபக்சே இன்னொரு புனிதப்பயணம் போனார். 'இத்தனைப் பிரச்னைகளுக்கும் குடும்பத்தைச் சூழ்ந்திருக்கும் கெட்ட ஆவிகள்தான் காரணம். அவற்றை விரட்டினால் எல்லாம் சரியாகிவிடும்' என்று யாரோ ஜோசியர்கள் சொல்லியிருக்கிறார்கள். கண்டி அருகே மாவநெல்லா என்ற இடத்தில் இருக்கும் ததிமுண்ட தெவியோ ஆலயம் சிங்களர்களுக்கு மிகவும் புனிதமானது. துர்க்கை, காளி போல பௌத்தர்கள் வழிபடும் சக்திவாய்ந்த தெய்வம். கெட்ட ஆவிகளை விரட்டுவதற்காக இங்கு போய் பூஜை செய்துவிட்டு வந்தார் ஷிராந்தி.

அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் இதில் சளைத்தவர் இல்லை. அனுராதபுரத்தில் இருக்கும் ஞான அக்கா என்ற மாந்திரீகரை தனது ஆன்மிக ஆலோசகராக வைத்திருக்கிறார் கோத்தபய. அமைச்சர்கள் பேச்சைவிட ஞான அக்கா கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் அதிபர். அதனாலேயே பெரும் செல்வாக்குடன் வலம் வந்தார் ஞான அக்கா.
கொழும்பு நகரின் காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் முகாம் அடித்து நிரந்தரமாகத் தங்கி போராடி வருகிறார்கள். 'மந்திரித்த தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தால் போதும். அவர்கள் ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராகப் போராடாமல் வீட்டுக்குப் போய்விடுவார்கள்' என்று யோசனை சொல்லியிருக்கிறார் ஞான அக்கா. இதைத் தொடர்ந்து அனுராதபுரத்தில் இருந்தும், இந்தியாவிலிருந்தும் காட்டுப்பூக்களை வரவழைத்து சில பூஜைகள் செய்து தண்ணீரை மந்திரித்து இருக்கிறார்கள். போராட்டக்காரர்களுக்கு சப்ளை செய்யப்படும் தண்ணீர் பாட்டில்களுடன் ரகசியமாக இந்த மந்திரித்த தண்ணீரையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள். போராட்டக்காரர்கள் பலரும் அதைக் குடித்திருக்கிறார்கள் ஆனால், இந்த மாந்திரீகம் வேலை செய்யவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இப்படி ஆன்மிக வழிகள் வேலை செய்யாமல் போனதால், அதிரடியில் இறங்கினார் மகிந்த. அதுதான் இப்போது அவரை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறது.'தனக்கு இன்னமும் மக்கள் செல்வாக்கு இருக்கிறது. தன்னை ராஜினாமா செய்யச் சொல்வது சரியில்லை' என்பதை எதிர்க்கட்சிகளுக்கும் போராடும் மக்களுக்கும் உணர்த்த விரும்பினார் பிரதமர். மே 9-ம் தேதி பிரதமர் இல்லத்துக்கு வந்து தன்னை சந்திக்குமாறு ஆளுங்கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார். ஆயிரக்கணக்கான கட்சியினர் அங்கு திரண்டனர். நிறைய பேர் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். ''இதுபோன்ற ஏராளமான போராட்டங்களைப் பார்த்தவன் நான். எதிர்ப்புகளை எப்படி சந்திப்பது என்று எனக்குத் தெரியும். எதற்கும் நான் அடிபணிய மாட்டேன்'' என்று அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தி அவர்களைத் தூண்டிவிட்டார் மகிந்த ராஜபக்சே. கிட்டத்தட்ட தாக்குதலுக்காகவே அவர்களை மகிந்த திரட்டியது போல இருந்தது.

ஒரு மாத காலமாக இலங்கையில் மக்கள் போராட்டம் நடந்தாலும், அதை ஆளுங்கட்சியினர் அமைதியாகவே கடந்து சென்றார்கள். ஆனால், பிரதமர் இல்லத்தில் கட்சியினரைக் கூட்டி மகிந்த ராஜபக்சே பேசியபிறகு நிலைமை மாறியது. கைகளில் கிடைத்த தடிகள், கம்புகளுடன் ஆளுங்கட்சியினர் அங்கிருந்து கிளம்பினர். பிரதமர் இல்லம் அருகில்தான் போராட்டக்காரர்கள் கூடாரம் அடித்துத் தங்கியுள்ளனர். அங்கு சென்ற ஆளுங்கட்சியினர், கூடாரங்களை அகற்றியும், போராடும் மக்களைத் தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர். மக்களும் பதிலுக்குத் தாக்க, ஜல்லிக்கட்டு போராட்ட இறுதிநாள் மெரினா கடற்கரை போல மாறிவிட்டது கொழும்பு.
போராடும் மக்கள் தாக்கப்படுவதைக் கேள்விப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாசா அங்கு வந்தார். அவரையும் ஆளுங்கட்சியினர் தாக்கியதாகத் தெரிகிறது. ஆளுங்கட்சி எம்.பி ஒருவர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தகவல் வெளியானது. மோதலைப் போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாமல் போக, கடைசியில் ராணுவம் வந்து தலையிட்டது. இதுவரை ராஜபக்சே குடும்பத்தையும் ஆட்சியையும் மட்டும் எதிர்த்து இலங்கை மக்கள் அமைதிப் போராட்டம் நடத்திவந்தனர். அது இப்போது ஆளுங்கட்சிக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியுள்ளது. இலங்கையின் பல பகுதிகளில் ஆளுங்கட்சி அலுவலகங்கள், முக்கிய பிரமுகர்களின் இல்லங்கள் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றன. ஆளுங்கட்சியினரும் ஆங்காங்கே பதில் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த வன்முறைச் சூழல்களின் விளைவாக சர்வதேச சமூகம் இலங்கையில் தலையிட்டு அமைதியை நிலவச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ரத்தம் சிந்தாமல் எந்தப் போராட்டமும் வெற்றியை ருசித்ததில்லை என்பதே வரலாறாக இருக்கிறது. இலங்கை அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவிலியிருந்து விலகும் வரை மக்கள் போராட்டம் தொடருமா, அல்லது அவருக்காக ராணுவம் களமிறங்கி மக்களை ஒடுக்குமா என்ற கேள்விகளுக்கான பதிலில்தான் இலங்கை மக்களின் எதிர்கால நிம்மதி இருக்கிறது.