Published:Updated:

தேர்தல் ஆணையத்தைக் கலைத்த தாலிபன் அரசு... ஆப்கானிஸ்தானின் ஜனநாயகம் இனி என்னவாகும்?!

தாலிபன்
News
தாலிபன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.26) அன்று, ஆப்கானிஸ்தானிலுள்ள தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் புகார் ஆணையத்தையும் கலைத்திருக்கிறது தாலிபன் அரசு.

கொரோனாவுக்குப் பிறகு ஒட்டுமொத்த உலகத்தையும் ஒருசேரத் திரும்பிப் பார்க்கவைத்தவர்கள் தாலிபன்கள். ஆம், தெற்காசியாவுக்கும் மத்திய ஆசியாவுக்கும் நடுவே அமைந்துள்ள குட்டி நாடான ஆப்கானிஸ்தானை, துப்பாக்கிக் கரங்களோடு கைப்பற்றிய அதே தாலிபன்கள்தான். கொரோனா இரண்டாம் அலையிலிருந்து மீண்டு வந்த உலக நாடுகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றினார்கள் தாலிபன்கள். அமெரிக்கா, தனது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்றதே இதற்குக் காரணம். அமெரிக்கா, தனது படைகளை மெல்ல மெல்லத் திரும்ப பெறத் தொடங்கியதும், தாலிபன்களும் ஆப்கானிஸ்தான் நகரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றத் தொடங்கினர். தாலிபன்கள் தலைநகர் காபூலை ஆகஸ்ட் 15-ம் தேதியன்று கைப்பற்றினர். தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் தலைநகரைக் கைப்பற்றிய செய்தியை அறிந்ததுமே, நாட்டைவிட்டு வெளியேறினார் அப்போதைய் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி.

தாலிபன்
தாலிபன்
Rahmat Gul

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதன் பின்னர் அப்போதைய ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலே நாட்டின் அரசியல் அமைப்பின்படி `நான்தான் அதிபர்’ என்று அறிவித்துக்கொண்டார். ஆனால் அந்த அறிவிப்பு தாலிபன் அரசை எதுவும் செய்யவில்லை. இன்றுவரை ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. தாலிபன்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை மக்கள்மீது விதித்தனர். அந்தக் கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை 50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி கூட்டிச்சென்றன. மீண்டும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. தாலிபன்களாலும், இந்தக் கட்டுப்பாடுகளாலும் பல ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற முயன்றனர். சிலர் வெளியேறி, பிற நாடுகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.26) அன்று தாலிபன் அரசு, ஆப்கானிஸ்தானிலுள்ள தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் புகார் ஆணையத்தையும் கலைத்திருக்கிறது. இது அந்நாட்டு மக்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் பயங்கர அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இவ்வாறு தேர்தல் ஆணையத்தைக் கலைப்பதால் தேர்தல் என்ற ஒன்றே இல்லாமல் சர்வாதிகாரம் தலைதூக்க வாய்ப்புள்ளது என அச்சம் தெரிவிக்கிறார்கள் உலக அரசியல் ஆர்வலர்கள். பல உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்குக் கடந்த 20 ஆண்டுகளாக ஆயுதப் பயிற்சிகளையும் ஆயுதங்களையும் வழங்கியுள்ளன. இந்த ஆயுதங்கள் சர்வதிகாரத்தின் கைகளில் சிக்கினால் போர்கள் மூளலாம். உள்நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் குந்தகம் விளையலாம்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

தாலிபன்களின் செயல்களால் உலக நாடுகள் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, இந்தியாவுக்கு அதிக அபாயம் உண்டு எனச் சொல்லப்படுகிறது. ஏனெனில், தாலிபன்களுடன் நெருங்கிய உறவில் இருந்துவருகிறது பாகிஸ்தான். இதனால் தாலிபன்களுடன் பாகிஸ்தான் கைகோத்துக்கொண்டு இந்தியாவில் தீவிரவாத ஊடுருவல் செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு பாதிப்படையவும் வாய்ப்புள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஆசியக் கண்டத்தில் சீனாவின் கை வெகுவாக ஓங்கும் என்றும் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த இந்தியா கடுமையாக உழைத்துள்ளது. தாலிபன் அரசு தேர்தல் ஆணையத்தைக் கலைப்பதால் ஜனநாயகம் என்பது ஆப்கானிஸ்தானில் பெரிய கேள்விக்குறியாக எழும் அபாயம் உள்ளது. ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா இதுவரை சுமார் 3 பில்லியன் டாலர் செலவழித்துள்ளது. மேலும், இந்தியா ஆப்கானிஸ்தானில் சாபஹார் துறைமுகம் கட்டவும் உதவி புரிந்திருக்கிறது. இந்தத் துறைமுகம், இந்தியாவையும் மத்திய ஆசிய நாடுகளையும் பாகிஸ்தான் வழி அல்லாமல் ஆப்கானிஸ்தான் மூலம் இணைக்கும். தாலிபன்கள் எழுச்சியால் இந்தியாவின் இந்த உதவிகள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளன. தவிர, உலகின் 80 சதவிகித அபின் விதைக்கும் நிலம் தாலிபன்களின் கைகளில் இருக்கிறது. இதனால் உலகில் போதைப்பொருள் உபயோகம் அதிகமாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்றின்படி தாலிபன்களின் 60 சதவிகித ஆண்டு வருவாய் சட்டவிரோத போதைக் கடத்தல் மூலம் வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இப்போதே இந்தியாவில் போதைக் கடத்தல் வழக்குகள் அதிகரித்துள்ளன.

தாலிபன் தலைவர்கள்
தாலிபன் தலைவர்கள்
Kathy Gannon

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தாலிபன் ஆளும் ஆப்கானிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்துவருகின்றன. இதனால் தாலிபன்கள் சீனா பக்கம் சாயும் நிலையும் உருவாகியுள்ளது. பல ஆசிய நாடுகளில் சீனா தன் கால்தடத்தை கடன்கள் மூலமாகவும், உள்கட்டமைப்பு மூலமாகவும் பதித்துவருகிறது. அது ஆப்கானிஸ்தானிலும் ஏற்பட்டால் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடும். ஆப்கானிஸ்தான் சீனாவுடன் கைகோத்தால் இந்தியாவில் வர்த்தகம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. ஆப்கானிஸ்தான் தன் இறக்குமதிகளுக்கு சீனாவையும், அதைச் சார்ந்த நாடுகளையும் அணுகக்கூடும். மேலும் இந்தியா பல்வேறு பொருள்களை ஆப்கானிஸ்தான் மூலம்தான் மத்திய ஆசிய நாடுகளுக்கு இறக்குமதி செய்கிறது. இவையும் பாதிக்க கணிசமான வாய்ப்புண்டு. இத்தனை அபாயங்கள் இந்தியாவைத் தாலிபன் ஆளும் ஆப்கானிஸ்தானால் சூழ்ந்திருக்கிறது. கூடிய விரைவில் மத்திய அரசு ஆப்கானிஸ்தான் குறித்து நல்ல முடிவு எடுத்து தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் பல அபாயங்களைக் தடுக்கலாம் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.