Published:Updated:

திவாலாகும் நிலையில் இலங்கை... தீராத கடன்; ராஜபக்சே ராஜினாமா? - என்ன நடக்கிறது அண்டை நாட்டில்?!

இலங்கை அரசு
News
இலங்கை அரசு

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், நாடு திவாலாகும் அளவுக்கான பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன... என்ன பிரச்னை அங்கே..?

கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு உலக நாடுகளும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்தன... சந்தித்துவருகின்றன. மருத்துவத்துக்கும் தடுப்பூசிகளுக்கும் பெருந்தொகையை ஒதுக்கின. கொரோனவால் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை, வருவாய் இழப்பு உள்ளிட்டவற்றால் பொருளாதாரச் சிக்கல்கள் உலகம் முழுவதுமே ஏற்பட்டிருந்தன. அதிலும் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், நாடு திவாலாகும் அளவுக்கான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன.

இலங்கை
இலங்கை

உச்சம் தொட்ட பணவீக்கம்!

வேலை இழப்பு, வருவாய் இழப்பு, நாட்டின் பணவீக்கம், உணவுப் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. இதை உறுதிசெய்யும் வகையில் உலக வங்கி சில தரவுகளை வெளியிட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி, 12.1 சதவிகிதமாக இலங்கையின் பணவீக்கம் உயர்ந்திருக்கிறது. அதே டிசம்பர் நிலவரப்படி, இலங்கையின் உணவுப் பணவீக்கம் 22.1 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த உணவுப் பணவீக்கத்தால், இலங்கை மக்கள் பலரும் போதிய உணவுகளை உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டுவருவதாகச் செய்திகள் சொல்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இலங்கை முழுவதும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் தள்ளப்பட்டிருப்பதாகச் சொல்கின்றன உலக வங்கியின் தரவுகள்!

இலங்கையின் பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டிருப்பதால், அந்த நாடு திவாலாகும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு துறைகளும் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. அதிலும், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகித பங்களிப்பைக்கொண்டிருக்கும் சுற்றுலாத்துறை கொரோனாவால் முழுவதுமாக முடங்கியிருக்கிறது.

ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங்

சீனாவின் கடன் வலை!

மேலும், சீனாவிடம் அதிக அளவில் கடன்பெற்ற காரணத்தாலும் தவித்துவருகிறது இலங்கை. பல்லாயிரக்கணக்கில் இலங்கை அரசுக்கு கடனளித்திருக்கிறது சீனா. அதுபோக, சில சர்வதேச வங்கிகளிடமும் கடன்பெற்றிருக்கிறது அந்த நாடு. நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவரும் நிலையில், கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடிவருகிறது இலங்கை.

2022-ம் ஆண்டுக்குள்ளாக சுமார் 7.3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன்களை இலங்கை அரசு திருப்பிச் செலுத்தவேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஜனவரி மாதத்துக்குள்ளாக 500 மில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்தவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை இருப்பதாகத் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உணவுத் தட்டுப்பாடு - வேறு காரணம்?

இயற்கை வளங்கள் அதிகம்கொண்ட இலங்கையில், உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு அதீத கடன் பிரச்னை தவிர வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. தற்போதுள்ள இலங்கை அரசு போதிய திட்டமிடல் இல்லாமல் இயற்கை விவசாய முறையைக் கொண்டுவந்ததும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதற்கு ஒரு காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ``இயற்கை விவசாய முறையைக் கையிலெடுத்த இலங்கை அரசு, ரசாயன உரங்கள் இறக்குமதி செய்வதற்குத் தடைவிதித்தது. இதன் காரணமாக அங்கு உரத் தட்டுப்பாடு ஏற்பட்டு, விளைச்சல்கள் குறைந்தன. எனவே, உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு, இலங்கை அரசு முறையாகத் திட்டமிடாமல், இயற்கை விவசாயத் திட்டத்தை அமல்படுத்தியதும் ஒரு காரணம்'' என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

ராஜபக்சே ராஜினாமா?

நாடு திவாலாகும் நிலைக்குச் சென்றிருப்பதால், தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. பிரதமர் ராஜினாமா குறித்த செய்திகள் தீயெனப் பரவியதை அடுத்து, ``இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது'' என்று சொல்லி மறுத்திருக்கிறது இலங்கை பிரதமர் அலுவலகம்.

மகிந்த ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே

என்ன செய்யப்போகிறது இலங்கை?

இலங்கையின் நிலை குறித்துப் பேசும் சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிலர், ``சீனாவுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தது இலங்கை. இதன் காரணமாக அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உதவிகள் இலங்கைக்குக் கிடைக்காமல் இருக்கின்றன. சீனாவின் கடன் வலை, பணவீக்கம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவி இலங்கைக்கு அவசியமாகிறது. அதை நோக்கி அந்த நாடு பயணித்தால் பொருளாதார நெருக்கடியிலிருந்து சற்று வெளிவரலாம்'' என்கிறார்கள்.